நேரலை, இரானுடன் ஒப்பந்தம் செய்வது பற்றி டிரம்ப் கூறியது என்ன?

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. மு.க. ஸ்டாலின், விஜய் வேட்பு மனு தாக்கல்

    வேட்பு மனு தாக்கல் செய்த மு.க. ஸ்டாலின், விஜய்

    திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30) தொடங்கியது. முதல்நாளான இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    கொளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் சந்தான கிருஷ்ணன், தவெக சார்பில் வி.எஸ். பாபு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    தொகுதி மறுசீரமைப்பின்படி கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து 2011, 2016, 2021 என மூன்று சட்டப்பேரவை தேர்தல்களிலும் இத்தொகுதியில் இருந்து வெற்றி பெற்றிருந்தார் மு.க.ஸ்டாலின்.

    மு.க.ஸ்டாலின்

    பட மூலாதாரம், ANI

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பெரம்பூர் தொகுதியில் திமுக சார்பில் ஆர்.டி.சேகர், அதிமுக கூட்டணியில் பாமக சார்பாக திலகவதியும் போட்டியிடுகின்றனர்.

    வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான இன்று பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவருகின்றனர். திமுக சார்பில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் மா. சுப்பிரமணியன், வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    • வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் : 06-04-2026
    • வேட்புமனு பரிசீலனை : 07-04-2026
    • வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் : 09-04-2026
    • வாக்குப் பதிவு நாள் : 23-04-2026
    • வாக்கு எண்ணிக்கை : 04-05-2026
  2. இரானுடன் ஒப்பந்தம் செய்வது பற்றி டிரம்ப் கூறியது என்ன?

    டொனால்ட் டிரம்ப்

    பட மூலாதாரம், Nathan Howard/Getty Images

    அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இருப்பினும், பின்னர் அவர் "அப்படி ஒரு ஒப்பந்தம் ஏற்படாமலும் போகலாம்" என்றும் தெரிவித்தார்.

    அமெரிக்க அதிபருக்கான ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப், "நீங்கள் கவனித்துப் பார்த்தால், அங்குள்ள (இரானில்) ஆட்சியாளர்கள் ஏற்கெனவே மாறிவிட்டனர். ஏனெனில், முதலில் இருந்து ஆட்சியாளர்கள் முற்றிலும் மறைந்துவிட்டனர், அழிக்கப்பட்டுவிட்டனர், அதில் தொடர்புடைய அனைவரும் இறந்துவிட்டனர்," என்று கூறினார்.

    "இரண்டாவது ஆட்சியில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் இறந்துவிட்டனர். தற்போது அமைந்துள்ள மூன்றாவது அரசில் நாம் முற்றிலும் மாறுபட்ட நபர்களுடன் தொடர்புகொண்டு வருகிறோம். இது முற்றிலும் மாறுபட்ட ஒரு குழுவாகும்; எனவே, இதை நான் ஒரு அதிகார மாற்றம் என்றே கருதுகிறேன்."

    "அங்கு ஒரு அதிகார மாற்றம் (change of guard) நிகழ்ந்திருப்பதாக நான் கருதுகிறேன்; இதைவிடச் சிறந்ததாக வேறு எதையும் செய்துவிட முடியாது," என்று டிரம்ப் கூறினார்.

    இரானுடனான ஒப்பந்தம் குறித்துப் பேசிய டிரம்ப், "நாம் அவர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவோம் என்று நான் கருதுகிறேன்—அது ஏறக்குறைய உறுதியானது என்றே சொல்லலாம்; ஆனால், ஒருவேளை அது நிகழாமலும் போகலாம்," என்றார்.

    மேலும் அவர், "இரானைப் பொறுத்தவரை, எதையும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது; ஏனெனில், நாம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்; ஆனால், சில சமயங்களில் நாம் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களைத் தகர்க்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது," என்று கூறினார்.

    இரானுடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில், இரானும் அமெரிக்காவும் தங்கள் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளதாகப் பாகிஸ்தான் கூறியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தாங்கள் பங்கேற்கப்போவதை இரானோ அல்லது அமெரிக்காவோ இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனவா என்பது குறித்துத் தெளிவுபடுத்தப்படவில்லை.

  3. பிகார் சட்ட மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார்

    நிதிஷ் குமார்

    பட மூலாதாரம், Santosh Kumar/Hindustan Times via Getty Images

    பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் அம்மாநில சட்ட மேலவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

    சட்ட மேலவைத் தலைவர் அவதேஷ் நாராயண் சிங் இதுகுறித்துத் தெரிவிக்கையில், "நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இனி அடுத்தகட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்," என்று கூறினார்.

    நிதிஷ் குமாரின் ராஜினாமா கடிதத்துடன், சட்ட மேலவை உறுப்பினர் (MLC) சஞ்சய் காந்தி சட்ட மேலவைக்கு வருகை தந்தார்.

    நிதிஷ் குமார் சமீபத்தில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியலமைப்பு விதிகளின்படி, அவர் மார்ச் 30-க்குள் சட்ட மேலவை உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டியது அவசியமாக இருந்தது.

    நிதிஷ் குமார் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகவில்லை; தற்போதைக்கு அவர் முதலமைச்சராகவே தொடர்கிறார்.

    நிதிஷ் குமார் 2006-ஆம் ஆண்டு முதல் பிகார் சட்ட மேலவையின் உறுப்பினராக நீடித்தார்.

    2024-ஆம் ஆண்டில், நிதிஷ் குமார் தொடர்ந்து நான்காவது முறையாக சட்ட மேலவை உறுப்பினரானார்; அவரது பதவிக்காலம் 2030-ஆம் ஆண்டில் நிறைவடைய இருந்தது.

    ஆனால் அதற்கு இடைப்பட்ட காலத்தில், 2026-ஆம் ஆண்டு மார்ச் 16-ஆம் தேதி அவர் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  4. வணக்கம் நேயர்களே!

    இன்று (30-03-2026) மதியம் வரையிலும் நேரலை பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விவரங்களை சுருக்கமாக தொகுத்து அளிப்பது நந்தினி வெள்ளைச்சாமி.