'மாரடைப்பால் இறந்தார்' என கூறி தகனத்திற்கு தயாரான சடலம் - கடைசி நேரத்தில் போலீஸ் தடுத்தது ஏன்? மகன், மனைவி கைது

குற்றம், கொலை, காவல்துறை, வாலாஜாபாத்
படக்குறிப்பு, மதுசூதனன் (மகன்) - ரேணுகா (தாய்)
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

'தந்தையைக் கொன்றுவிட்டு, மாரடைப்பு' எனக் கூறி நாடகம் ஆடியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில், மகன் மற்றும் தாயை செப்டம்பர் 15ஆம் தேதி கைது செய்துள்ளதாக வாலாஜாபாத் காவல்துறை தெரிவித்துள்ளது.

"நாங்கள் சென்றபோது உடலைத் தகன மேடைக்குக் கொண்டு செல்லும் பணிகள் நடந்து கொண்டிருந்தன. சிறிது தாமதித்து இருந்தாலும் தகனம் செய்திருப்பார்கள்" என்கிறார் காவல் ஆய்வாளர் வெற்றிச்செல்வன்.

இந்த வழக்கில் மகன் மற்றும் தாய் மீது கொலை, தடயங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகே வாலாஜாபாத் ஒன்றியத்தில் மருதம் கிராமம் அமைந்துள்ளது. விவசாயம் பிரதானமாக உள்ள இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான சிவபாதம், அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநராக இருந்த ஓய்வு பெற்றுவிட்டார்.

இவரது மனைவி ரேணுகா. இந்தத் தம்பதியின் ஒரே மகனான மதுசூதனன், கப்பல் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

"ஆனால், கடந்த பத்து மாதங்களாக அவர் வேலைக்குச் செல்லவில்லை. கப்பல் பணியிடங்களில் இரண்டாம் நிலை அதிகாரிக்கான தேர்வை எழுதுவதற்காகத் தயாராகி வந்துள்ளார்" எனக் கூறுகிறார் வாலாஜாபாத் காவல் நிலைய ஆய்வாளர் வெற்றிச்செல்வன்.

சிவபாதத்திற்கு சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள பெருங்குடியில் சில சொத்துகள் இருந்துள்ளன. இப்பகுதியில் வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

குற்றம், கொலை, காவல்துறை, வாலாஜாபாத்
படக்குறிப்பு, சிவபாதம்

சொத்துக்காக நடந்த வாக்குவாதம்

பெருங்குடியில் தனக்குச் சொந்தமான ஒரு வீட்டில் மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் சிவபாதம் வசித்து வந்துள்ளார். "வீட்டு வாடகை மூலம் கிடைத்த வருமானத்தில் மதுசூதனனும் குடும்பம் நடத்தி வந்தார். இவருக்கு நான்கு வயதில் குழந்தை ஒன்று உள்ளது" என்கிறார் காவல் ஆய்வாளர் வெற்றிச்செல்வன்.

இந்த நிலையில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிவபாதத்திற்குக் கடந்த சில மாதங்களாக நோயின் தீவிரம் அதிகரித்துள்ளது. அவரது வலது கால் கட்டை விரலைக் கடந்த ஆகஸ்ட் மாதம் அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

"இதனால் மருத்துவம் உள்ளிட்ட செலவுகள் அதிகமானது. அது தவிர, குடிப்பழக்கத்திற்கு சிவபாதம் ஆட்பட்டிருந்தார். அவர் கூடுதல் செலவு செய்வதாகக் கூறி மகனும் மனைவியும் வாக்குவாதம் செய்து வந்துள்ளனர்" எனக் கூறுகிறார் காவல் ஆய்வாளர் வெற்றிச்செல்வன்.

"கட்டை விரல் அகற்றப்பட்ட பிறகு கட்டு போடப்பட்டு இருந்தாலும் வீட்டிலுள்ள குழந்தைக்குத் தொற்று ஏற்பட்டுவிடுமென மருமகள் கூறியுள்ளார். இதனால் கோபப்பட்டு 15 நாட்களுக்கு முன்னதாக மருதம் கிராமத்திற்கு சிவபாதம் சென்றுவிட்டார்" எனவும் அவர் தெரிவித்தார்.

குற்றம், கொலை, காவல்துறை, வாலாஜாபாத்
படக்குறிப்பு, சிவபாதத்தின் வீடு

சம்பவ நாளில் என்ன நடந்தது?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கடந்த 13ஆம் தேதியன்று உறவினர் ஒருவரின் புதுமனை புகுவிழாவில் பங்கேற்பதற்காக, முதல் நாள் மதுசூதனும் அவரது தாய் ரேணுகாவும் மருதம் கிராமத்திற்கு வந்துள்ளனர்.

"மறுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அதிகாலையிலேயே ரேணுகா கிளம்பிவிட்டார். சுமார் 7.15 மணியளவில் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் மதுசூதனன் பங்கேற்றார். தாயும் மகனும் பரிசுப் பொருளைக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளனர்" என்றார் வெற்றிச்செல்வன்.

வீட்டுக்குள் நுழைந்தவுடன் 'அப்பா எங்கே?' என ரேணுகா கேட்டதாகவும் மாடியில் இருப்பதாக மதுசூதனன் கூறியதாகவும் தெரிவித்தார் வெற்றிச்செல்வன். பின்னர், அவர் "மாடிக்குச் சென்றபோது ரத்த வெள்ளத்தில் சிவபாதம் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட்டதாக விசாரணையில் இருவரும் தெரிவித்தனர்" எனக் கூறினார்.

"புதுமனை புகுவிழாவுக்குச் செல்வதற்கு முன்னதாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கழுத்து மற்றும் காலில் சிவபாதத்தை ஆயுதங்களால் மதுசூதனன் தாக்கியதாக விசாரணையில் தெரிய வந்தது" என்றும் அவர் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, தந்தை - மகன் ஆகியோருக்கு இடையே சொத்து தொடர்பான தகராறு அண்மைக் காலமாக இருந்து வந்துள்ளது. ஒரு கட்டத்தில் தனது சொத்துகளை ஆதரவற்றோர் இல்லத்திற்கு எழுதி வைக்கவுள்ளதாக சிவபாதம் கூறி வந்துள்ளார். அதன் காரணமாகவே கொலை நடந்துள்ளது" என்றார்.

செப்டம்பர் 13ஆம் தேதி காலையில் சிவபாதம் உயிரிழந்த பிறகு அதை மறைக்கும் முயற்சியில் மகனும் தாயும் ஈடுபட்டதாகக் காவல்துறை கூறியுள்ளது.

"அங்கிருந்த ரத்தக் கறைகளைத் துடைத்துவிட்டு போர்வையால் சிவபாதத்தின் உடலைப் போர்த்தியுள்ளனர். ரத்தம் வந்த இடங்களில் கட்டுப்போட்டு மறைத்துள்ளனர்" எனக் கூறுகிறார் காவல் ஆய்வாளர்.

குற்றம், கொலை, காவல்துறை, வாலாஜாபாத்

உறவினர்களுக்கு சிவபாதம் இறந்த தகவலைக் கூறும்போது, 'தூக்கத்திலேயே உயிர் போய்விட்டது. காலையில் எழுப்பும்போது அசைவில்லை. மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது' எனக் கூறியுள்ளனர்.

காவல் ஆய்வாளர் வெற்றிச்செல்வனின் கூற்றுப்படி, "சிவபாதத்துக்கு உடன்பிறந்த சகோதரிகள் நான்கு பேர் உள்ளனர். இவர்களுடன் சிவபாதத்தின் குடும்பத்தினருக்கு சரிவர பேச்சுவார்த்தைகள் இல்லை. அன்று மாலை மருதம் கிராமத்தில் உள்ள மயானத்தில் உடலை எரிப்பதற்கான பணிகள் நடந்துள்ளன."

தகன மேடையில் தடுக்கப்பட்ட இறுதிச் சடங்கு

அப்போது சிவபாதத்தின் மரணம் குறித்த ஒரு தகவல் கிடைத்ததாகவும், அதில், "சிவபாதத்தின் உடலில் காயங்கள் உள்ளன. ஆனால், மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாகக் கூறுகின்றனர். இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளது" எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து, வாலாஜாபாத் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். "தகன மேடைக்குக் கொண்டு செல்வதற்குத் தயார் நிலையில் சடலம் வைக்கப்பட்டிருந்தது. இறப்பில் சந்தேகம் உள்ளதால் உடற்கூறாய்வுக்கு அனுப்புகிறோம். அறிக்கை வந்த பிறகு உங்கள் வழக்கப்படி எரியூட்டிக் கொள்ளுங்கள்" எனக் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிவபாதத்தின் உடல் கொண்டு செல்லப்பட்டது. செப்டம்பர் 14ஆம் தேதியன்று உடற்கூறாய்வு நடந்துள்ளது.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய உத்தரமேரூர் டி.எஸ்.பி கேசவன், "உடற்கூறாய்வின் முடிவில் சிவபாதம் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தினோம். குடும்பத்திற்குள் சொத்துப் பிரச்னை இருந்துள்ளது. அதன் காரணமாகவே கொலை நடந்துள்ளது" எனக் கூறினார்.

குற்றம், கொலை, காவல்துறை, வாலாஜாபாத்
படக்குறிப்பு, காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகே வாலாஜாபாத் ஒன்றியத்தில் மருதம் கிராமம் அமைந்துள்ளது.

'குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை'

"உடற்கூறாய்வு அறிக்கையில் கொலை எனத் தெரிந்த பிறகும் மகனும் தாயும் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை" எனக் கூறுகிறார், காவல் ஆய்வாளர் வெற்றிச்செல்வன்.

மாரடைப்பு ஏற்பட்டுவிட்டு இறந்துவிட்டதாகவே நாள் முழுவதும் இருவரும் கூறியதாகவும், விசாரணையின்போது, மதுசூதனனின் மனைவியை இந்த வழக்கில் சேர்க்கவுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். அப்போது, "இருவர் செய்த தவறால் மருமகளும் சிறை செல்ல வேண்டுமா?' என்று நாங்கள் கூறிய பிறகு, ஒரு கட்டத்தில் தனது தந்தையை ஆயுதங்களால் வெட்டியதை மதுசூதனன் ஒப்புக் கொண்டார்" என்கிறார் காவல் ஆய்வாளர்.

இதையடுத்து, கொலை, தடயங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளில் தாய், மகன் இருவரையும் கைது செய்த காவல்துறை 15ஆம் தேதி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இதன் பிறகு இருவரும் வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

"இந்த வழக்கில் சிவபாதத்தின் உறவினர்களிடம் இருந்து நேரடியாக எந்தப் புகாரும் வரவில்லை" எனக் கூறும் காவல் ஆய்வாளர் வெற்றிச்செல்வன், "மரணம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.

"காவல்துறை சற்று தாமதமாகச் சென்றிருந்தாலும் சடலத்தை எரியூட்டியிருப்பார்கள். உரிய நேரத்திற்குள் சென்றதால் வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டனர்" என்கிறார், உத்தரமேரூர் டி.எஸ்.பி கேசவன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு