நேரலை, ராமநாதபுரம்: 3 சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வாக்களித்தார்

    ப. சிதம்பரம், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, ப. சிதம்பரம்

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் சிவகங்கையில் உள்ள வாக்குச்சாவடியில் தன் வாக்கை பதிவு செய்தார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடு முழுவதும் ஒரு நிலையான அரசு, வளர்ச்சி, நலத்திட்டங்கள் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மதச்சார்பற்ற கூட்டணியே ஆட்சியை தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அமையும் புதிய அரசு பட்ஜெட் போடுவதில் எந்த சிக்கலும் இருக்காது. அமைச்சர்கள், அதிகாரிகள்பார்த்துக்கொள்வார்கள். தமிழகத்துக்கு தேவையான கடனை வாங்கி பட்ஜெட் போடுவார்கள். வருவாய் இருந்தால் கடன் வாங்கலாம், தவறில்லை” என்றார்.

  2. எடப்பாடி பழனிசாமி, சீமான் ஆகியோர் வாக்களிப்பு

    எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை தேர்தல் 2026

    பட மூலாதாரம், PT

    சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் குடும்பத்தினருடன் வாக்களித்தார். அவர் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, சீமான்

    பட மூலாதாரம், ANI

    படக்குறிப்பு, சீமான்

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் மனைவி கயல்விழியுடன் வந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தன் வாக்கினை பதிவு செய்தார். சீமான், இந்த தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “ஒற்றை விரலால் பெரும் மாறுதலை ஏற்படுத்த முடியும். வாக்களிப்பது, நம்மிடம் இருக்கும் கடைசி மதிப்புமிக்க உரிமை. தலைமையை தேர்ந்தெடுக்க நம்மிடம் இருக்கும் கடைசி வாய்ப்பு. மக்கள் அதை தவறவிடக் கூடாது.” என்றார்.

  3. ராமநாதபுரம்: 3 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026

    பட மூலாதாரம், PTI

    படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

    ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்துக்கல்வலசை பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் உள்ள 188வது மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யாததால் மாதிரி வாக்குப்பதிவு இன்னும் நடக்கவில்லை.

    மாற்று வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்து வருமாறு கட்சி பிரமுகர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்ததையடுத்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முத்து செல்லையாபுரம் வாக்குச்சாவடி, இருவேலி வாக்குச்சாவடி, ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குத்துக்கல்வலசை வாக்குச்சாவடி என மூன்று வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு காரணமாக மாதிரி வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

  4. அஜித் வாக்களித்தார் - காலையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026

    பட மூலாதாரம், ANI

    தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாட்டில் 75,000-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    நடிகர் அஜித் திருவான்மியூரில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் முதல் ஆளாக தன் வாக்கை பதிவு செய்தார்.

    இதனிடையே, தமிழ்நாட்டு மக்கள் சாதனை அளவிலான வாக்குகள் பதிவாக வழிவகை செய்ய வேண்டும் என, பிரதமர் மோதி வலியுறுத்தியுள்ளார்.

    அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ள வேளையில், அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் இந்த புனிதமான ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, தமிழ்நாட்டின் இளைஞர்களும், பெண்களும் பெருமளவில் திரண்டு வந்து, சாதனை அளவிலான வாக்குகள் பதிவாக வழிவகை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை:

    தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 57,343,291 ஆகும்

    ஆண்கள்: 2,80,30,658

    பெண்கள்: 2,93,04,905

    மூன்றாம் பாலினத்தவர்: 7,728

  5. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்

    தேனி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் குதிரை மூலம் எடுத்து செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

    பட மூலாதாரம், TNelectionsCEO/X

    படக்குறிப்பு, தேனி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் குதிரை மூலம் எடுத்து செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

    தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 23) சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணிக்கு நிறைவடையும். எனினும், மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வருபவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

    தமிழ்நாட்டில் 75,000-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் குடிநீர் வசதி, கழிவறை வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் பிரதானமாக திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், ராமதாஸ்-சசிகலா கூட்டணி உள்ளிட்டவை களத்தில் உள்ளன.

    தமிழ்நாட்டில் சுமார் 4,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அதேபோன்று, https://elections.tn.gov.in/, votervazhikatti.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக வாக்குச்சாவடி விவரங்களை அறியலாம்.

  6. வணக்கம் நேயர்களே!

    இன்று (ஏப்ரல் 23) தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அதுகுறித்த சமீபத்திய செய்திகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குவது நந்தினி வெள்ளைச்சாமி.