மனிதனை மனிதனே கொன்று தின்ற கொடூர பஞ்சம் பற்றி தெரியுமா? சமூக தார்மீகங்களை அசைத்துப் பார்த்த 'பசி'

கலீஃபா அல்-முஸ்தன்சிர் பில்லாஹ், பத்ர் அல்-ஜமாலி, எகிப்து

பட மூலாதாரம், TrustPast

படக்குறிப்பு, எட்டாவது பாத்திமிட் கலீஃபா அல்-முஸ்தன்சிர் பில்லாஹ்வின் ஆட்சியின்போது ஏற்பட்ட பஞ்சத்தில், இறந்தவர்களின் உடல்கள் கூட விட்டுவைக்கப்படவில்லை.
    • எழுதியவர், வக்கார் முஸ்தபா
    • பதவி, பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையின் சில பகுதிகள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்

கெய்ரோவின் அந்தச் சதுக்கத்தில், ஓர் அமைச்சரின் கோவேறு கழுதையைத் திருடி, அதைக் கொன்று, அதன் சதையைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் முந்தைய நாள் மாலை தூக்கிலிடப்பட்ட மூன்று பேரின் எலும்புக்கூடுகள் மட்டுமே எஞ்சியிருந்தன.

11-ஆம் நூற்றாண்டில் எட்டாவது பாத்திமிட் (Fatimid) கலீஃபா அல்-முஸ்தன்சிர் பில்லாஹ்-வின் ஆட்சியின் போது எகிப்தை உலுக்கிய இந்தப் பஞ்சம், இறந்தவர்களின் எச்சங்களைக் கூட விட்டுவைக்கவில்லை.

ஏழு ஆண்டுகள் நீடித்த இந்த நெருக்கடி, அதே கலீஃபாவின் பெயரால் வரலாற்றில் 'அல்-ஷித்தத் முஸ்தன்சிரியா' அல்லது 'முஸ்தன்சிரி இப்திலா' (நெருக்கடி) என்று அழைக்கப்படுகிறது.

அல்-முஸ்தன்சிர் பில்லாஹ்-வின் உண்மையான பெயர் மாத் அபு-தமீம். கி.பி 1036-இல் தனது ஏழு வயதிலேயே இவர் கலீஃபாவாகப் பொறுப்பேற்றார். அக்காலகட்டத்தில் பாத்திமிட் பேரரசு எகிப்து, வட ஆப்பிரிக்கா, சிசிலி, சிரியாவின் சில பகுதிகள் மற்றும் ஹிஜாஸ் (மெக்கா மற்றும் மதீனாவை உள்ளடக்கிய அரேபிய தீபகற்பத்தின் வடமேற்குப் பகுதி) வரை விரிவடைந்திருந்தது.

இருப்பினும், அவரது இளம் வயது காரணமாக, ஆரம்ப ஆண்டுகளில் கலீஃபா பதவி என்பது பெரும்பாலும் பெயரளவில் மட்டுமே இருந்தது. அதிகாரம் நடைமுறையில் அமைச்சர்கள் மற்றும் அவரது தாயாரின் கைகளில்தான் இருந்தது.

அல்-முஸ்தன்சிர் பில்லாஹ்: எழுச்சி முதல் வீழ்ச்சி வரை

கலீஃபா அல்-முஸ்தன்சிர் பில்லாஹ், பத்ர் அல்-ஜமாலி, எகிப்து

பட மூலாதாரம், TrustPast

படக்குறிப்பு, கலீஃபாவின் இளம் வயது காரணமாக, அவரது ஆரம்ப ஆண்டுகளில் அதிகாரம் அவரது தாயாரின் கைகளில்தான் இருந்தது.

அல்-முஸ்தன்சிர் பில்லாஹ்-வின் பாத்திமிட் கலீஃபா ஆட்சி, அதன் ஆரம்ப தசாப்தங்களில் மிகவும் செழிப்பாக இருந்தது. இந்தியப் பெருங்கடல் மற்றும் கான்ஸ்டான்டிநோபிள் (பைசன்டைன் பேரரசு) ஆகிய வணிக மையங்களுடன் எகிப்து கொண்டிருந்த லாபகரமான வர்த்தக உறவுகளே இந்தச் செழிப்புக்கு அடிப்படையாக அமைந்தன.

இதே காலகட்டத்தில், கெய்ரோவில் நூலகங்கள் பெருகின; அறிவியல் இலக்கியங்கள் ஊக்குவிக்கப்பட்டன.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சொல்லப்போனால், கி.பி 1059-இல் குறுகிய காலத்திற்கு பாக்தாத் மீதும் இவர்களது செல்வாக்கு நிலைநிறுத்தப்பட்டது. ஆனால், 1094-இல் அல்-முஸ்தன்சிரின் மரணத்துடன் முடிவடைந்த 58 ஆண்டு கால ஆட்சியில் (இதில் பெரும்பகுதியை அவர் மிகுந்த அரச ஆடம்பரத்துடன் கழித்தார்), பாத்திமிட் அரசாங்கம் தீவிரமான மற்றும் சீர்செய்ய முடியாத அதிர்ச்சிகளைச் சந்தித்தது. அதிலிருந்து அந்தப் பேரரசால் மீளவே முடியவில்லை.

வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, பாத்திமிட் பேரரசின் நிர்வாக மற்றும் ராணுவக் கட்டமைப்பு உள்ளுக்குள்ளேயே பலவீனமடைந்தது. இதனால், எகிப்து பல ராணுவக் குழுக்களுக்கு இடையிலான போர்களின் களமாகத் தொடர்ந்து மாறியது.

இந்த மோதல்களின் போக்கை மாற்றுவதற்கோ அல்லது அவற்றின் மீது உறுதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கோ அல்-முஸ்தன்சிரால் முடியவில்லை. ஆயினும், சில சந்தர்ப்பங்களில் அவரே ராணுவத்தை வழிநடத்தினார்.

ராணுவத்தின் விசுவாசம் என்பது ஊதியம், உடைமைகள் மற்றும் அரச பாதுகாப்பு ஆகியவற்றைச் சார்ந்து இருந்ததால், வரையறுக்கப்பட்ட வளங்களைக் கைப்பற்றுவதற்கான போராட்டம் தீவிரமடைந்தது.

படிப்படியாக, உண்மையான அதிகாரம் கலீஃபாவிடமிருந்து அமைச்சர்களுக்கு மாறத் தொடங்கியது. அவர்கள் தற்காலிக அரசியல் ஆதாயங்களுக்காகப் பல்வேறு குழுக்களுடன் கூட்டணிகளை உருவாக்கினர். விசுவாசத்தை பெறுவதற்காகச் செல்வங்களையும் (இக்தாஅத்) உதவித்தொகைகளையும் வாரி வழங்கினர். இது அரசுக் கருவூலம் காலியாகவும், நிர்வாக அமைப்பு முடங்கவும் வழிவகுத்தது.

1060-களில் நெருக்கடி மேலும் தீவிரமடைந்தது. துருக்கிய மற்றும் சூடானிய வீரர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டி பகிரங்கமான உள்நாட்டுப் போராக வெடித்தது.

இந்தக் குழுக்கள் கெய்ரோவைச் சூறையாடின; தானிய விநியோகத்தைச் சீர்குலைத்து, அரசின் நிர்வாகத்தை முற்றிலுமாக முடக்கின.

பஞ்சமும் உள்நாட்டுப் போரும்

கலீஃபா அல்-முஸ்தன்சிர் பில்லாஹ், பத்ர் அல்-ஜமாலி, எகிப்து

பட மூலாதாரம், TrustPast

படக்குறிப்பு, 1096-ஆம் ஆண்டில், அன்றாட உணவு சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டது என்று மோர்கன் எழுதுகிறார்.

கி.பி 1065 முதல் 1072 வரை ஏழு ஆண்டுகளாக, நைல் நதியின் வருடாந்திர வெள்ளம் எகிப்தின் பாரம்பரிய நீர்ப்பாசன முறைக்குத் தேவையான அளவை எட்டவில்லை. இதனால் பரந்த விவசாய நிலங்கள் தரிசாக மாறின; கோதுமை, பார்லி போன்ற முக்கியப் பயிர்கள் பெருமளவு அழிந்தன.

நாடு ஏற்கெனவே பொருளாதார ரீதியாகவும் விவசாய ரீதியாகவும் பலவீனமாகவே இருந்தது. பல ஆண்டுகளாகக் கால்வாய்கள், அணைகள் மற்றும் நீர்ப்பாசன அமைப்புகள் சரிசெய்யப்படாததால், சிறிய அளவிலான வெள்ளம் கூட பேரழிவை ஏற்படுத்தியதாக எகிப்திய வரலாற்று ஆசிரியர் தகி உத்தின் அல்-மக்ரிஸி எழுதுகிறார்.

சமகால அறிக்கைகளின்படி, கடுமையான வறட்சி நிலவிய ஆண்டுகளில் பயிர் உற்பத்தி வழக்கத்தை விட 80 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்தது.

விவசாயத்தின் அழிவால், எகிப்திய மக்களின் முக்கிய உணவான ரொட்டி செய்வதற்கு ஏற்ற தானியங்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. பொதுவாக ஆப்பிரிக்காவுக்கும் (இன்றைய துனிசியா) ஹிஜாஸுக்கும் தானியங்களை ஏற்றுமதி செய்துவந்த எகிப்து, இப்போது கடுமையான உணவுப் பற்றாக்குறையின் பிடியில் சிக்கியது.

கால்நடைகளுக்குத் தீவனம் இல்லாததால் ஏராளமான விலங்குகள் இறந்தன; இது பால் மற்றும் இறைச்சி விநியோகத்தையும் கடுமையாகப் பாதித்தது.

'காப்டிக் ஆர்த்தடாக்ஸ் மக்களும் எகிப்திய தேவாலயமும்' என்ற நூலில் ராபர்ட் மோர்கன் குறிப்பிடுகையில், 1065 முதல் 1072 வரை நீடித்த இந்தப் பஞ்சம், ஏற்கெனவே மோசமாக இருந்த நிலைமையை பேரழிவுச் சூழலாக மாற்றியது என்கிறார்.

பாத்திமிட் பேரரசு ஏற்கெனவே கடுமையான ராணுவச் செலவுகளால் பெரும் சுமைக்கு ஆளாகியிருந்தது என்பதைப் பல்வேறு வரலாற்றுப் புத்தகங்கள் வெளிப்படுத்துகின்றன.

ராணுவக் குழுக்களுக்கு இடையிலான மோதல்களின் விளைவாக, நைல் நதி மற்றும் செங்கடல் வழியாக நடைபெற்றுவந்த வர்த்தகம் ஏறக்குறைய ஸ்தம்பித்தது.

துணி, பாப்பிரஸ் (காகிதம் தயாரிக்கப் பயன்படும் ஒரு நீர்வாழ் தாவரம்) மற்றும் உபரி தானியங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் பெரும் வருமானத்தைப் பெற்றுவந்த எகிப்து, இப்போது தனது வர்த்தக மேலாதிக்கத்தை இழக்கத் தொடங்கியது.

1066 மற்றும் 1067-ஆம் ஆண்டுகளில், வியாபாரிகள் உணவைப் பதுக்கத் தொடங்கினர். இதனால் விலைகள் கடுமையாக உயர்ந்ததோடு கள்ளச்சந்தையும் உருவானது.

மோர்கனின் கூற்றுப்படி, நெருக்கடியைச் சமாளிப்பதற்கான அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் உள்நாட்டுப் போர் சீர்குலைத்தது.

அமைச்சர் அபு முஹம்மது அல்-பசாரி படுகொலை செய்யப்பட்டதாலும், அமைச்சர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டதாலும் அரசாங்கத்தால் எவ்விதமான உறுதியான நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

அரசு அதிகாரிகள் பொதுமக்களை ஆதரிப்பதற்குப் பதிலாகத் தங்கள் சொந்தக் குழுக்களை வலுப்படுத்துவதிலேயே மும்முரமாக இருந்தனர். இது நிர்வாகச் சீர்கேட்டை மேலும் மோசமாக்கியது.

பஞ்சம் தீவிரமடைந்த நிலையில், பாத்திமிட் ராணுவத்தில் இருந்த பல்வேறு இனக் குழுக்களுக்கு இடையே பல ஆண்டுகளாக நிலவி வந்த பதற்றம் திறந்தவெளிப் போராக வெடித்தது. அரசுக் கருவூலத்திலிருந்து சம்பளம் மற்றும் சலுகைகளைப் பெறுவதில் துருக்கிய, சூடானிய, பெர்பர் மற்றும் பிற ராணுவப் பிரிவுகள் தங்களுக்குள் மோதிக்கொண்டன. காலியாகிவந்த கருவூலமும், வளர்ந்துவந்த பொருளாதார நெருக்கடியும் இந்தப் பகையை மேலும் தூண்டின.

உள்நாட்டுப் போர் விரைவில் மக்களுக்கு மற்றொரு பேரழிவாக மாறியது. சம்பளம் வழங்கப்படாத வீரர்கள் பொதுமக்களைத் தாக்கினர்; வீடுகளையும் சந்தைகளையும் சூறையாடினர்; விவசாய உள்கட்டமைப்பை அழித்தனர். உணவு விநியோகம் தடைபட்டது, வர்த்தகம் சீர்குலைந்தது, ஏற்கனவே கடுமையாக இருந்த பஞ்சம் மிக மோசமானது.

பட்டினியும் மனிதச் சதை விற்பனையும்

கலீஃபா அல்-முஸ்தன்சிர் பில்லாஹ், பத்ர் அல்-ஜமாலி, எகிப்து

பட மூலாதாரம், TrustPast

படக்குறிப்பு, இந்தப் பசி சமூகத்தின் தார்மீக அடித்தளங்களையும் அசைத்துப் பார்த்தது.

ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட கெய்ரோ, கடுமையான உணவுத் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டது. தோல் பொருட்கள் வேகவைக்கப்பட்டு உண்ணப்பட்டன; மக்கள் காட்டுத் தாவரங்களைத் தேடி அலையத் தொடங்கினர். தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீடுகள், நகைகள் மற்றும் பிற மதிப்புமிக்கப் பொருட்களை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் ஆளானார்கள்.

கி.பி 1069-இல், அன்றாட உணவு சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டது என்று மோர்கன் எழுதுகிறார்.

"கெய்ரோ, ஃபுஸ்டாட் மற்றும் பாபிலோன் நகரங்களில் ஒரு ரொட்டி பதினைந்து தினார்களுக்கு விற்கத் தொடங்கியது, ஒரு முட்டையின் விலை ஒரு தினாராக மாறியது."

வரலாற்று ஆசிரியர் இப்னு அல்-கலான்சியின் கூற்றுப்படி, கடுமையான உணவுத் தட்டுப்பாடும் தாங்க முடியாத பசியும் மக்களை இறந்த விலங்குகள், சடலங்கள், நாய்கள் மற்றும் பூனைகளை உண்ணக் கட்டாயப்படுத்தின. ஒரு நாயின் விலை ஐந்து தினார்களையும், பூனையின் விலை மூன்று தினார்களையும் எட்டியது. காலப்போக்கில், இந்த விலங்குகளும் அழியத் தொடங்கின.

மனிதச் சதையை விற்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவன் கைது செய்யப்பட்டதாக மோர்கன் எழுதுகிறார். "அவன் பெண்களையும் குழந்தைகளையும் (பெரும்பாலும் உணவுக்காக) தனது வீட்டிற்கு வரவழைத்து, அவர்களைக் கொன்று, உடலைத் துண்டு துண்டாக வெட்டி மாமிசமாக விற்பனை செய்தான்".

"நாட்டின் நெடுஞ்சாலைகள் எதுவும் திருடர்கள், கொள்ளையர்கள் அல்லது ஆயுதக் குழுக்களின் சூறையாடலிலிருந்து தப்பவில்லை; எங்கும் பாதுகாப்பில்லை."

அல்-மக்ரிஸியின் கூற்றுப்படி, உயிர்வாழ்வதற்கான போராட்டத்தில் மக்கள் ஒருவரையொருவர் கடத்தத் தொடங்கினர். சில குற்றவாளிகள் சாலையோரங்களில் உள்ள தாழ்வான வீடுகளில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட இரும்புக் கம்பிகள் மற்றும் கயிறுகளின் உதவியால் வழிப்போக்கர்களை உள்ளே இழுத்து, மரக்கட்டைகளால் அடித்துக் கொன்று, பின்னர் அவர்களின் உடல்களைத் துண்டுகளாக வெட்டி உண்பார்கள்.

"மக்கள் தங்களது அனைத்து உடைமைகளையும் ஒருசில பிடி உணவிற்காக விற்கத் தொடங்கினர்."

ஆயிரம் தினார் மதிப்புள்ள ஒரு ரொட்டி

கலீஃபா அல்-முஸ்தன்சிர் பில்லாஹ், பத்ர் அல்-ஜமாலி, எகிப்து

பட மூலாதாரம், TrustPast

படக்குறிப்பு, அல்-முஸ்தன்சிர் பில்லாஹ், அக்ரேயில் தங்கியிருந்த ஆர்மீனிய தளபதியான பத்ர் அல்-ஜமாலிக்கு எகிப்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

ஒரு பணக்காரப் பெண் ஒரு கைப்பிடி மாவை வாங்குவதற்காகத் தனது ஆயிரம் தினார் மதிப்புள்ள விலைமதிப்பற்ற நெக்லஸை விற்றாள் என்றும், ஆனால் அவள் வீடு திரும்பும் வழியில் அந்த மாவும் திருடப்பட்டதால், ஒரே ஒரு ரொட்டி செய்வதற்குத் தேவையான மாவு மட்டுமே அவளிடம் மிஞ்சியது என்றும் அல்-மக்ரிஸி கூறுகிறார்.

அவள் அந்த ஒரு ரொட்டியை எடுத்துக்கொண்டு, கலீஃபா அல்-முஸ்தன்சிர் பில்லாஹ்-வின் அரண்மனைக்கு அருகே உள்ள ஒரு மேடான இடத்தில் நின்று கத்தத் தொடங்கினாள்: "கெய்ரோ மக்களே! ஒரு ரொட்டியின் விலை ஆயிரம் தினார்களாக மாறியுள்ள இந்த அவல நிலையை உருவாக்கிய நமது ஆட்சியாளர் அல்-முஸ்தன்சிர் பில்லாஹ்-வுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்."

அதேபோல, ஒரு பணக்காரர் கலீஃபாவின் முன் நின்று, தான் எழுபது தினார்களுக்குக் கோதுமை வாங்கியதாகவும், ஆனால் அதுவும் வழியில் கொள்ளையடிக்கப்பட்டுத் தன்னிடம் எழுபது தானியங்கள் மட்டுமே மிஞ்சியிருப்பதாகவும் புகார் கூறினார்.

கெய்ரோ மற்றும் ஃபுஸ்டாட் போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் அதிகம் பாதிக்கப்பட்டன. வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, பட்டினியால் வாடிய மக்கள் எலும்புக்கூடுகளைப் போலத் தெருக்களில் அலைந்து திரிந்தனர்; நடக்கும்போதே சுருண்டு விழுந்து இறந்தனர்.

இந்தப் பஞ்சம் சமூகத்தின் தார்மீக அடித்தளங்களையும் அசைத்துப் பார்த்தது. குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கு உணவு வழங்குவதற்காக, பெற்றோர் தங்கள் குழந்தைகளை அடிமைத்தனத்திற்கும் விபசாரத்திற்கும் விற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர். கல்லறைகளில் இருந்து சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டதும், அவை உணவாக மாறியதும் கூட வரலாற்று ஆசிரியர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய துயரம் சாதாரண மக்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அல்-மக்ரிஸியின் கூற்றுப்படி, கலீஃபா அல்-முஸ்தன்சிர் பில்லாஹ்-வின் அரண்மனைக்குள்ளும் பஞ்சம் நுழைந்தது; அரச அந்தப்புரத்தில் இருந்த சில பெண்கள் பட்டினியால் இறந்தனர்.

"ரொட்டி வாங்குவதற்காக கலீஃபாவின் முன்னோர்களின் கல்லறைகளில் இருந்த அலங்காரப் பொருட்கள் கூட விற்கப்பட்டன; அரண்மனைப் பெண்களின் ஆடைகளும் விற்கப்பட்டன." என்று மோர்கன் கூறுகிறார்.

"வயல்கள் பாழடைந்தன; வீடுகள் காலியாகக் கிடந்தன. ஒரு காலத்தில் செழிப்பான மற்றும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட எகிப்தின் டானிஸ் நகரத்தில் வெறும் நூறு பேர் மட்டுமே உயிர் பிழைத்திருந்தனர்."

சில வரலாற்று மதிப்பீடுகளின்படி, எகிப்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு முதல் மூன்றில் இரண்டு பங்கு வரையிலான மக்கள் பசி, நோய் மற்றும் வன்முறையின் விளைவாக இறந்தனர். இருப்பினும், இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாது.

நகரங்களின் வீதிகள் சடலங்களால் நிரம்பியிருந்ததாக அல்-மக்ரிஸி கூறுகிறார். இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால் அவர்களை அடக்கம் செய்ய யாரும் இல்லை. ஏராளமான உடல்கள் கஃபன் துணி கூட இல்லாமல் நைல் நதியில் வீசப்பட்டன; இது பிளேக் மற்றும் பிற தொற்றுநோய்களை பரப்பி இறப்பு விகிதத்தை மேலும் அதிகரித்தது.

உயிர் பிழைத்தவர்கள் உணவைத் தேடி பெருமளவில் வெளியேறத் தொடங்கினர். கெய்ரோ மற்றும் ஃபுஸ்டாட்டின் ஆயிரக்கணக்கான மக்கள் எகிப்தின் தெற்குப் பகுதி (Upper Egypt) மற்றும் டெல்டாவில் உள்ள கிராமங்களுக்குத் தப்பிச் சென்றனர், அங்கு குறைந்த அளவிலான விவசாய உற்பத்தி எஞ்சியிருந்தது. மறுபுறம், பல வியாபாரிகள், கைவினைஞர்கள் மற்றும் சிற்பிகள் சிரியா மற்றும் இராக்கிற்குத் தப்பிச் சென்றனர்.

அரச அரண்மனையிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட மதிப்புமிக்கப் பொருட்களை வெளிநாடுகளில் விற்றவர்களும் இருந்தனர்.

இந்த வெளியேற்றத்தால் தொழிலாளர்களை மட்டுமல்ல, வணிக மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் எகிப்து இழந்தது.

இந்த மாபெரும் இடப்பெயர்வும் மக்கள்தொகை வீழ்ச்சியும் பாத்திமிட் பேரரசின் நிர்வாக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளைப் பலவீனப்படுத்தின. வரி வசூல் அமைப்பு ஏறக்குறைய அழிந்து, அரசின் கட்டுப்பாடும் சுருங்கி வந்தது.

அரண்மனை பொருட்களை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட கலீஃபா

இப்னு அல்-கலான்சியின் கூற்றுப்படி, கலீஃபாவின் சொந்த அரச குதிரை லாயங்களில் கூட அறுப்பதற்கு எந்த விலங்குகளும் மிஞ்சவில்லை.

"அல்-முஸ்தன்சிர் தனது அரண்மனையின் அனைத்துப் பொருட்கள், பொக்கிஷங்கள், ஆடைகள், தளவாடங்கள், ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்களை விற்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது," என அல்-மக்ரிஸி எழுதுகிறார்.

"நெருக்கடியான காலங்களில், கலீஃபா குதிரையில் தனியாகச் சவாரி செய்வார். சவாரி செய்வதற்கு வேறு எந்த விலங்குகளும் உயிரோடு இல்லாததால் அவரது தோழர்கள் அனைவரும் நடப்பார்கள்."

"பசியால் வாடிய இந்த மக்கள், சாலைகளில் சுருண்டு விழுந்துகொண்டே இருந்தனர். இறுதியில், கடுமையான பட்டினி காரணமாக, கலீஃபாவின் தாயும் மகள்களும் கூட பாக்தாத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள்."

அல்-முஸ்தன்சிர் பில்லாஹ் தனது நாட்டைப் பீடித்த பஞ்சத்தைப் போக்க முயன்றார்.

கலீஃபா, கெய்ரோவின் ஆளுநரை வரவழைத்து, சந்தைகளில் பெருமளவில் ரொட்டி கிடைப்பதை உறுதி செய்யாவிட்டால் அவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதாக அல்-மக்ரிஸி தனது 'அகாஸா அல்லாமா பக்ஷிஃப் அல்-கமாஅத்' என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.

"ஏற்கெனவே மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஆளுநர் வியாபாரிகளின் உடைகளை அணிவித்தார். பின்னர் அவர் நகரத்தின் வியாபாரிகள், ஆலை உரிமையாளர்கள் மற்றும் ரொட்டி தயாரிப்பாளர்களின் பெரிய கூட்டத்தைக் கூட்டினார்."

"அவர்கள் அனைவரின் முன்பாகவும், இந்தக் கைதிகளைக் கொல்லும்படி அவர் உத்தரவிட்டார். முன்னதாக, இவர்கள் உணவு தானியங்களைப் பதுக்கிச் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி நாட்டை அழிவின் விளிம்பிற்குக் கொண்டுவந்த வியாபாரிகள் என்று அவர் அறிவித்திருந்தார்."

"இந்த நடவடிக்கைக்குப் பிறகு, கூட்டத்தில் கலந்துகொண்ட வியாபாரிகளின் மனதில் பயம் பரவியது. அவர்கள் தாங்கள் பதுக்கி வைத்திருந்த தானியங்களைச் சந்தைக்குக் கொண்டு வருவதாகவும், ஆலைகளை மீண்டும் தொடங்குவதாகவும், சந்தைகளில் பெருமளவில் ரொட்டியைக் கிடைக்கச் செய்வதாகவும், ரொட்டியை நியாயமான விலையில் விற்க ஒப்புக்கொள்வதாகவும் உறுதியளித்தனர்."

ஆனால், இதுபோன்ற வெறும் பகட்டு நடவடிக்கைகளால் தீர்க்க முடியாத அளவுக்கு நெருக்கடி மிகவும் ஆழமாக இருந்தது. இந்த நெருக்கடி பாத்திமிட் பேரரசின் அரசியல் அடித்தளத்தையும் அசைத்துப் பார்த்தது.

அல்-முஸ்தன்சிர் பில்லாஹ்-வின் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகள் அவர் கையை விட்டு நழுவின. பாக்தாத் மீண்டும் அப்பாஸிட் கலீஃபகத்தின் செல்வாக்கின் கீழ் வந்தது; மெக்கா மற்றும் மதீனாவில் அல்-முஸ்தன்சிரின் குத்பா (மார்க்கச் சொற்பொழிவு/புகழுரை) நிறுத்தப்பட்டது. நீண்ட காலமாகப் பாத்திமிட் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த சிசிலியை 1071-இல் நார்மன் ஆட்சியாளர்கள் கைப்பற்றினர்.

பத்ர் அல்-ஜமாலியின் உதவி

இறுதியாக, நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறியபோது, கி.பி 1073-இல் அல்-முஸ்தன்சிர் பில்லாஹ், அக்ரேயில் தங்கியிருந்த ஆர்மீனிய தளபதியான பத்ர் அல்-ஜமாலிக்கு எகிப்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ராணுவத்தின் முழுப் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்தார்.

அல்-முஸ்தன்சிர் தனது இளைய மகனை பத்ர் அல்-ஜமாலியின் மகளுக்குத் திருமணம் செய்து வைத்ததன் மூலம் இந்த உறவை மேலும் வலுப்படுத்தினார். ஆனால் இந்த முடிவு பாத்திமிட் பேரரசின் எதிர்காலத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

வரலாற்று ஆசிரியர் அல்-சர்ஜானியின் கூற்றுப்படி, பத்ர் அல்-ஜமாலி கி.பி 1073-இன் பிற்பகுதியில் எகிப்திற்கு வந்து நாட்டில் அமைதியை நிலைநாட்டினார். கடுமையான நடவடிக்கைகள், மரண தண்டனைகள் மற்றும் எதிர்க்கும் குழுக்களை ஒழித்தல் போன்றவற்றின் மூலம் கடுமையான அராஜகம், பஞ்சம், அமைதியின்மை மற்றும் உள்நாட்டுப் போரின் காலகட்டத்தை அவர் முடிவுக்குக் கொண்டுவந்தார்.

இதன் விளைவாக, உண்மையான அதிகாரம் இப்போது கலீஃபாவுக்குப் பதிலாக பத்ர் அல்-ஜமாலியின் கைகளில் விழுந்தது; ஏராளமான ஆர்மீனியப் படைவீரர்கள் அரசியல் ராணுவத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டனர்.

என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவின் கூற்றுப்படி, அடுத்தடுத்த ஆண்டுகளில் பாத்திமிட் சுல்தானகம் தனது இருப்பிற்காக சக்திவாய்ந்த அமைச்சர்களைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. அதே நேரத்தில் எகிப்திற்கு வெளியே பாத்திமிட் பேரரசின் செல்வாக்குத் தொடர்ந்து குறைந்தது.

வட ஆப்பிரிக்காவின் பல பகுதிகள் அல்-முஸ்தன்சிரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகின. அதே சமயம், கிழக்கிலிருந்து முன்னேறி வந்த செல்ஜுக் துருக்கியர்களைக் கடுமையாக எதிர்க்க முடியாத அளவுக்குச் சிரியா பெரும் குழப்பத்தில் தவித்தது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு