‘எதிர் நிலைப்பாடு எடுத்த அதிமுக நிர்வாகிகள் பதவி பறிப்பு’- எடப்பாடி பழனிசாமி
தமிழக சட்டப்பேரவையில் இன்று (மே 13) நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், சி.வி. சண்முகம் உள்ளிட்ட அதிமுகவின் 25 சட்டப்பேரவை உறுப்பினர்கள், “விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.
ஆனால், “அதிமுகவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 47 பேரும் தவெக அரசை எதிர்த்துதான் வாக்களிப்பார்கள்." என்று எடப்பாடி பழனிசாமி தனது சட்டப்பேரவை உரையில் குறிப்பிட்டிருந்தார்.
சி.வி.சண்முகம் உள்ளிட்ட 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த நிலையில், நத்தம் இரா. விசுவநாதன், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி. விஜயபாஸ்கர் காமராஜ் ஆகிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்பட பலரின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்ய முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்
பட மூலாதாரம், CMO
மருத்துவப் படிப்புகளில் நீட் அடிப்படையிலான சேர்க்கைகளை ரத்து செய்யவும், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் (இளநிலை) 2026 நுழைவுத்தேர்வை, வினாத்தாள் கசிவு புகார்களைத் தொடர்ந்து தேசியத் தேர்வு முகமை (என்.டி.ஏ.) ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (மே 13) நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் அரசுக்கு ஆதரவாக 144 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.
இந்நிலையில் இந்த வாக்கெடுப்பு குறித்தும், தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்கட்சிகள் முன்வைத்த விமர்சனங்கள் குறித்தும் எக்ஸ் தள அறிக்கை ஒன்றின் மூலம் முதலமைச்சர் விஜய் பதிலளித்துள்ளார்.
“நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசின் மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்த அனைத்து இயக்கங்களைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று முதலமைச்சர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“பெரும்பான்மையான தமிழக மக்களின் ஆதரவை நாம் பெறவில்லை என்ற அரதப் பழைய, புளித்துப்போன வாதத்தை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் வழக்கம் போலான அவரது பாணியில் எடுத்து வைத்தார். எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான தி.மு.க.வுக்கு எப்போதும் யதார்த்தம் புரியவே போவதில்லை” என்றும் விஜய் விமர்சித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், “கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட த.வெ.க. பெற்ற வாக்கு சதவிகிதத்தைவிட தி.மு.க பெற்றுள்ள வாக்கு சதவிகிதம் மிகவும் குறைவு” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சதவிகிதக் கணக்குப்படி பார்த்தாலும் த.வெ.க. 35 சதவிகிதம் எனில், தி.மு.க. 24 சதவிகிதம். அதன்படி பார்த்தாலும்கூட, தமிழ்நாட்டின் 76 சதவிகித மக்கள் தி.மு.க.வே தங்களுக்குத் தேவை இல்லை என்று தீர்க்கமாக முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாக அக்கட்சியை நிராகரித்துள்ளனர்.” என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.
“மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருப்பதால் தான் அரசைக் காங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரித்தன. அதை அக்கட்சிகளின் தலைவர்கள் ஊடகங்களிலும் வெளிப்படுத்தினர். இதையும் தி.மு.க. ஏளனமாகப் பேசி உள்ளது எந்தக் கணக்கில் என்று புரியவில்லை. அதையும் மக்கள் பார்வைக்கும் முடிவுக்குமே விட்டுவிடுகிறோம்.”
“மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றிப் புகழ்பெறப் போகும் மக்கள் அரசைப் ‘புஷ்பா அரசு’ என்று தி.மு.க. ஏளனம் பேசி இருக்கிறது. மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில்தான் நாமும் நமது அரசும் உறுதியாக இருக்கப் போகிறோம். அதைப் பார்த்துத் தி.மு.க. ஆற்றாமையில் அலறப் போவது உறுதி” என்று குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர் விஜய்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (மே 13) நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு பிறகு, சி.வி. சண்முகம் உள்ளிட்ட அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய சி.வி. சண்முகம், “25 பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட அதிமுகவினர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். அதிமுகவில் சிறுபான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்துள்ளனர்” என்று கூறினார்.
“புதுச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக ஆதரவுடன் ஆட்சியமைக்கப்போவதாக தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து பெற்றார்” என்றும் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.
“திமுகவை எதிர்த்து அரசியல் செய்த எங்களை திமுக ஆதரவோடு ஆட்சியமைக்க வேண்டும் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“திருமாவளவனை முதலமைச்சராகவும், அதிமுகவினரை அமைச்சர்களாகவும் ஆக்க திமுக முன் மொழிந்தது. ஆனால் அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவில்லை. திமுகவுடன் போக முடிவு செய்த நிலையில் ஏன் தவெக-வை ஆதரிக்கக் கூடாது என்று கேட்டோம், ஆனால் அதையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று சி.வி சண்முகம் தெரிவித்தார்.
முதலமைச்சரின் சிறப்பு பணி அலுவலர் ராதன் பண்டிட் நியமனம் ரத்து
பட மூலாதாரம், UGC
படக்குறிப்பு, ரிக்கி ராதன் பண்டிட் நியமனத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.
சட்டப்பேரவை வரை எழுந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து முதலமைச்சரின் சிறப்பு பணி அலுவலர் ரிக்கி ராதன் பண்டிட் நியமனத்தை (officer on Special Duty to Chief Minister of Tamil Nadu (Politics) ) தமிழக அரசு திரும்பப் பெற முடிந்துள்ளது.
விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை பதவியேற்றதைத் தொடர்ந்து அதிகாரிகள் மாற்றம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தவெகவைச் சேர்ந்த ரிக்கி ராதன் பண்டிட் முதலமைச்சரின் சிறப்பு பணி அலுவலராக (அரசியல்) நியமிக்கப்பட்டிருந்தார்.
ஜோதிட பின்னணி கொண்ட அவரின் நியமனத்திற்கு தவெகவிற்கு ஆதரவு தெரிவித்த கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அது எதிரொலித்தது. பிரேமலதா, விஜயகாந்த், வன்னி அரசு உள்பட பலரும் இது குறித்து பேசியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் விஜய், அந்த முடிவுகளை மறுபரிசீலனை செய்வதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவரின் நியமனம் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
காணொளிக் குறிப்பு, "ராஜகுருவுக்கு அரசு பதவியா" விஜயை விமர்சித்த பிரேமலதா
"நான் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல" - சிபிஐ இயக்குநர் தேர்வு விவகாரத்தில் ராகுல் காந்தி அறிக்கை
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம்
சிபிஐ அமைப்பின் இயக்குநர் தேர்வு விவகாரத்தில் தனக்கு கருத்து வேறுபாடும் இருப்பதாக தெரிவித்துள்ள மக்களவை எதிர்கட்சித் தலைவர், "நான் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் இல்லை." என்றும் கூறியுள்ளார்.
புதிய சிபிஐ இயக்குநரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் பிரதமர் நரேந்திர மோதியின் இல்லத்தில் செவ்வாய்கிழமை அன்று நடைபெற்றது. இந்தியாவின் முதன்மை விசாரணை அமைப்பான சிபிஐ-யின் இயக்குநரை தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெறுவர்.
இந்த நிலையில் தேர்வு நடைமுறையில் தனக்கு மாற்றுக் கருத்து இருப்பதாக பிரதமர் மோதிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தை தனது எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
அதில், "உங்களது அரசாங்கம் சிபிஐ-யை தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய விசாரணை அமைப்பான சிபிஐ அரசியல் எதிரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் விமர்சகர்களைக் குறிவைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அந்த நிறுவனம் கைப்பற்றப்படாமல் இருப்பதற்காக தான் தேர்வுக் குழுவில் எதிர்க்கட்சி தலைவர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நடைமுறையில் நீங்கள் எனக்கு எந்தப் பங்கும் கொடுக்காதது வருத்தமளிக்கிறது."
"பல முறை கேட்ட பிறகும் தகுதியுள்ள நபர்கள் பற்றிய அறிக்கை எனக்கு வழங்கப்படவில்லை. மாறாக, குழு கூட்டத்தில் முதல்முறையாக 69 நபர்களின் அறிக்கையை ஆராயுமாற்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. முழுமையான அறிக்கை எனக்கு வழங்கப்படவில்லை. ஒவ்வொரு நபரின் வேலை மற்றும் பின்னணியைப் புரிந்துகொள்ள இந்த அறிக்கையை ஆழமாக ஆய்வு செய்வது முக்கியமானது." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தக் கடிதத்தில், "தேர்வுக் குழுவுக்கு தேவையான தகவல்களை வழங்காமல் அதனை வெறும் சம்பிரதாயமாக அரசு மாற்றியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் என்பது வெறும் 'ரப்பர் ஸ்டாம்ப்' அல்ல. எனது அரசமைப்பு கடமைகளை கைவிட்டுவிட்டு இந்தச் சார்பான நடைமுறையில் என்னால் அங்கம் வகிக்க முடியாது." என்றும் குறிப்பிட்டார்.
பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி உடன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கலந்து கொண்டதும் தற்போதைய சிபிஐ இயக்குநரின் பதவிக்காலம் மே 24-ஆம் தேதி உடன் முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்வு
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.
தங்கம், வெள்ளியின் அத்தியாவசியமற்ற இறக்குமதியைக் கட்டுப்படுத்த இறக்குமதி வரியை 15% வரை உயர்த்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் நெருக்கடியால் இறக்குமதி செலவுகள் அதிகரித்து வரும் சூழலில் பொக்கிஷமான உலோகங்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த இறக்குமதி வரி 6 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதம் ஆக உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அந்திய செலாவணி சேமிப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக சமூக நலக் கட்டணம் மற்றும் வேளாண் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி செஸ் நிதி இன்று (மே 13) முதல் அதிகரிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"இரான் போரை முடிக்க சீனா தேவையில்லை" - டிரம்ப்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மூன்று நாள் அரசுமுறை பயணமாக சீனா செல்கிறார் டிரம்ப் (கோப்புப் படம்)
இரான் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர சீனாவின் உதவி தேவையில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அரசுமுறை பயணமாக சீனா செல்வதற்கு முன்பாக டிரம்ப் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தனது சீன பயணத்தின்போது அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் உடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
"நாங்கள் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. வெளிப்படையாகச் சொன்னால், எங்களின் நிகழ்ச்சி நிரலில் இரான் இல்லை, ஏனெனில் இரானை ஏற்கெனவே எங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம்," என்று தெரிவித்தார் டிரம்ப்.
இரான் தொடர்பாக பேசிய டிரம்ப், "ஒன்று நாங்கள் ஒப்பந்தத்தை அடைவோம் அல்லது இரான் அழிக்கப்படும்." என எச்சரித்தார்.
மே 13 முதல் 15 வரை அரசு முறை பயணமாக டிரம்ப் சீனா வருவதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து அமெரிக்க அதிபர் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். முதலில் மார்ச் மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் பயணம் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றங்கள் பின்னர் தள்ளிவைக்கப்பட்டது.
வணக்கம் நேயர்களே!
பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்பது மோகன். இன்று (மே 13) தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய முக்கிய நிகழ்வுகள், அரசியல் மற்றும் செய்திகளை இந்தப் பக்கத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் தவெகவினர் மீது நடவடிக்கை - என்.ஆனந்த எச்சரிக்கை
பட மூலாதாரம், TVKHQ/X
படக்குறிப்பு, தவெக பொதுச்செயலாளர் என் ஆனந்த்
தவெக தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், ''கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்துக்கொள்ளக்கூடாது'' என்று தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த அவர், ''கட்சியின் நிர்வாகிகள் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பதாகைகளை வைக்கக்கூடாது, கொண்டாட்டங்களின் வாயிலாக பொதுமக்களுக்கு இடையூறு செய்யக்கூட்டாது'' என்று அறிவிறுத்தியுள்ளார்.
''அவ்வாறு இடையூறு செய்யும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அவர் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இடமாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் யார்?
பட மூலாதாரம், DIPR
படக்குறிப்பு, தமிழ்நாடு அரசில் கூடுதல் தலைமை செயலாளர் பொறுப்பில் உள்ள மூத்த ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழ்நாடு அரசில் கூடுதல் தலைமை செயலாளர் பொறுப்பில் உள்ள மூத்த ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து தேர்தல் சமயத்தில் மாற்றப்பட்டு விடுப்பில் இருந்த முருகானந்தம் ஐஏஎஸ் வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பை அமுதா ஐஏஎஸ் கூடுதலாக கவனித்து வந்தார்.
மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனராக இருந்த சித்திக் ஐ ஏ எஸ், நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில திட்டக்குழு இயக்குனராக இருந்த சுவர்ணா ஐஏஎஸ், சுற்றுலா கலாசாரம் மற்றும் இந்து சமய அறநிலை துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்
கூட்டுறவுத்துறை பதிவாளராக இருந்த நந்தகுமார் டாஸ்மாக் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்
நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த அண்ணாதுரை முதலமைச்சரின் மூன்றாவது தனிச்செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் கூடுதல் செயலராக இருந்த விஷ்ணு ஐஏஎஸ் முதலமைச்சரின் கூடுதல் செயலராக நியமனம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சாய்க்குமார் உத்தரவிட்டுள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவனுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு
பட மூலாதாரம், VCK
தவெக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க விசிக இறுதி நேரத்தில் ஆதரவு தந்த நிலையில், திருமாவளவனை நேரில் சந்தித்து விஜய் நன்றி தெரிவித்தார்.
சென்னை வேளச்சேரில் உள்ள விசிக தலைவர் திருமாவளவனின் இல்லத்திற்கு சென்ற விஜய்யை திருமா வாசலில் நின்று வரவேற்றார்.
இந்த சந்திப்பில் விசிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்,
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவரை சந்தித்த முதலமைச்சர் விஜய்
பட மூலாதாரம், ANI
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் மற்றும் நிர்வாகிகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சந்தித்தார்.
தவெக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவை வழங்கினர்.
இந்தநிலையில் அக்கட்சியின் தலைவர்களை விஜய் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அதனைத்தொடர்ந்து காங்கிரஸ் அலுவலகமான சென்னை சத்யமூர்த்தி பவன் சென்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை , பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் தமிழக முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக நியமனம்
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜோதிடரான இவர், தவெகவில் பயணித்து வந்தார். இந்த நிலையில், அவருக்கு அரசு பொறுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த அமமுக எம்எல்ஏ நீக்கம்
பட மூலாதாரம், DIPR
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவை தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய அமமுக எம் எல் ஏ காமராஜ்
சபாநாயகர் தேர்வு செய்ய கூட்டப்பட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அமமுக சட்டப்பேரவை உறுப்பினர் காமராஜ் தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தார்.
கட்சியின் நிலைப்பாட்டினை மீறி தன்னிச்சையாக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது கட்சியின் கோட்பாடுகளுக்கு முரணானது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதனால் அமமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் காமராஜ் நீக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.
மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து - தேசிய தேர்வு முகமை கூறியது என்ன?
பட மூலாதாரம், Santosh Kumar/Hindustan Times via Getty Image
படக்குறிப்பு, மே 3 ஆம் தேதி நீட் தேர்வு நடந்தது
மே 3-ஆம் தேதி நடந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) ரத்து செய்துள்ளது. மத்திய அரசின் ஒப்புதலின் பேரிலேயே இந்த ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இத்தேர்வுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வுக்கான புதிய தேதிகள் மற்றும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Admit Card) வெளியாகும் அட்டவணைகள் ஆகியவை விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக வெளியிடப்படும்.
சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் தேசிய தேர்வு முகமை, "இப்பிரச்னை குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்வதற்காக, இதனை மத்திய புலனாய்வுத் துறையிடம் (CBI) ஒப்படைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விசாரணைக்கு தேசிய தேர்வு முகமை முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன், தேவையான அனைத்து ஆவணங்களையும் தகவல்களையும் வழங்கும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "இத்தேர்வை மீண்டும் எழுதுவதற்கு மாணவர்கள் புதிதாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை; அதற்கெனக் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. மாணவர்கள் ஏற்கெனவே செலுத்தியிருந்த தேர்வுக் கட்டணம் அவர்களுக்குத் திரும்ப வழங்கப்படும். மேலும், இத்தேர்வு NTA-வின் சொந்த வளங்களைப் பயன்படுத்தியே நடத்தப்படும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு குறித்து ராகுல் காந்தி கேள்வி
நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, திங்களன்று நீட் தேர்வு குறித்துக் கேள்விகளை எழுப்பினார்.
ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், "நீட் 2026 வினாத்தாள் கசிந்ததாக வந்த செய்தியை நான் அறிந்தேன். இதுவொரு தேர்வு இல்லை; நீட் இப்போது ஒரு ஏலமாக மாறிவிட்டது. தேர்வு தொடங்குவதற்குச் சரியாக 42 மணிநேரத்துக்கு முன்பே, பல கேள்விகள் வாட்ஸ்ஆப் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன." என தெரிவித்துள்ளார்.
"22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள், ஓராண்டு முழுவதும் இரவும் பகலும் பாராமல், உறக்கமின்றிப் படித்துத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டனர். ஆனால் ஒரே இரவில், அவர்களின் எதிர்காலம் பகிரங்கமாக ஏலம் விடப்பட்டுள்ளது. இது நடப்பது முதல்முறையல்ல. கடந்த 10 ஆண்டுகளில், 89 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளன; 48 முறை மறுதேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் அதே வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன; அதைத் தொடர்ந்து அதே மௌனமே நிலவுகிறது."
ராகுல் காந்தி மேலும் "பிரதமர் மோதி, ஒவ்வொரு தோல்விக்கும் நீங்கள் பொதுமக்களையே குறை கூறுகிறீர்கள் என்றால், அதில் ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலமும் அடங்கும். 22 லட்சம் மாணவர்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டுவிட்டது. இந்தியாவின் இளைஞர்களின் கனவுகளுக்கு, மோதி அரசை விடப் பெரிய அச்சுறுத்தல் வேறு எதுவும் இருக்க முடியாது." என்றார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பிற தலைவர்களும் இப்பிரச்னை குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
"திமுக ஆதரவோடு முதலமைச்சராக முயன்றார்" - எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
காணொளிக் குறிப்பு, எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தவெக எம்எல்ஏவுக்கு தடை
பட மூலாதாரம், TN Assembly
படக்குறிப்பு, சீனிவாச சேதுபதி
ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை (மே 13) நடைபெறவுள்ள நிலையில் இந்த உத்தரவு கவனம் பெறுகிறது.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்நிலையில், சீனிவாச சேதுபதி எம்எல்ஏவாக பதவியேற்க தடை விதிக்கக் கோரி திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பெரியகருப்பன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் தொகுதிக்கு உரிய வாக்குகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதிக்குத் தவறுதலாக அனுப்பப்பட்டிருப்பது ஒரு அசாதாரணமான சூழ்நிலை என்று வாதிட்டதாக ‘லைவ் லா’ செய்தி தெரிவிக்கிறது.
பெரியகருப்பன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இளங்கோ, மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் திரும்பி வந்துவிட்டதாகவும், ஆனால் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் சென்று சேர்ந்துவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக, பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில், திங்கட்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர் நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தங்களின் பங்கு முடிந்துவிட்டதாகவும், தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் விக்டோரியா கௌரி மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் முகாந்திரம் உள்ளதாக தெரிவித்ததாக ‘பார் அண்ட் பெஞ்ச்’ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், “நம்பிக்கை தீர்மானம், நம்பிக்கையில்லா தீர்மானம், நம்பிக்கை வாக்கெடுப்பு அல்லது அவையின் எண்ணிக்கை பலம் குறித்த எவ்வித சோதனைகளிலும் அடுத்த உத்தரவு வரும் வரை சீனிவாச சேதுபதி வாக்கு செலுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இருப்பினும், இந்த உத்தரவு சேதுபதி தேர்ந்தெடுக்கப்பட்டதை ரத்து செய்வதாகக் கருதப்படாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இந்த உத்தரவு பெரியகருப்பனைத் தேர்ந்தெடுக்கப்பட்டவராக அறிவிக்க எந்த உரிமையையும் அளிக்காது என்றும் அது கூறியது.” என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரவையில் முதலமைச்சராக விஜய் தனது முதல் உரையில் கூறியது என்ன?
பட மூலாதாரம், TN assembly
சட்டப்பேரவையில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் சமம் என, முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தன் முதல் உரையை இன்று ஆற்றினார்.
அப்போது, “மக்களின் எதிர்பார்ப்புகளை இங்கு கொண்டு வந்து அவற்றை பூர்த்தி செய்வது இந்த அவையின் பொறுப்பு. இங்கே அனைவரும் சமம். அனைத்து கட்சியினர் கூறும் கருத்துகளுக்கும் சமமாகவே மதிப்பளிக்கப்படும். நல்லது ஏற்கப்பட்டு அல்லாதவை நிராகரிக்கப்படும். ஜனநாயகத்தின் மூளையாக இந்த அவை செயல்பட வேண்டும்.” என்றார்.
சபாநாயகரை எதிர்க்கட்சி தலைவரும் அவை முன்னவரும் கையைப் பிடித்து அமர வைத்ததை குறிப்பிட்ட முதலமைச்சர், அந்த மரபு எப்படி ஆரம்பித்தது என்பதை கூறினார்.
“பேரவையின் மாண்பையும் கண்ணியத்தையும் காக்க வேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கு உள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களை மதிக்கும் பண்புகள் மதிக்கப்பட வேண்டும். அவையின் மரபு காக்கப்பட வேண்டும்.” என்றார்.
'அறிவு, அனுபவத்தை பகிர தயார்' - பேரவையில் உதயநிதி பேச்சு
பட மூலாதாரம், TN Assembly
“எங்களுடைய அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள தயாராக இருக்கிறோம்” என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசுகையில், “எதிர்க்கட்சி தலைவராக என் முதல் உரை இது. பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் என எங்களின் தலைவர்களை வணங்கி உரையை தொடங்குகிறேன். இரண்டாவது முறையாக என்னை தேர்ந்தெடுத்து அனுப்பிய சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு நன்றி. எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த சுமார் 1.55 கோடி தமிழக மக்களுக்கு நன்றி. கூட்டணி வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சபாநாயகர், துணை சபாநாயகருக்கு வாழ்த்துகள்.” என்றார்.
மேலும் பேசிய அவர், “சபாநாயகர் சிரித்த முகத்துடன், அன்பாக பழகக்கூடியவர் என கேள்விப்பட்டுள்ளேன். முன்பும் சிறந்த எம்எல்ஏவாக செயல்பட்டுள்ளீர்கள். பேரவை மரபுகள் உங்களுக்கு புதிது அல்ல. எதிர்க்கட்சிகளையும் நீங்கள் அரவணைத்து, நடுநிலையுடன் செயல்படுவீர்கள் என்பது எங்கள் எதிர்பார்ப்பு.” என்றார்.
“முதலமைச்சர் அனைத்து கட்சி தலைவர் வீடுகளுக்கும் சென்று வாழ்த்து பெற்றார். அந்த அரசியல் நாகரிகம் பேரவையிலும் தொடர வேண்டும் என்பது எங்கள் எண்ணம். திமுக பேரவையில் எதிரிக்கட்சியாக இல்லாமல், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும். திமுக ஆக்கசக்தி தான்.” என்றார்.
காணொளிக் குறிப்பு, "நாம் ஒரே கல்லூரியில் படித்தோம்" - உதயநிதி பேச்சு; சிரித்த விஜய்
“இந்தியாவில் பண்பாட்டு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றம் அடைந்திருப்பதற்கு இந்த பேரவையில் நடந்த செயல்பாடுகளே காரணம். பிற மாநிலங்களுக்கு உதாரணமாக திகழும் பேரவை இது. இங்கு ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு இடம் கொடுக்க வேண்டும்.
திமுக அரசு வாக்களிக்காத மக்களுக்குமான அரசாக திகழ்ந்தது. புதிய அரசும் அவ்வாறு செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்.
எங்களுடைய அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள தயாராக இருக்கிறோம். நீங்களும் தயாராக இருங்கள். மாநில மக்களின் நலன் தான் நமக்கு முக்கியம். ஆளுங்கட்சி காதுகளாகவும் எதிர்க்கட்சி குரலாகவும் இருக்க வேண்டும்.” என்றார்.
அரசு நிகழ்ச்சி என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாம் இடத்துக்கு செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் உதயநிதி வலியுறுத்தினார்.