நீட் தேர்வு: 'டெல்லி போராட்டம் நம்பிக்கை தருகிறது' - இறந்த தமிழக மாணவர்களின் குடும்பத்தினர்

அனிதாவின் சகோதரர் மணிரத்னம்

பட மூலாதாரம், Maniratnam

படக்குறிப்பு, அனிதாவின் சகோதரர் மணிரத்னம்
    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

எச்சரிக்கை: கட்டுரையில் தற்கொலை பற்றிய விவரங்கள் உள்ளன. உள்ளடக்கம் சங்கடம் தரலாம்.

"எங்கள் வீட்டில் பெண் குழந்தை வேண்டும் என்று மிக நீண்ட காலம் காத்திருந்து ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தவர் அனிதா. 10 ஆண்டுகளைக் கடந்தும் அனிதாவின் மரணம் எங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் பாதித்துள்ளது. இந்த நிலையில், நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது" என்கிறார், அனிதாவின் சகோதரர் மணிரத்னம்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, 12ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். ஆனால், நீட் தேர்வில் போதுமான மதிப்பெண்களை எடுக்காத காரணத்தால் அவரால் தான் விரும்பிய மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. இதைத் தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி அனிதா தற்கொலை மூலம் உயிரிழந்தார். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கைத் தொடர்ந்தவர் அனிதா.

அனிதாவின் மரணம் தமிழ்நாட்டின் சமூக-அரசியல் மட்டத்தில் பெரும் விவாதமாக மாறியது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடந்தன. இன்றும் தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்புப் போராட்டங்களின் மையமாக அனிதா திகழ்கிறார்.

நீட் தேர்வுக்கு எதிராகப் பல போராட்டங்களை முன்னெடுத்த திமுக, இந்த விவகாரத்தில் அதிமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தது. 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டங்கள் மிகப் பெரிய விவாதப் பொருளாக இருந்தன. அந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கான காரணங்களுள் ஒன்றாக நீட் எதிர்ப்புப் போராட்டங்கள் கருதப்படுகின்றன.

இந்நிலையில், நீட் தேர்வில் "குளறுபடிகளை" சரிசெய்ய வேண்டும், ஒட்டுமொத்த கல்வி அமைப்பில் சீர்திருத்தங்கள் வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, "எங்கள் அரசு நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு குறித்து விவாதிக்கவும், இளைஞர்களின் ஒவ்வொரு நியாயமான கவலைகளுக்குத் தீர்வு காணவும் முற்றிலும் தயாராக உள்ளது" என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்து வரும் போராட்டங்களில் அனிதாவின் சகோதரர் மணிரத்னமும் கடந்த சில தினங்களாகக் கலந்து கொண்டுள்ளார்.

'டெல்லி போராட்டம் நம்பிக்கை அளித்துள்ளது' - நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர்
படக்குறிப்பு, மாணவி அனிதா 2017ஆம் ஆண்டில் உயிரிழந்தார். அது தமிழ்நாடில் பெரும் அரசியல் விவாதத்திற்கு வித்திட்டது.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

திங்கள் கிழமை போராட்டக்காரர்கள் மீது டெல்லி காவல்துறை தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீச்சை நடத்திய நேரத்திலும் அவரும் போராட்டக் களத்தில்தான் இருந்துள்ளார்.

டெல்லியில் ஜந்தர் மந்தரில் இருந்து பிபிசி தமிழிடம் பேசியபோது, "டெல்லியில் நடக்கும் இந்த இளைஞர்கள் போராட்டம், மெரினா போராட்டம் போலத் தன்னெழுச்சியாக நடக்கிறது. கடும் வானிலையிலும், அமைதியான முறையிலேயே மாணவர்கள் போராடினர். அவர்கள் மீது காவல்துறை தனது பலத்தை பிரயோகித்தது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு போராடுகிறது. தேசியளவில் அதற்கான கவனம் தற்போது கிடைத்துள்ளது" என்று மணிரத்னம் தெரிவித்தார்.

இந்நிலையில், திங்கள் கிழமைக்குப் பிறகும் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர், மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு பெரியளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஜந்தர் மந்தரில் இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தப் போராட்டங்கள் நடக்கின்றன. இந்தக் கோரிக்கையின் மையமாக இருப்பது நீட் தேர்வு.

கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்தத் தேர்வை 20 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் எழுதியிருந்தனர். இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் பலத்த பாதுகாப்புடன் மறுதேர்வு நடத்தப்பட்டது.

முந்தைய தேர்வில் வினாத்தாள் டெலிகிராம் மூலமாகவே கசிந்ததாக விசாரணையில் தகவல் வெளியான நிலையில், மறுதேர்வையொட்டி ஒருவார காலம் டெலிகிராம் செயலிக்குத் தடையும் விதிக்கப்பட்டது.

ஆனால், வினாத்தாள் கசிவு காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை மூலம் உயிரிழந்தனர். அவர்கள் இந்தக் "குளறுபடியால்" விரக்தியடைந்ததாக அவர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்குப் பொறுப்பேற்று கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது.

'இன்னும் மீள முடியவில்லை'

அனுகீர்த்தனா

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, அனுகீர்த்தனா

கடந்த மே மாதம் நீட் தேர்வு ரத்து காரணமாக தற்கொலை மூலம் உயிரிழந்தவர்களுள் தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனுகீர்த்தனாவும் ஒருவர்.

கோவை மாவட்டம் பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்த செந்தில்பிரபுவின் மூத்த மகள் அனுகீர்த்தனா. செந்தில்பிரபு, டாஸ்மாக் தொழிற்சங்கத்தின் (சிஐடியு) மாவட்டச் செயலாளராகப் பொறுப்பில் உள்ளார்.

எட்டிமடையில் உள்ள தனியார் பள்ளியில் அனுகீர்த்தனா பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்தார். ஏற்கெனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதிய அனுகீர்த்தனா, மூன்றாவது முறையாக கடந்த மே மாதம் தேர்வு எழுதியிருந்தார்.

பிபிசி தமிழிடம் பேசிய செந்தில் பிரபு, "கடைசியாக எழுதிய தேர்வில் பல் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதன் காரணமாக அவர் மன அழுத்தத்தில் இருந்ததை எங்களால் உணர முடியவில்லை. மகளின் இறப்பால் என் மனைவி இன்னும் மனநல ஆலோசனையில்தான் இருக்கிறார். தோல்வியைத் தழுவி விடுவோமோ என்ற அச்சத்தில் என் மகள் இப்படிச் செய்துவிட்டாள். என் மகள் தேர்வு காரணமாக இறக்கவில்லை. வினாத்தாள் கசிந்து அந்தத் தேர்வை ரத்து செய்ததால் இறந்துவிட்டாள். தேசிய தேர்வு முகமை (NTA) முறையாகத் தேர்வை நடத்தாததால் இறந்துவிட்டாள்" என்றார்.

அதோடு, "தேர்வு ரத்து, மறுதேர்வு என்பதெல்லாம் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதற்கெல்லாம் தேசிய தேர்வு முகமை என்ன பதில் சொல்லும்?" என்றும் அவர் கேள்வியெழுப்புகிறார்.

டெல்லி போராட்டம்

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அவர்களுடன் சமூக செயற்பாட்டாளரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக் இணைந்தார். தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் அவர் ஈடுபட்ட நிலையில், டெல்லி காவல்துறையினரால் அவர் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில், திங்கள் கிழமை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போலீசாரின் தடையை மீறி நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றபோது, அவர்களை அப்புறப்படுத்த போலீசார் கண்ணீர் புகை, தடியடி ஆகியவற்றைப் பிரயோகித்தனர்.

இதில் குறைந்தது 60 பேர் காயமடைந்தனர். காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கையில் 21 வயது மாணவி ஒருவர் படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம், காவல்துறையைச் சேர்ந்த 118 பேர் காயமடைந்ததாகவும் 70 பேர் இதுதொடர்பாக தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டதாகவும் போலீசார் அச்சமயத்தில் தெரிவித்திருந்தனர்.

டெல்லி போராட்டத்தில் பெண் ஒருவர் குண்டுகட்டாக தூக்கிச் செல்லப்பட்டபோது

பட மூலாதாரம், EPA/Shutterstock

படக்குறிப்பு, டெல்லி போராட்டத்தில் பெண் ஒருவர் தூக்கிச் செல்லப்பட்டபோது

நீட் தேர்வு காரணமாகத் தங்கள் பிள்ளைகளை இழந்த பெற்றோர், இந்தப் போராட்டங்கள் ஒருவித ஆறுதலை அளித்திருப்பதாகக் கூறுகின்றனர்.

"இத்தகைய போராட்டங்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட, இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. குரலற்ற பெற்றோருக்காக இளைஞர்கள் போராட்டம் நடத்துவதாகவே நான் இதைப் பார்க்கிறேன். ஏனென்றால் நீட் தேர்வால் பிள்ளைகளை இழந்த எங்களுக்காக இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. தேர்வை முறையாக நடத்த வேண்டுமென்ற கோரிக்கை மிகவும் முக்கியமானது" என்கிறார், அனுகீர்த்தனாவின் தந்தை செந்தில்பிரபு.

இவர், டெல்லியில் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆதரவாக கோவையில் இந்திய மாணவர் சங்கம் (SFI) நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டார்.

'சமமான கல்வி இல்லை'

பல்வேறு பாடத்திட்டங்களில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு சமமான வாய்ப்பை வழங்குவதில்லை என்பது செந்தில்பிரபு போன்ற பெற்றோர்களின் வாதமாக உள்ளது. அனிதாவின் சகோதரர் மணிரத்னமும் இதே கருத்தைக் கூறுகிறார்.

"சமமான கல்வி முறை இல்லாதபோது, ஒரே மாதிரியான தேர்வை நடத்துவது எந்த முறையில் நியாயமானதாக இருக்கும்? கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும்," எனக் கூறுகிறார் அவர்.

மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோதே நீட் தேர்வு முன்னெடுக்கப்பட்டாலும், தமிழ்நாட்டைப் பொருத்தவரை 2017ஆம் ஆண்டு முதல்தான் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில், 'ஆட்சிப் பொறுப்பேற்றதும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவோம்' என திமுக பிரசாரம் செய்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சிப் பொறுப்பேற்றதும் நீட் தேர்வு குறித்து ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை திமுக அரசு அமைத்தது.

அந்த கமிட்டி அளித்த பரிந்துரையின் அடிப்படையில் 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி நிராகரித்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு மீண்டும் அதே மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு திமுக அரசு அனுப்பியது. இந்த முறை மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பினார். அந்த மசோதாவும் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக, கடந்த ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

'கனவை சிதைத்துவிட்டது'

கோபிகா

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, கோபிகா

நீட் தேர்வு தங்கள் மகளின் கனவைச் சிதைத்துவிட்டதாக கூறுகிறார், சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த சேகர். இவர் முடிதிருத்தும் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இவரின் இரண்டாவது மகள் கோபிகா, சேலம் அரசு கோட்டை மேல்நிலைப் பள்ளியில் 2024ஆம் ஆண்டு பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்தார். மருத்துவராக வேண்டுமென்ற கனவில் இருமுறை தேர்வு எழுதியும் போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை.

கடந்த மே மாதம் கோபிகா எழுதிய நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், நீட் மறுதேர்வுக்கு அவர் தயாராகி வந்தார். சேலம் வாழப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுதுவதற்கு கோபிகாவுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், தேர்வுக்கு ஓரிரு நாட்கள் முன்பு அவர் தற்கொலை மூலம் உயிரிழந்தார்.

"என் மகள் கோபிகா நன்றாகப் படிப்பாள், தைரியமானவள். தெளிவாகப் பேசுவாள். நீட் எழுத வேண்டும் என்பது அவளுடைய விருப்பம்தான். நான் படிப்பில் எதையும் கட்டாயப்படுத்துவதில்லை. பயிற்சி வகுப்பில் சேர்க்கலாம் என நினைத்தபோதுகூட, 'வேண்டாம், நான் வீட்டில் ஆன்லைனிலேயே படித்துக் கொள்கிறேன்' என கூறிவிட்டாள்" என்று கூறுகிறார் கோபிகாவின் தந்தை சேகர்.

கடந்த மே மாதம் மூன்றாவது முறையாக அவர் நீட் தேர்வு எழுதினார். "நன்றாக எழுதிவிட்டேன், 500-600 மதிப்பெண்கள் வரும்" எனக் கூறினார். அதன் பிறகு அந்தத் தேர்வை ரத்து செய்துவிட்டனர். அதில்தான் இந்த முடிவை எடுத்துவிட்டாள்" என்று பிபிசி தமிழிடம் பேசிய சேகர் தெரிவித்தார்.

தனது மகள் மன அழுத்தத்தில் இருந்தும் வெளியில் எதையும் காண்பிக்காமல், மற்றவர்களிடம் வழக்கம் போலவே நடந்து கொண்டதாகக் கூறிய சேகர், "அவளது கனவை இந்தத் தேர்வு சிதைத்துவிட்டது. அவளின் மரணம் எங்களை நரக வேதனையில் ஆழ்த்திவிட்டது" என்றார்.

நீட் மறுதேர்வு, மாணவர்களுக்கு மட்டுமின்றி பெற்றோருக்கும் இக்கட்டான நிலைமையை ஏற்படுத்தியதாக அவர் கூறுகிறார். "இப்போது டெல்லியில் மாணவர்கள் நடத்தும் போராட்டங்களை தினமும் செய்திகளில் பார்க்கிறேன். அவர்கள் நல்ல நோக்கத்திற்காகப் போராடுகின்றனர்" என்கிறார் சேகர்.

தர்மேந்திர பிரதான் கூறியது என்ன?

இந்தப் போராட்டங்களின் மையமாக உள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்றிரவு தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், "எங்கள் அரசு நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு குறித்து விவாதிக்க, இளைஞர்களின் ஒவ்வொரு நியாயமான கவலைகளுக்கும் தீர்வு காண முற்றிலும் தயாராக உள்ளது. இந்தியாவின் மாணவர்கள், அரசியல் பரப்புரைகளின் ஒரு பகுதியாக மாற்றப்படுவதைவிட சிறந்த முறையில் நடத்தப்படத் தகுதியானவர்கள். அவர்களுக்குத் தேவை குழப்பம் அல்ல, நம்பிக்கை. கோஷங்கள் அல்ல, தீர்வுகள் தேவை. முட்டுக்கட்டைகள் அல்ல, பொறுப்புணர்வு தேவை," எனக் கூறினார்.

"நமது மாணவர்களின் கோபத்துக்கு மட்டுமின்றி, அவர்களின் கேள்விகளுக்கான பதில்கள், சீர்திருத்தங்கள், பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கும் நாடாளுமன்றமே பொறுப்பாகும். இந்த விஷயங்களில் பணியாற்றுவதில் எங்கள் அரசு முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளது" எனவும் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியக் குறிப்பு

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணிநேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு