திருச்சி: 'தலித்' கிறித்தவர் உடலை அடக்கம் செய்வதில் என்ன சர்ச்சை? 3 நாட்களுக்குப் பிறகு அடக்கம்

பட மூலாதாரம், Handout
"அது கும்பகோணம் மறைமாவட்டத்துக்குச் சொந்தமான கல்லறை. அங்கு பட்டியல் கிறிஸ்தவர்களைப் புதைப்பதற்கு அனுமதியில்லை. இதை எதிர்த்து என் தந்தை நீதிமன்ற உத்தரவை வாங்கினார். ஆனால், அவரைப் புதைப்பதற்கே போராட வேண்டி இருந்தது" என்கிறார் திருச்சி, துறையூரில் வசிக்கும் ராஜ் நோபிலி.
இவரது தந்தையும் ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியருமான ராஜூ, கடந்த 17 ஆம் தேதி உயிரிழந்தார். முசிறி சார்-ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு திங்கள்கிழமை அதிகாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம், துறையூரில் கோட்டப்பாளையம் ஊராட்சி அமைந்துள்ளது. விவசாயம் பிரதான தொழிலாக உள்ள இந்த ஊராட்சியில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பட்டியல் கிறிஸ்தவ குடும்பங்கள் உள்ளன.
கோட்டப்பாளையம் ஊராட்சியில் மிகப் பழமையான புனித மேரி மக்தலீனா தேவாலயம் அமைந்துள்ளது. கும்பகோணம் மறைமாவட்டத்தின் கட்டுப்பாட்டில் தேவாலயம் உள்ளது.
திருவிழாவுக்கு வரி வசூலிப்பது, நிர்வாகிகளை நியமிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் பட்டியல் கிறிஸ்தவ மக்கள் புறக்கணிக்கப்படுவதாக, அவ்வப்போது கோட்டப்பாளையம் ஊராட்சியில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இந்தநிலையில், கோட்டப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜூ என்பவர் வயது முதிர்வு காரணமாக கடந்த 17 ஆம் தேதி உயிரிழந்தார். அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற ராஜூவுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
அவர்களில் ஒருவரான ராஜ் நோபிலி பிபிசி தமிழிடம், "கோட்டப்பாளையத்தில் அடக்கம் செய்வதற்கு மறைமாவட்டம் சார்பில் நிலத்தை ஒதுக்கியபோது, பிற கிறிஸ்தவர்கள் பெரிய இடமாக பார்த்து வாங்கிக் கொண்டனர். பட்டியல் கிறிஸ்தவ மக்களுக்கு இடுகாடு ஒதுக்கப்பட்டாலும், அங்கு போதிய இடவசதியில்லை" என்கிறார்.
ஊருக்குள் சுமார் 0.55 ஏக்கர் பரப்பளவில் பிற கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் இடுகாடு ஒன்று உள்ளது. அதற்கு சுமார் 100 அடி தொலைவில் பட்டியல் கிறிஸ்தவ மக்கள் பயன்படுத்தி வந்த இடுகாடு ஒன்று உள்ளது.
பட்டியல் கிறிஸ்தவ மக்கள் பயன்படுத்தும் இடுகாட்டில் இடவசதி குறைவாக இருந்ததால் கடந்த சில ஆண்டுகளாக உடல்களை அடக்கம் செய்வதற்குப் பெரிதும் சிரமப்பட்டதாகக் கூறுகிறார், ராஜ் நோபிலி.

பட மூலாதாரம், Handout
"இதை எதிர்த்து துறையூர் உரிமையியல் நீதிமன்றத்தில் தாஸபிரகாஷ் மற்றும் தனது தந்தை ராஜூ ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்" என அவர் குறிப்பிட்டார்.
துறையூர் உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில் 27.08.2024 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த தீர்ப்பில், 'கோட்டப்பாளையம் கிராமத்தில் உள்ள இடுகாட்டை பட்டியல் சாதி மக்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு உரிமை உள்ளது. அவ்வாறு உடலை அடக்கம் செய்யும்போது, எதிர் தரப்பினர் எந்தவித இடையூறும் செய்யக் கூடாது' எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
"கோட்டப்பாளையத்தில் நீண்டகாலமாக பட்டியல் கிறிஸ்தவ மக்கள் மீது ஒடுக்குமுறைகள் காட்டப்பட்டு வருகின்றன. அதை எதிர்த்து என் தந்தை போராடியதால், நீதிமன்றத் தீர்ப்பின்படி அதே கல்லறையில் அவரைப் புதைப்பது என முடிவு செய்தோம்" என்கிறார், ராஜ் நோபிலி.
"ஆனால், அது அவ்வளவு எளிதானதாக இல்லை" எனக் கூறுகிறார், வழக்கறிஞர் அம்பேத்குமார். இவர் பட்டியல் கிறிஸ்தவ மக்களின் இடுகாடு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் போராட்டக் குழு ஒன்றை அமைத்துள்ளார்.
"ராஜூவின் உடலை நீதிமன்றத் தீர்ப்பின்படி இடுகாட்டில் புதைப்பதற்கு பிற கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 'இது பொது இடுகாடு கிடையாது' என அவர்கள் கூறினர். அவர்களிடம் பேசி எந்தப் பலனும் கிடைக்கவில்லை" என பிபிசி தமிழிடம் அம்பேத்குமார் குறிப்பிட்டார்.
இடுகாடு பிரச்னைக்குத் தீர்வு காணுமாறு முசிறி சார்-ஆட்சியர் சுஷ்ரீ சுவாங்கி குந்தியாவிடம் பட்டியல் கிறிஸ்தவ மக்கள் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இதையடுத்து, 19 ஆம் தேதி இரு தரப்பினரையும் அழைத்து வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
"ஞாயிற்றுக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையின்போது 'தங்கள் இடுகாட்டில் ராஜூவின் உடலை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க மாட்டோம்' என எதிர்த் தரப்பில் கூறிவிட்டனர். வழக்கமான முறைப்படி செயல்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறினர்" என அம்பேத்குமார் தெரிவித்தார்.
'நாங்களும் கிறிஸ்தவர்கள் தான்'

பட மூலாதாரம், Handout
தொடர்ந்து பேசிய அம்பேத்குமார், "தேவாலயம் தரப்பில் எதிர்ப்பு காட்டியவர்களிடம், 'நாங்களும் கிறிஸ்தவர்கள்தான். எங்களையும் புதைக்க விடுங்கள்' எனக் கோரிக்கை வைத்தோம். அவர்கள் கேட்பதாக இல்லை" என்கிறார்.
முசிறி சார்-ஆட்சியர் தலைமையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்தில், 'நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கோட்டப்பாளையம் கிராமத்தில் உள்ள இடுகாட்டை பட்டியல் சாதி மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்' என முடிவெடுக்கப்பட்டது.
'இதுதொடர்பாக, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் பட்சத்தில் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' எனவும் சார் ஆட்சியர் நடத்திய கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
"சார்-ஆட்சியர் நடத்திய கூட்டம் இரவு முடிவுக்கு வந்தது. இதையடுத்து, கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யும் பணிகள் நடந்தன. இறந்தவர் உடலை அடக்கம் செய்வதற்கு அதிகாலை ஆகிவிட்டது" என, பிபிசி தமிழிடம் பேசிய துறையூர் தாசில்தார் சித்ரா தெரிவித்தார்.

பட மூலாதாரம், Handout
'தனி ஆலயம்... தனி கல்லறை'
"தேவாலயத்தில் பல ஆண்டுகளாக சாதிய ஒடுக்குமுறைகள் உள்ளன. எவ்வளவு படித்திருந்தாலும் பாகுபாடு காட்டப்படுவதால் மிகவும் வேதனையில் இருக்கிறோம்" என்கிறார், ராஜ் நோபிலி.
கோட்டப்பாளையம் கிராமத்தில் பட்டியல் கிறிஸ்தவ மக்களுக்கு புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இதைக் குறிப்பிட்டுப் பேசும் ராஜ் நோபிலி, "இந்த ஆலயத்தை முன்வைத்து, ' தனியாக ஆலயம் உள்ளது. தனி கல்லறை உள்ளது. அதனால் புனித மேரி மக்தலீனா ஆலயத்துக்கு வரக் கூடாது' என்கின்றனர்" எனக் கூறுகிறார்.
கோட்டப்பாளையம் கிராமத்தில் உள்ள பட்டியல் கிறிஸ்தவ மக்களுக்கான இடுகாடும் பிற கிறிஸ்தவர்களுக்கான இடுகாடும் கும்பகோணம் மறை மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
'சரிசெய்து வருகிறோம்' - பங்குத் தந்தை
பட்டியல் சாதி கிறிஸ்தவர்கள் எழுப்பும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, புனித மேரி மக்தலீனா தேவாலயத்தின் பங்குத் தந்தை மைக்கேல்ராஜிடம் பிபிசி தமிழ் பேசியது.
"காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகள் மாறிவருகின்றன. அந்தவகையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேவாலயத்தைப் பொறுத்தவரை தீண்டாமை இல்லை. அவ்வாறு யார் பார்த்தாலும் அதைக் குற்றமாகவே கருதுகிறோம்" எனக் கூறுகிறார்.
தற்போது கல்லறை பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறும் மைக்கேல் ராஜ், "அவரது உடலை அதே கல்லறையில் அடக்கம் செய்துவிட்டனர். தற்போது யாரும் எதிர்ப்பு காட்டவில்லை. அனைவரையும் சமமாகவே பார்க்கிறோம். திருச்சபையின் அணுகுமுறையில் எந்தவித பாகுபாடும் இல்லை" என்கிறார்.
தேவாலயத்தில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாகக் கூறும் குற்றச்சாட்டு குறித்துக் கேட்டபோது, "சில விஷயங்கள் கடந்த காலங்களில் நடந்தது உண்மை தான். அதை சரிசெய்து வருகிறோம். 'பாரபட்சம் பார்க்கக் கூடாது' என திருச்சபை சார்பாக கூறியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
"தற்போது பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம். வரும் காலங்களில் பிரச்னை வருவதற்கு வாய்ப்பில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.
'சாதிப் பிரச்னையாக மாறிவிட்டது' - வட்டாட்சியர்
"ஒருகட்டத்தில் இந்த விவகாரம் சாதிப் பிரச்னையாக மாறிவிட்டது" என்கிறார், துறையூர் வட்டாட்சியர் சித்ரா.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பட்டியல் கிறிஸ்தவ மக்களுக்கு சாதகமாக நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு காவல்துறை பாதுகாப்புடன் உடலை அடக்கம் செய்தோம். இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை" எனவும் அவர் தெரிவித்தார்.
"இதில் சாதிரீதியாக எந்தவித பாகுபாடும் காட்டுவதற்கு எதுவும் இல்லை" என வட்டாட்சியர் சித்ரா கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































