மீண்டும் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - தொடர்ச்சியாக 2வது கோப்பை

பட மூலாதாரம், ANI
ஆமதாபாத்தில் நடந்த 2026 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று (மே 31) குஜராத் டைட்டன்ஸை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.
17 ஆண்டுகளில் ஒரு கோப்பை கூட வெல்லாமல் இருந்த அந்த அணி தற்போது தொடர்ச்சியாக 2 ஆண்டுகளில் 2 கோப்பைகள் வென்றிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் (2010, 2011) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (2019, 2020) அணிகளுக்குப் பிறகு தொடர்ந்து 2 ஐபிஎல் கோப்பைகள் வெல்லும் மூன்றாவது அணி ஆர்சிபி.
இந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் ரஜத் பட்டிதார் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதேசமயம், தான் டாஸ் வென்றிருந்தால் முதலில் பேட்டிங் செய்யவே தீர்மானித்திருப்பேன் என்று டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில் டாஸின்போது தெரிவித்தார்.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி பௌலர்களில் அதிகபட்சமாக ரசிக் தார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அந்த இலக்கை சேஸ் செய்த ஆர்சிபி 18 ஓவர்களில் இலக்கை எட்டியது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் எடுத்து தன் அணியின் வெற்றியை உறுதி செய்தார் விராட் கோலி.
4 ஓவர்களில் வெளியேறிய இரு முக்கிய தூண்கள்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் இருவரும் நல்லபடியாக தங்கள் இன்னிங்ஸைத் தொடங்கினார்கள். ஜேக்கப் டஃபி வீசிய முதல் ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. ஆனால், அடுத்த ஓவரில் இருந்தே ஆட்டத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது ஆர்சிபி.
இரண்டாவது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் மிகவும் சிக்கனமாகப் பந்துவீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். மூன்றாவது ஓவரை வீச ஹேசில்வுட்டை அழைத்துவந்தார் ஆர்சிபி கேப்டன் பட்டிதார். முதல் பந்தில் இறங்கி வந்து பவுண்டரி அடித்த ஷுப்மன் கில், அடுத்த பந்திலேயே அவுட்டானார். அவர் பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்ய, டாப் எட்ஜ் ஆகி பட்டிதாரால் கேட்ச் செய்யப்பட்டார். அவர் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
புவனேஷ்வர் குமார் வீசிய அடுத்த ஓவரில் டைட்டன்ஸ் அணிக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் வீசிய பவுன்சரை சாய் சுதர்ஷன் சரியாக அடிக்காமல் போக, அதுவும் டாப் எட்ஜாகி கித்தேஷ் ஷர்மாவிடம் கேட்ச் ஆனது. சாய் சுதர்ஷன் 12 ரன்கள் எடுத்தார்.
வழக்கமாக தன் ஆரம்ப கட்ட ஓவர்களில் ஸ்விங் மற்றும் சீம் இரண்டையும் பயன்படுத்தும் புவனேஷ்வர் குமார், சாய் சுதர்ஷனுக்கு எதிராக 'ஷார்ட் பால்' திட்டத்தில் உறுதியாக இருந்தார். ஆட்டத்தின் 4வது ஓவருடைய 4வது பந்தில் சாய் சுதர்ஷனை வீழ்த்திய புவனேஷ்வர், அந்த 4 பந்துகளிலேயே 2 பவுன்சர்களை வீசியிருந்தார். அவருடைய வழக்கத்துக்கு மாறான அந்தத் திட்டத்தை, மிகச் சரியாக செயல்படுத்தி தாக்கத்தை ஏற்படுத்தினார் புவனேஷ்வர் குமார்.
அதேசமயம் குஜராத் டைட்டன்ஸ் பேட்டர்கள் வழக்கத்துக்கு மாறான அணுகுமுறையை இந்தப் போட்டியில் கடைபிடித்தார்கள். எப்போதும் தரையோடு தரையாக விளையாடி பவுண்டரிகள் அடிப்பதிலேயே கவனம் செலுத்தும் அவர்கள், ஆரம்ப கட்டத்திலேயே சில பெரிய ஷாட்கள் ஆடி வெளியேறினார்கள். தான் அவுட் ஆவதற்கு முந்தைய பந்துதான் வெளியே இறங்கி வந்து பவுண்டரி அடித்திருந்தார் கில். ஆனால், அடுத்த பந்தையே தூக்கி அடித்தார். அதேபோல், சாய் சுதர்ஷன் அந்த ஓவரின் இரண்டாவது பவுன்சரை, தூக்கி அடித்து வெளியேறினார்.
ஆர்சிபி பௌலர்கள் தங்கள் திட்டத்தை மாற்றியிருந்தாலும், அது ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப மாறியது. அது அவர்களுக்குக் கைகொடுத்தது. ஆனால், குஜராத் பேட்டர்களின் அணுகுமுறை அப்படியல்ல. அது அவர்களுக்கு பெரும் பாதகமாக அமைந்தது.
சிறப்பாக செயல்பட்ட ராசிக் தார்

பட மூலாதாரம், ANI
இரண்டு முக்கிய விக்கெட்டுகளை விரைந்து இழந்துவிட்டதால் நிஷாந்த் சிந்து, ஜாஸ் பட்லர் இருவரும் நிதானமாக ஒரு பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சி செய்தார்கள். ஆனால், அந்த பார்ட்னர்ஷிப்பால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரசிக் தார் பந்துவீச்சில் வெளியேறினார் நிஷாந்த் சிந்து.
மிகவும் பொறுமையாக ஆடிக்கொண்டிருந்த பட்லர், குருனால் பாண்டியா பந்துவீச்சில் ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழந்தார். 23 பந்துகள் சந்தித்த அவரால் 19 ரன்களே எடுக்க முடிந்தது.
முக்கிய வீரர்களை விரைவாக இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணியால் விக்கெட் வீழ்ச்சியை நிறுத்தவே முடியவில்லை. அர்ஷத் கான் 15 ரன்கள், ராகுல் திவாதியா 7 ரன்கள், ஜேசன் ஹோல்டர் 7 ரன்கள், ரஷித் கான் 7 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினார்கள்.
இந்த விக்கெட் வீழ்ச்சிக்கு நடுவே தமிழ்நாட்டை சேர்ந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மட்டும் தனி ஆளாகப் போராடினார். ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய அவர், டெத் ஓவர்களில் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர், 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இந்த சீசனில் வாஷிங்டன் அடிக்கும் 3வது அரைசதம் இது.
வாஷிங்டன் சுந்தரின் ஆட்டத்தின் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணி 155/8 என்று தங்கள் இன்னிங்ஸை முடித்தது. ஆர்சிபி பௌலர்களில் ரசிக் தார் 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் & புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.
மாற்றம் தந்த முதல் 4 ஓவர்கள்
156 என்ற இலக்கை சேஸ் செய்த ஆர்சிபி அணிக்கு மிகச் சிறந்த தொடக்கம் கிடைத்தது. சிராஜ் வீசிய முதல் ஓவரில் 5 ரன்களே வந்திருந்த நிலையில், இரண்டாவது ஓவரில் அதிரடியைக் கட்டவிழ்த்தார் வெங்கடேஷ் ஐயர். ரபாடா வீசிய அந்த ஓவரில் அவர் 3 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் விளாசினார்.
ஆர்சிபி-யின் அதிரடி ஒரு முணையில் இருந்து மட்டும் வரவில்லை. சிராஜ் வீசிய 3வது ஓவரில் விராட் கோலி தன் அதிரடியைத் தொடங்கினார். அந்த ஓவரில் அவர் 2 பவுண்டரிகள் அடிக்க, வெங்கடேஷ் ஐயர் தன் பங்குக்கு ஒரு பவுண்டரியை அடித்தார்.
ஆனால், நடப்பு சாம்பியன்களின் வேகம் சற்றும் குறையவில்லை. சொல்லப்போனால் ஒவ்வொரு ஓவரிலும் அவர்கள் வேகம் கூடிக்கொண்டே இருந்தது. 4வது ஓவரின் முதல் 4 பந்துகளில் 3 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் விளாசினார் கோலி. மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் ரபாடா வீசிய ஒரு பந்தை அநாயசமாக சிக்ஸராக்கினார் கோலி.
ஓப்பனர்களின் அதிரடியின் காரணமாக 4 ஓவர்கள் முடிவிலேயே 55 ரன்கள் எடுத்துவிட்டது ஆர்சிபி. இதே கட்டத்தில் 30 ரன்களுக்கு 2 பெரிய விக்கெட்டுகளை இழந்திருந்தது டைட்டன்ஸ். இரண்டு இன்னிங்ஸ்களின் முதல் 4 ஓவர்களிலும் கிடைத்த நல்ல தொடக்கம் ஆர்சிபி-யின் வெற்றியின் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
வென்று கொடுத்த விராட் கோலி

பட மூலாதாரம், ANI
ஐந்தாவது ஓவரில் டைட்டன்ஸுக்காக முதல் விக்கெட்டை வீழ்த்தினார் சிராஜ். காலில் அடிபட்டு சில பந்துகளாக தடுமாறிக்கொண்டிருந்த வெங்கடேஷ் ஐயர் 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
6வது ஓவரில் படிக்கல் விக்கெட்டை வீழ்த்தினார் ககிஸோ ரபாடா. படிக்கல் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இது இந்த சீசனில் ரபாடா வீழ்த்தும் 29வது விக்கெட். இதன் மூலம் இந்த சீசனுக்கான பர்ப்பிள் கேப்பை உறுதி செய்தார் ரபாடா.
பவர்பிளே முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்தது ஆர்சிபி.
சவாலே இல்லாமல் இலக்கை நோக்கி சென்றுகொண்டிருந்த ஆர்சிபி அணிக்கு வேகத்தடையாக அமைந்தார் ரஷித் கான். கடந்த இரண்டு போட்டிகளிலும் விக்கெட்டே வீழ்த்தாமல் ரன்களை வாரி வழங்கிய ரஷித், இந்தப் போட்டியில் தான் வீசிய முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பட்டிதார் (15 ரன்கள்), குருனால் பாண்டியா (1 ரன்) இருவரின் விக்கெட்டையும் ரஷித் வீழ்த்த ஆட்டத்தில் பரபரப்பு கூடியது.
ஆனால், முக்கியமான அந்தத் தருணத்தில் கோலியுடன் இணைந்து ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்தார் டிம் டேவிட். இந்த ஜோடி 4.1 ஓவர்களில் 41 ரன்கள் எடுத்து ராயல் சேலஞ்சர்ஸுக்கு நம்பிக்கை கொடுத்தது.
தொடர்ந்து நிலைத்து நின்று விளையாடியிருந்த விராட் கோலி, வேகமாகவும் விளையாடினார். அதனால் 25 பந்துகளிலேயே அவர் தன்னுடைய அரைசதத்தை நிறைவு செய்தார். ஐபிஎல் அரங்கில் விராட் கோலியின் அதிவேக அரைசதம் இதுதான். ஒருகட்டத்தில் காலில் வலி ஏற்பட்டு ஓடத் தடுமாறியபோதும் அவர் உறுதியாக நின்று விளையாடினார்.
டிம் டேவிட் 24 ரன்களில் வெளியேறியபோதும், கடைசியில் ஜித்தேஷ் ஷர்மாவுடன் இணைந்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார் கோலி. 18வது ஓவரின் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து ஆர்சிபி-யின் இரண்டாவது ஐபிஎல் கோப்பையை உறுதி செய்தார் விராட் கோலி. அவர் 75 ரன்கள் (42 பந்துகளில்) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் தொடர்ந்து 2 ஐபிஎல் கோப்பைகளை வென்ற மூன்றாவது அணி பெருமையைப் பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.
பிளேயிங் லெவனில் யார்?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
இந்தப் போட்டிக்கான ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வெங்கடேஷ் ஐயர் இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்டார்.
பிளேயிங் லெவன்: விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார் (கேப்டன்), டிம் டேவிட், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), குருனால் பாண்டியா, ரொமாரியோ ஷெபர்ட், புவனேஷ்வர் குமார், ஜேக்கப் டஃபி, ராசிக் தார், ஜாஷ் ஹேசில்வுட்.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: வெங்கடேஷ் ஐயர், கனிஷ்க் சௌஹான், ஸ்வப்னில் சிங், அபிநந்தன் சிங், ஜோர்டன் காக்ஸ்.
குஜராத் டைட்டன்ஸ்
இந்தப் போட்டிக்கான டைட்டன்ஸ் அணியில் 1 மாற்றம் செய்யபப்ட்டிருக்கிறது. ஸ்பின்னர் சாய் கிஷோர் நீக்கப்பட்டு, இடது கை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷத் கான் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
பிளேயிங் லெவன்: ஷுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், ஜேசன் ஹோல்டர், ராகுல் திவாதியா, ரஷித் கான், அர்ஷத் கான், ககிஸோ ரபாடா, மொஹம்மது சிராஜ்,
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: சாய் கிஷோர், அனுஜ் ராவத், கிளென் ஃபிலிப்ஸ், பிரசித் கிருஷ்ணா, குமார் குஷாக்ரா.
இறுதிப் போட்டிக்கு வந்த பாதை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
லீக் சுற்றில் விளையாடிய 14 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்றது ஆர்சிபி. கடந்த சீசன் அனைத்து 'அவே' ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த ஆர்சிபி, இம்முறை ஹோம் மைதானங்களில் சிறப்பாக ஆடியது. சின்னசாமி மைதானத்தில் விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றிகள் பெற்ற அந்த அணி, ராய்ப்பூரில் ஆடிய 2 போட்டிகளிலுமே வெற்றி பெற்றது.
புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த ஆர்சிபி, குவாலிஃபயர் 1 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
குஜராத் டைட்டன்ஸ்
டைட்டன்ஸ் அணியுமே ஆர்சிபி போல் லீக் சுற்றில் 9 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளை சந்தித்தது. முதல் 7 போட்டிகளில் 3 வெற்றிகள் மட்டுமே பெற்றிருந்த அந்த அணி, கடைசி 7 லீக் போட்டிகளில் 6 வெற்றிகள் பெற்றது. அந்த அணியின் கடைசி 3 லீக் சுற்று வெற்றிகள் 75 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் வந்தவை.
குவாலிஃபயர் 1 போட்டியில் ஆர்சிபி-யிடம் படுதோல்வி அடைந்த டைட்டன்ஸ், குவாலிஃபயர் 2 போட்டியில் 215 என்ற இலக்கை எளிதாக சேஸ் செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

பட மூலாதாரம், ANI
இறுதிப் போட்டியில் இதற்கு முன்
ஆர்சிபி, டைட்டன்ஸ் இரு அணிகளுமே இதற்கு முன் பல இறுதிப் போட்டிகளில் மோதியிருக்கின்றன. இரு அணிகளுமே தலா 1 ஃபைனலில் வெற்றி பெற்றிருந்தாலும், தோல்விகளையும் சந்தித்திருக்கின்றன. இந்த அணிகள் பங்கேற்ற இறுதிப் போட்டியின் முடிவுகள்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
2009 - டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கெதிராக 6 ரன்களில் தோல்வி
2011 - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 58 ரன்களில் தோல்வி
2016 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிராக 8 ரன்களில் தோல்வி
2025 - பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக 6 ரன்களில் வெற்றி
இதுவரை விளையாடிய 4 இறுதிப் போட்டிகளில் 1 வெற்றியையும், 3 தோல்விகளையும் சந்தித்திருக்கிறது ஆர்சிபி. அந்த ஒரு வெற்றி முதலில் பேட்டிங் செய்தபோதும், 3 தோல்விகள் சேஸ் செய்தபோதும் வந்திருக்கின்றன. ஆனால், அந்த வரலாற்றை இந்த முறை மாற்றியிருக்கிறது ஆர்சிபி.
குஜராத் டைட்டன்ஸ்
2022 - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 7 விக்கெட்டுகளில் வெற்றி
2023 - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 5 விக்கெட்டுகளில் தோல்வி (DLS முறைப்படி)
2 இறுதிப் போட்டிகளில் தலா 1 வெற்றியும் தோல்வியும் பெற்றிருக்கும் டைட்டன்ஸின் முடிவுகள் ஆர்சிபி அணிக்கு நேரெதிராக அமைந்திருக்கின்றன. அந்த அணி சேஸ் செய்தபோது வெற்றியும், முதலில் பேட்டிங் செய்தபோது தோல்வியும் சந்தித்திருக்கிறது.
இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற அணிகள்
கடந்த 18 ஐபிஎல் சீசன்களில் சாம்பியன் பட்டங்கள் வென்ற அணிகளின் பட்டியல்.
- 2008 - ராஜஸ்தான் ராயல்ஸ்
- 2009 - டெக்கான் சார்ஜர்ஸ்
- 2010 - சென்னை சூப்பர் கிங்ஸ்
- 2011 - சென்னை சூப்பர் கிங்ஸ்
- 2012 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- 2013 - மும்பை இந்தியன்ஸ்
- 2014 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- 2015 - மும்பை இந்தியன்ஸ்
- 2016 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
- 2017 - மும்பை இந்தியன்ஸ்
- 2018 - சென்னை சூப்பர் கிங்ஸ்
- 2019 - மும்பை இந்தியன்ஸ்
- 2020 - மும்பை இந்தியன்ஸ்
- 2021 - சென்னை சூப்பர் கிங்ஸ்
- 2022 - குஜராத் டைட்டன்ஸ்
- 2023 - சென்னை சூப்பர் கிங்ஸ்
- 2024 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- 2025 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
- 2026 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































