'எலிமருந்து கலந்த தர்பூசணி' - 4 பேர் மரணத்தில் இன்னும் மர்மம் விலகாதது ஏன்?

- எழுதியவர், கீதா பாண்டே, திபாலி ஜக்தாப் மற்றும் அல்பேஷ் கர்கரே
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
ஓர் இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தங்களது வீட்டில் இறந்து கிடந்து மூன்று வாரங்கள் ஆகப்போகும் நிலையில், உண்மையில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ளும் இடத்தை இன்னும் நெருங்கவில்லை என்று பிபிசியிடம் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்துல்லா, அவரது மனைவி நஸ்ரின் மற்றும் அவர்களது இரு மகள்களான ஆயிஷா மற்றும் ஜைனப் ஆகியோர் ஏப்ரல் 25 அன்று மும்பையின் பைதோனி பகுதியில் உள்ள தங்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்தச் செய்தி வெளியானவுடன், இந்திய ஊடகங்கள் இந்த சம்பவத்தை விரைவாக "தர்பூசணி மரணங்கள்" என்று அழைத்தன.
அக்குடும்பத்தினர் இறப்பதற்கு முன்பு கடைசியாகச் சாப்பிட்ட உணவு தர்பூசணி என்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
இந்த மரணங்கள் குறித்து இந்தியாவில் ஊடகங்கள் இடைவிடாது செய்திகளை வெளியிட்டன. மிகவும் பிரபலமான கோடைகாலப் பழங்களில் ஒன்றான இதைச் சாப்பிடும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு பல தலைப்புச்செய்திகள் அறிவுறுத்தின.
அந்தப் பழத்தில் கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்றும், தம்பதியினரும் அவர்களது மகள்களும் இரவில் தாமதமாக அதை உட்கொண்டதால் உயிரிழந்தனர் என்றும் செய்திகள் வெளியாகின. இதன் விளைவாக மும்பையின் பழச் சந்தைகளில் தர்பூசணிக்கான தேவை திடீரெனக் குறைந்து, அதன் விலையும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.
அதே சமயம், இந்த மரணங்கள் தற்செயலான விபத்தா அல்லது திட்டமிட்டு செய்யப்பட்டவையா என்பது குறித்தும் பல ஊகங்கள் எழுந்தன.
கடந்த வாரம் மும்பை காவல்துறை வெளியிட்ட தகவலின்படி, தடயவியல் சோதனைகளில் இந்த குடும்பத்தினர் 'ஜிங்க் பாஸ்பைடு' மூலம் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இது பொதுவாக எலிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் ஒரு மிகக் கடுமையான நச்சுத்தன்மை கொண்ட ரசாயனமாகும். இந்த நச்சு அவர்களின் உடல் உறுப்புகளிலும், மீதமிருந்த தர்பூசணிப் பழத்திலும் கண்டறியப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆனால் இந்தத் தகவல்கள் வெளியான போதிலும், இந்த வழக்கு இன்னும் தீர்க்கப்படவில்லை. அத்துடன் பல கேள்விகள் இன்னும் விடைதெரியாத மர்மமாகவே நீடிக்கின்றன.
புதன்கிழமையன்று, மும்பை காவல்துறை வட்டாரங்கள் பிபிசியிடம், தர்பூசணிக்குள் விஷம் எவ்வாறு சென்றது அல்லது இதற்கான பின்னணி நோக்கம் என்ன என்பது குறித்து இன்னும் தெளிவு பிறக்கவில்லை என்று தெரிவித்தன.
"நாங்கள் இன்னும் ஆதாரங்களைச் சேகரித்து வருகிறோம், சாத்தியமான அனைத்து கோணங்களிலும் விசாரணையை முன்னெடுத்து வருகிறோம்," என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"இது கொலையா, விபத்து மரணமா அல்லது தற்கொலையா என்ற எந்தச் சாத்தியக்கூறையும் நாங்கள் இன்னும் நிராகரிக்கவில்லை," என்று அவர் மேலும் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
என்ன நடந்தது?
தெற்கு மும்பையின் பைதோனி பகுதியில் உள்ள ஒரு பழைய கட்டடத்தின் முதல் தளத்தில் இந்த குடும்பத்தினர் வசித்து வந்தனர்.
இந்த மரணங்கள் குறித்து காவல்துறை முதன்முதலில் அளித்த விளக்கத்தில், சம்பவத்தன்று இரவு அக்குடும்பத்தினர் தங்களது உறவினர்களுக்கு இரவு விருந்து அளித்ததாகவும், அப்போது அவர்கள் பிரியாணி சாப்பிட்டதாகவும் தெரிவித்தனர்.
விருந்தினர்கள் இரவு 10:30 மணியளவில் அங்கிருந்து சென்றனர். சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த குடும்பத்தினர் தர்பூசணி சாப்பிட்டுள்ளனர். அதை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே அவர்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
"அவர்கள் அனைவருக்கும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் ஜேஜே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக நான்கு பேருமே உயிரிழந்தனர்," என்று துணை காவல்துறை ஆணையர் பிரவின் முந்தே ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அவர்கள் உடல்நலக்குறைவால் அவதிப்படுவதைக் கேள்விப்பட்டு, அதே கட்டடத்தின் நான்காவது மாடியில் வசிக்கும் டாக்டர் ஜைத் குரேஷி உள்ளிட்ட அண்டை வீட்டார் அக்குடும்பத்திற்கு உதவ விரைந்தனர்.
"அந்த நான்கு பேரில் இளையவர் சுவாசிக்க சிரமப்படுவதைக் கவனித்தேன். அவருக்கு நான் சிபிஆர் அளித்தேன். இருப்பினும், அவரது நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்," என்று டாக்டர் குரேஷி பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.
"மற்ற மூவரும் உள்ளூர் மருத்துவமனையிலிருந்து ஜேஜே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்," என்று கூறிய அவர், அவர்களும் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
அவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் இன்னும் வெளியாகவில்லை.

உணவில் கலப்படம் ஏதேனும் உள்ளதா என்பதைச் சரிபார்க்க, தர்பூசணி தோல்கள் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களையும் கைப்பற்றியதாகக் காவல்துறை தெரிவித்தது. அவர்களின் உடல்நலன் குன்றுவதற்கு முன்பு கடைசியாகச் சாப்பிட்ட உணவு என்பதால், புலனாய்வாளர்களின் கவனம் அந்தப் பழத்தின் மீது திரும்பியது.
கடந்த வாரம் மும்பையில் உள்ள தடயவியல் அறிவியல் ஆய்வகம் (எஃப்எஸ்எல்) அளித்த அறிக்கை, இந்த வழக்கின் போக்கை தர்பூசணியிலிருந்து ஜிங்க் பாஸ்பைடு நோக்கி மாற்றியது.
"உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகளில், குறிப்பாக கல்லீரல், சிறுநீரகம் மற்றும் மண்ணீரலில் கண்டறியப்பட்டது. மேலும் வயிற்றுப் பகுதி, பித்தப்பை நீர் மற்றும் வயிற்று கொழுப்பு ஆகியவற்றின் மாதிரிகளில் அந்த ரசாயனம் கண்டறியப்பட்டது," என்று எஃப்எஸ்எல் இயக்குனர் டாக்டர் விஜய் தாக்ரே பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.
"தர்பூசணி மாதிரியிலும் ஜிங்க் பாஸ்பைடு கண்டறியப்பட்டது," என்றும் அவர் கூறினார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் முந்தே, "விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட தர்பூசணி மாதிரிகளில் இந்த ரசாயனம் கண்டறியப்பட்டது. ஆனால் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட மற்ற எந்த உணவு மாதிரிகளிலும் இது காணப்படவில்லை," என்பதை உறுதிப்படுத்தினார்.
தொடரும் குழப்பம்
இந்த குடும்பத்தினர் வசித்து வந்த கட்டடத்தில் எலித் தொல்லை இருந்ததாக 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனை ஒழிக்க பல குடும்பங்கள் எலி விரட்டிகள், விஷக் கட்டிகள் மற்றும் பசையுள்ள அட்டைகளைப் பயன்படுத்துவதாக அந்தச் செய்தி கூறுகிறது.
எலிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் சில விஷங்களில் ஜிங்க் பாஸ்பைடு உள்ளது. இது "மிகவும் கடுமையான நச்சுத்தன்மை கொண்ட ஒரு ரசாயனக் கலவை" என்று மும்பையைச் சேர்ந்த மருத்துவர் பூஷன் ரோக்டே கூறுகிறார்.
"இந்த ரசாயனம் உடலுக்குள் சென்றாலோ அல்லது ஈரப்பதத்துடன் தொடர்பு கொண்டாலோ, அது பாஸ்பைன் வாயுவை உருவாக்குகிறது. இது உடலின் செல்கள் ஆக்சிஜனைப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது மற்றும் பல உறுப்புகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
வாந்தி, நெஞ்சு இறுக்கம், மூச்சுத் திணறல் மற்றும் அதிர்ச்சி போன்றவை இதன் அறிகுறிகளாகும். மிகச் சிறிய அளவில் உட்கொண்டாலும் இது உயிரிழப்பை ஏற்படுத்தும்," என்று டாக்டர் ரோக்டே விளக்கினார்.
புதன்கிழமையன்று, ஒரு மூத்த காவல்துறை அதிகாரி பிபிசியிடம், எலி விஷம் எவ்வாறு பழத்திற்குள் சென்றது என்பது தங்களுக்கு இன்னும் புதிராகவே இருப்பதாகத் தெரிவித்தார்.
"உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார் மற்றும் உடன் பணிபுரிபவர்கள் உட்பட 40-50 பேரிடம் நாங்கள் விசாரணை நடத்தியுள்ளோம். இந்த வழக்கைத் தீர்ப்பதற்காகப் பல குழுக்களை அமைத்துள்ளோம். இதற்கான பதில்களைக் கண்டுபிடிக்கும் வரை நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்," என்று அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

























