’டெண்டருக்கு முன்பே முடிந்த பணிகள்’: விஜய் நேரடியாக கவனிக்கும் துறையில் எழுந்த ஊழல் புகார் - என்ன நடந்தது?

முதலமைச்சர் விஜய் நேரடியாக கவனிக்கும் துறையில் ஊழல் புகார் எழுந்துள்ளது

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், யாழினியன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தாம்பரம் மாநகராட்சியில் விதிகளை மீறி டெண்டர் கோரிய முறைகேடு புகாரில், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலசந்தர் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய மண்டல உதவி செயற்பொறியாளர் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரடியாகக் கவனிக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேர்கொள்ளப்பட்டுள்ளது.

டெண்டர் கோரப்பட்டு, போட்டி நடைமுறை முடிவதற்கு முன்பே இரண்டு பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டதாகவும், பின்னர் அந்தப் பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு முன்கூட்டியே பணிகள் ஒதுக்கப்பட்டிருக்கலாம் என்றும் அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் விஜய் நேரடியாகக் கவனிக்கும் துறையின் கீழ் இந்தப் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள நேரத்தில் இந்தப் புகார் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் முந்தைய திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையை அமைச்சர்கள் கவனித்து வந்தனர். ஆனால், தற்போதைய ஆட்சியில் இந்தத் துறை முதலமைச்சர் விஜயின் நேரடி பொறுப்பில் உள்ளது.

டெண்டருக்கு முன்பே முடிக்கப்பட்ட பணிகள்

தாம்பரம் மாநகராட்சியில் பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானா மற்றும் சிட்லபாக்கம் ரவுண்டானா ஆகிய இடங்களில் சிலை அமைத்தல், அழகுபடுத்துதல் உள்ளிட்ட இரண்டு பணிகள் தொடர்பாக இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பணிகளின் மொத்த மதிப்பு ரூ.45.90 லட்சம்.

பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானாவில் அசோகத் தூண் அமைத்தல், நிலப்பரப்பை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கான டெண்டர் மதிப்பு ரூ.27.30 லட்சம். இதற்கான டெண்டர் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 24-ஆம் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்தப் பணி அதற்கு முன்பாகவே, ஜூலை 29ஆம் தேதி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டதாக அறப்போர் இயக்கம் கூறுகிறது.

அமைச்சர் சரத்குமார் மற்றும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஆகியோர் அந்தப் பணியைத் திறந்து வைத்ததாகவும், நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் அன்றே சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஒப்பந்ததாரர்கள் பங்கேற்கும் வகையில் டெண்டர் வெளியிடப்படுவதற்கு எட்டு நாட்களுக்கு முன்பே பணி முடிக்கப்பட்டிருந்ததாக அறப்போர் இயக்கம் கூறுகிறது.

பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானாவில் அமைக்கப்பட்டுள்ள அசோகத் தூண்

பட மூலாதாரம், X

படக்குறிப்பு, பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானாவில் அமைக்கப்பட்டுள்ள அசோகத் தூண்

இதேபோல், சிட்லபாக்கம் ரவுண்டானாவில் தண்ணீரை சேமிப்பது தொடர்பான விழிப்புணர்வு சிலை அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிக்கான டெண்டர் மதிப்பு ரூ.18.60 லட்சம். இதற்கான டெண்டரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 24-ஆம் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்தப் பணி ஆகஸ்ட் 10-ஆம் தேதியே முடிக்கப்பட்டு சிலை திறக்கப்பட்டதாக அறப்போர் இயக்கம் கூறுகிறது. அமைச்சர் சரத்குமார் பங்கேற்ற இந்த நிகழ்வின் புகைப்படங்களும் அன்றே சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி, டெண்டர் திறக்கப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பே அந்தப் பணி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டதாக அறப்போர் இயக்கம் கூறுகிறது.

சிட்லபாக்கம் ரவுண்டானாவில் தண்ணீரை சேமிப்பது தொடர்பான விழிப்புணர்வு சிலை

பட மூலாதாரம், X

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஒரு பணிக்கான டெண்டர் அறிவிக்கப்படுவதற்கு முன்பே அந்தப் பணி முடிக்கப்பட்டிருப்பது, போட்டி டெண்டர் நடைமுறையின் நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குவதாக அறப்போர் இயக்கம் கூறியுள்ளது.

இந்த இரண்டு பணிகளும் முன்கூட்டியே தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கலாம் என்றும், பின்னர் அவற்றை முறைப்படுத்தி அந்த ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்குவதற்காக டெண்டர் நடைமுறை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தின் விதிகளை மீறிய செயலாக இருக்கலாம் என்றும், அதிகாரிகளுக்கும் குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே கூட்டுச்சதி நடந்திருக்கலாம் என்றும் அறப்போர் இயக்கம் கூறியுள்ளது.

இரண்டு டெண்டர்களுக்கான நிதி ஏலங்கள் ஆகஸ்ட் 24-ஆம் தேதி திறக்கப்பட வேண்டியிருந்தும், அவற்றின் நிலை இன்னும் 'திறக்கப்பட வேண்டியது' என்ற நிலையிலேயே இருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், டெண்டரில் பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் யார், குறைந்த தொகையை குறிப்பிட்ட வெற்றிகரமான ஒப்பந்ததாரர் யார் என்பது போன்ற விவரங்கள் பொதுமக்களுக்கு தெரியாமல் இருப்பதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் இந்தத் தகவல்களை வெளியிடாமல் இருப்பது, ஏற்கெனவே முடிக்கப்பட்ட பணிகளுக்கான டெண்டர் நடைமுறையை பின்னர் முறைப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

அரசு விசாரணையில் என்ன கண்டறியப்பட்டது?

அறப்போர் இயக்கத்தின் புகாரில் குறிப்பிடப்பட்ட குறைபாடுகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி முதற்கட்ட விசாரணை நடத்தியதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த விசாரணையின் தொடர்ச்சியாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு கூறியுள்ளது.

அரசின் விளக்கத்தின்படி, சிட்லபாக்கத்தில் ரூ.18.60 லட்சம் மதிப்பிலும், பெருங்களத்தூரில் ரூ.27.30 லட்சம் மதிப்பிலும் இரண்டு பணிகளை மேற்கொள்ள பொதுநிதி அல்லது நிறுவன சமூகப் பொறுப்பு நிதியைப் பயன்படுத்துவது குறித்து ஜூலை 14-ஆம் தேதி தாம்பரம் மாநகராட்சி மாமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டு நிர்வாக அனுமதி பெறப்பட்டது.

அதன்பிறகு, ஜூலை 23-ஆம் தேதி இந்தப் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிட அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், ஜூலை 24-ஆம் தேதி ஒரு தனியார் நிறுவனம் இந்த இரண்டு பணிகளையும் செய்து தருவதாக மாநகராட்சிக்கு கடிதம் அளித்ததாகவும், அந்த நிறுவனத்தால் இரண்டு பணிகளும் முடிக்கப்பட்ட பின்னர் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

பணிகள் முடிக்கப்பட்ட பிறகு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்ட இந்த நடைமுறை செயல்முறை குறைபாடு என முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக அரசு கூறியுள்ளது.

அதேநேரம், இந்த விவகாரத்தில் எந்தப் பணியாணையும் வழங்கப்படவில்லை என்றும், மாநகராட்சியின் பொதுநிதியில் இருந்து எந்தத் தொகையும் செலவிடப்படவில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.

விஜய் நேரடியாக கவனிக்கும் துறையில் எழுந்த ஊழல் புகார் - டெண்டருக்கு முன்பே பணிகள் முடிந்து திறப்பா? - என்ன நடந்தது?

பட மூலாதாரம், DIPR

ஆணையர் மீது அரசு நடவடிக்கை

இந்தச் செயல்முறை குறைபாடு தொடர்பாக தாம்பரம் மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட மண்டல உதவி செயற்பொறியாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா, தாம்பரம் மாநகராட்சி ஆணையராக கூடுதல் பொறுப்பை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறிழைத்த அனைவரின் மீதும் எவ்வித விடுபாடுமின்றி உரிய தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

’மேலும் நடவடிக்கை வேண்டும்’ - அறப்போர் இயக்கம்

தங்களது புகாரின் அடிப்படையில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருப்பதை வரவேற்பதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

இது முதற்கட்ட நடவடிக்கை என்றும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய பொது ஊழியர்கள் அனைவருக்கும் எதிராக துறை ரீதியான நடவடிக்கையும் குற்றவியல் நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் கோரியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி ஆணையராக இருந்த பாலச்சந்தரை பிபிசி தமிழ் தொடர்புகொள்ள முயன்றது. அவர் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு