சேலை அணிந்து 9 நிமிடத்தில் 1,600 மீட்டர் ஓடிய கவிதா

அக்டோபர் 4 அன்று, கவிதா தேவி புடவை அணிந்து ஓடும் வீடியோ ஒன்று வைரலானது.
படக்குறிப்பு, அக்டோபர் 4 அன்று, கவிதா புடவை அணிந்து ஓடும் வீடியோ ஒன்று வைரலானது.
    • எழுதியவர், முகமது சர்தாஜ் ஆலம்
    • பதவி, பிபிசி இந்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கிராமப்புறப் பெண் ஒருவர் சேலை அணிந்தபடி வெறுங்காலுடன் ஓடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

முதலில் பார்க்கையில், இந்தக் காணொளி திரைப்படக் காட்சி போல தோன்றலாம் . ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள சிடோ-கான்ஹு மைதானத்தில்தான் கவிதா மஹதோ என்கிற பெண்மணி ஓடினார்.

இது ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்புக்காக தேர்வுக்கு முன்பாக நடத்தப்பட்ட பயிற்சி 1,600 மீட்டர் ஓட்டப்பந்தையத்தின்போது எடுக்கப்பட்ட காணொளி. இதைப் பார்த்த பலரும் கவிதா மஹதோவைப் பாராட்டி வருகின்றனர். அவர் குடும்பத் தலைவியாக இருப்பதுடன், கணவரையும் இழந்தவர்.

நவீன விளையாட்டு காலணிகள், டிராக்சூட் மற்றும் தொழில்முறை பயிற்சி உபகரணங்கள் என எதுவும் இல்லாமல், கவிதா சேலை அணிந்தபடியும் வெறுங்காலுடனும் இந்த 1600 மீட்டர் ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

முதல் முறையாக ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்பு

அந்தக் காணொளி வைரலானதைத் தொடர்ந்து, பயிற்சியாளர் அங்கித் அகர்வால் கவிதாவுக்கு இலவசப் பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளார்.
படக்குறிப்பு, அந்தக் காணொளி வைரலானதைத் தொடர்ந்து, பயிற்சியாளர் அங்கித் அகர்வால் கவிதாவுக்கு இலவசப் பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் 284 ஊர்க்காவல் படை பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்புப் பணிகள் அக்டோபர் 24 முதல் நவம்பர் 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விதிகளின்படி, 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

கணவனை இழந்த பெண்களுக்கும் விவாகரத்து பெற்ற பெண்களுக்கும் 5 சதவீத கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான பெண்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், முக்கிய ஆள்சேர்ப்பு முகாமுக்கு முன்பு, விண்ணப்பதாரர்களின் தயாரிப்பைச் சோதிப்பதற்கும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வாய்ப்பளிப்பதற்கும் ராம்கரில் உள்ள உள்ளூர் மைதானத்தில் 1600 மீட்டர் ஓட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

விதிகளின்படி, பெண் விண்ணப்பதாரர்கள் 1600 மீட்டர் தூரத்தைக் கடக்க 10 நிமிடம் கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

கவிதாவும் அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெற்ற இந்த ஓட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றார்.

அவர் ஒரு தொழில்முறை ஓட்டப்பந்தய வீரரைப் போல அல்லாமல், ஒரு சாதாரண கிராமத்து இல்லத்தரசியைப் போல சேலை அணிந்து கொண்டு வெறுங்காலுடன் ஓடத் தொடங்கினார்.

இந்தக் கடினமான சவாலை அவர் வெறும் ஒன்பது நிமிடங்களில் வெற்றிகரமாக முடித்துக் காட்டினார்.

இந்தப் பயிற்சி ஓட்டத்தை ஏற்பாடு செய்த பயிற்சியாளர் அங்கீத் அகர்வால், "வளங்களின் பற்றாக்குறை எப்போதுமே லட்சியங்களுக்கும் கனவுகளுக்கும் தடையாக இருக்க முடியாது என்பதை கவிதா நிரூபித்துக் காட்டியுள்ளார்" என்றார்.

ஓடும்போது நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 1600 மீட்டர் தூரத்தைத் தாண்டிவிட முடியுமா இல்லையா என்ற கேள்விதான் தன் மனதில் ஓடிக்கொண்டிருந்ததாக பிபிசி இந்தியிடம் பேசிய கவிதா கூறினார்.

மேலும் அவர், "ஆனால் நான் முன்னேறிச் சென்றபோது, சில சகோதரிகள் பின்னால் தங்கிவிட்டனர்; அந்தச் சூழலில் எனது தைரியம் அதிகரித்தது, எனது முயற்சிகளைத் தீவிரப்படுத்தினேன், எனக்கு இந்த வெற்றியும் கிடைத்தது." என்று தெரிவித்தார்.

குடும்பத்தினர் அளித்த ஊக்கம்

தனது மருமகளை அதிகாலையில் கிராமத்திற்கு அழைத்துச் சென்று, இரண்டு மாதங்களுக்கு ஓட்டப்பயிற்சி செய்ய வைத்ததாக கவிதாவின் மாமியார் ஃபுல்கோ தேவி கூறுகிறார்.
படக்குறிப்பு, தனது மருமகளை அதிகாலையில் கிராமத்திற்கு அழைத்துச் சென்று, இரண்டு மாதங்களுக்கு ஓட்டப்பயிற்சி செய்ய வைத்ததாக கவிதாவின் மாமியார் ஃபுல்கோ தேவி கூறுகிறார்.

மைதானத்தில் கவிதாவின் காலடிகள் எவ்வளவு வேகமாக இருந்தனவோ, அதே அளவு அவரது வாழ்க்கைப் பயணமும் பல போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தது. நீண்ட கால நோய்க்குப் பிறகு, கவிதாவின் கணவர் 2023-இல் காலமானார்.

கணவர் இறப்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அவருக்குக் கல்லீரல் கோளாறு ஏற்பட்டதாகவும், ஆனால் சிகிச்சையை அலட்சியப்படுத்தியதால் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததாகவும் கவிதா விளக்குகிறார். அவர் குஜராத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மேற்பார்வையாளராகப் வேலை பார்த்து வந்தார்.

கவிதா 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார், அவருக்கு தற்போது 31 வயது ஆகிறது.

கணவரின் இறப்புக்குப் பிறகு அவரது மைத்துனர் குடும்பத்தைக் கவனித்து வந்தார். ஆனால் நோய்வாய்ப்பட்டிருந்த அவரது மைத்துனரும் 2025-இல் காலமானார்.

கவிதாவுக்கு 13 வயதில் ஒரு மகளும், 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் சோசோ கிராமத்தில் உள்ள கவிதாவின் வயதான மாமியார்-மாமனாருடன் வசித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், அவரது மைத்துனரின் மனைவியான சரிதா, ராம்கரில் உள்ள தனது தாய்வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறார்.

அங்குதான் ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிக் கவிதாவுக்குத் தெரியவந்துள்ளது. அதன்பிறகு அவர் ஓட்டப்பந்தயத்திற்குத் தயாராகத் தொடங்கி, சரிதாவிடம் படிவத்தை நிரப்புமாறு கூறியுள்ளார்.

"கிராம மக்கள் எனக்காக வசிப்பிட மற்றும் சாதிச் சான்றிதழ்களைப் பெற்றுத் தந்தனர். இது எனக்கு ஊக்கமளித்தது, உடல் பரிீட்சைக்குத் தயாராகும் வகையில் அதிகாலை 4 மணிக்கே கிராமத்திற்கு வெளியே ஓடத் தொடங்கினேன்." என்று கவிதா கூறுகிறார்,

கணவரின் மறைவுக்குப் பின் தொடரும் போராட்டம்

கவிதாவின் கணவர் மற்றும் மைத்துனர் இறந்த பிறகு, குழந்தைகள் மற்றும் கணவர் வீட்டு உறவினர்கள் ஆகிய இரு தரப்பினரையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அவர் தோள்களில் விழுந்துள்ளது.
படக்குறிப்பு, கவிதாவின் கணவர் மற்றும் மைத்துனர் இறந்த பிறகு, குழந்தைகள் மற்றும் கணவர் வீட்டு உறவினர்கள் ஆகிய இரு தரப்பினரையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அவர் தோள்களில் விழுந்துள்ளது.

கவிதாவின் மாமியார் ஃபுல்கோ தேவி, "எங்களிடம் உள்ள ஒரே சொத்து இந்த இரண்டு அறை வீடுதான். எனது இரண்டு மகன்களும் திருமணத்திற்கு முன்பு குஜராத்தில் வேலை செய்து சம்பாதித்துக் கட்டியவை இவை." என்கிறார்.

ஃபுல்கோ தேவியின் பக்கத்து வீட்டுக்காரரான சச்சின் குமார், ஃபுல்கோ தேவியின் மகன்கள் கடின உழைப்பால் சம்பாதித்த சேமிப்பு அனைத்தும் நீண்டகால நோய்க்கான சிகிச்சையிலேயே செலவழிக்கப்பட்டுவிட்டதாக கூறுகிறார்.

"இத்தகைய சூழலில், குடும்பத்தின் நிதி நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. முன்பு குடும்பம் நல்ல நிலையில்தான் இருந்தது. இப்போது இந்தக் குடும்பம் கடனாளியாகவும் மாறியுள்ளது," என்கிறார் சச்சின் குமார்.

"வீட்டை நடத்துவதற்காக, மாட்டுப் பால் விற்பது தவிர, எங்கள் கிராமத்தில் நெல், மக்காச்சோளம் மற்றும் நிலக்கடலைத் தோட்டங்களில் கூலி வேலை செய்கிறோம். கோடைகாலங்களில், செங்கல் சூளை வேலைகளிலும் கிடைக்கும்," என்று கவிதா தெரிவிக்கிறார்.

"எனது இரண்டு மருமகள்களும் கணவனை இழந்தவர்கள். அவர்கள் இருவரும் ஊர்க்காவல் படை வேலையில் சேர்ந்தால், என் பேரப்பிள்ளைகளின் சிறப்பான வளர்ப்பதுடன், எங்களது முதிய வயதும் நிம்மதியாகக் கழியும்." என்கிறார் ஃபுல்கோ தேவி

"நான் ஏதாவது முக்கியமான வேலைக்காக வெளியே செல்ல வேண்டும் என்றாலோ, குடும்பத்தில் திருமணம் என்றாலோ அல்லது யாருடைய வீட்டிலாவது சோகமான நிகழ்வு நடந்தாலோ குடும்பத்தின் சார்பாக நான்தான் செல்ல வேண்டும்," என்று கவிதா கூறுகிறார்.

வேலைக்காக கிராமத்தில் ஓடத் தொடங்கிய கவிதா

கவிதா ஓடிய காணொளி வைரலான பிறகு, அவரது பயிற்சியாளர் அவருக்கு ஓடுவதற்கான டிராக் சூட் மற்றும் காலணிகளையும் வழங்கினார்.
படக்குறிப்பு, கவிதா ஓடிய காணொளி வைரலான பிறகு, அவரது பயிற்சியாளர் அவருக்கு ஓடுவதற்கான டிராக் சூட் மற்றும் காலணிகளையும் வழங்கினார்.

பயிற்சி ஓட்டத்தை ஏற்பாடு செய்த பயிற்சியாளர் அங்கீத் அகர்வால், இப்போது கவிதாவுக்கு இலவசப் பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளார். மற்ற பெண் விண்ணப்பதாரர்களுக்கும் அவர் இந்த உதவியை நீட்டித்து வருகிறார்.

சோதனை ஓட்டத்தின் போது கவிதாவின் திறமையை அவர் கண்டறிந்தார்.

இருப்பினும், இந்தப் பயிற்சிக்குச் செல்வது கூட கவிதாவுக்கு எளிதானதாக இல்லை. தினமும் காலையில் சீக்கிரமாக எழுந்து, வெறும் வயிறோடு சுமார் 16 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து ராம்கர் மைதானத்திற்குச் செல்வதாக அவர் கூறுகிறார்.

அங்கு மற்ற பெண் விண்ணப்பதாரர்களுடன் காலை பத்து மணி வரை பயிற்சி பெற்றுவிட்டு மீண்டும் தனது சோசோ கிராமத்திற்குத் திரும்புவார்.

பயிற்சி ஓட்டம் நடந்த நாளன்று கூட தான் வெறும் வயிறோடுதான் மைதானத்தில் ஓடியதாகக் கவிதா கூறினார்.

"1600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை என்னால் முடிக்க முடியும் என்ற எந்த எண்ணமும் எனக்கு இல்லை. ஆனால் கடவுள் என்னை ஆசீர்வதித்தார், காணொளி வைரலான பிறகு எனக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கும் ஒரு பயிற்சியாளர் கிடைத்தார்," என்கிறார் கவிதா.

கவிதா ஓடும் காணொளி வைரலானதைத் தொடர்ந்து, பயிற்சியாளர் அவருக்கு ஓடுவதற்காக ஒரு டிராக்சூட் மற்றும் காலணிகளையும் வழங்கினார்.

ஆனால் தனது ஓட்டப்பந்தய காணொளி வைரலானதால் ஏற்பட்டுள்ள இந்த வெளிச்சம் கவிதாவுக்கு சற்று சங்கடத்தையே தருகிறது. எதிர்காலத்தில் தான் தோல்வியடைந்துவிட்டால் மக்கள் என்ன சொல்வார்கள் என்ற கவலையும் அவருக்கு உள்ளது.

இது தொடர்பாக மேலும் பேசிய கவிதா, "காணொளி வைரலான பிறகு, எங்களுக்கு மிகவும் விசித்திரமாக இருக்கிறது. அக்டோபர் 25-ஆம் தேதி நடக்கும் ஓட்டத்தில் நான் வெற்றிபெறவில்லை என்றால், என் கிராமத்து மக்கள் என்னை கேலி செய்வார்கள் என்று நினைத்து பயமாக இருக்கிறது." என்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு