இரான் எண்ணெய் கப்பலில் ஏறிய அமெரிக்க படை: கண்ணிவெடி வைக்கும் படகுகளை சுட டிரம்ப் உத்தரவு - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், US Department of Defense
- எழுதியவர், ரோரே போசோட்டி
- பதவி, பிபிசி செய்திகள்
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இரானுக்கு எதிரான சமீபத்திய கடற்படை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியப் பெருங்கடலில் இரான் எண்ணெயைச் சுமந்து சென்ற தடை விதிக்கப்பட்ட கப்பல் ஒன்றில் தனது படைகள் ஏறியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பகைமை கொண்டதாகவோ அல்லது சட்டத்தை மீறுவதாகவோ சந்தேகிக்கப்படும் கப்பல்களைக் கடற்படையால் இடைமறித்தல் அல்லது ஆய்வு செய்தல் எனப்படும் "கடல்சார் தடுப்பு நடவடிக்கையை" எம்/டி மெஜஸ்டிக் எக்ஸ் கப்பலில் நடத்தியதாகக் கூறியுள்ளது.
ஏப்ரல் 13 அன்று இரானியத் துறைமுகங்களுக்கு உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் கப்பல் போக்குவரத்திற்கு முற்றுகை விதித்த பிறகு, அமெரிக்கா பல கப்பல்களை இடைமறித்துள்ளது.
முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹோர்மூஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை பதிக்கும் எந்தவொரு படகையும் "சுட்டு வீழ்த்துமாறு" அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்கக் கடற்படைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்தச் சமீபத்திய தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த முற்றுகையின் கீழ், 33 கப்பல்களை மீண்டும் துறைமுகத்திற்குத் திரும்புமாறு அமெரிக்க மத்திய கட்டளை மையம் (சென்ட்காம்) உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
மேலும், "இரானுக்குப் பொருள் உதவி வழங்குவதாக" சந்தேகிக்கப்படும் கப்பல்கள் எங்கு இயங்கினாலும் அவை தொடர்ந்து தடுத்து நிறுத்தப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஹோர்மூஸில் கட்டணம் வசூலிப்பதாக கூறும் இரான்
இரான் நாட்டின் எண்ணெய் வருவாயைக் குறிவைப்பதன் மூலமும், நீரிணையில் சுதந்திரமாகப் பயணம் செய்வதற்காகக் கப்பல்களிடமிருந்து வசூலிக்கப்பட்டதாக இரான் கூறும் சுங்கக் கட்டணங்களை தடுப்பதன் மூலமும் இரான் மீது அழுத்தம் கொடுக்க டிரம்ப் முயன்று வருகிறார்.
வியாழக்கிழமை வெள்ளை மாளிகை நிகழ்வு ஒன்றில் பேசிய டிரம்ப், முற்றுகை "100% பயனுள்ளதாக" இருப்பதாகவும், இரானுக்கு "எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை" என்றும் கூறினார்.
மூன்று நாட்களுக்கு முன்பு ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறக்க இரான் விடுத்த முன்மொழிவை நிராகரித்ததாகக் குறிப்பிட்ட டிரம்ப், "ஒப்பந்தம் ஏற்படும்போது அது திறக்கப்படும்" என்றார்.
ஹோர்மூஸ் நீரிணையை பயன்படுத்தும் கப்பல்களின் மீது விதிக்கப்பட்ட சுங்கக் கட்டணத்திலிருந்து வசூலிக்கப்பட்ட முதல் வருவாய் நாட்டின் மத்திய வங்கியில் இருப்பு வைக்கப்பட்டதாக இரானிய நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் ஹமித்ரேசா ஹாஜி பாபே வியாழக்கிழமை தெரிவித்தார்.
சுங்கக் கட்டணத் தொகை, வசூலிக்கும் முறை அல்லது யார் பணம் செலுத்தினார்கள் என்பது குறித்த கூடுதல் விபரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
பிபிசியால் இந்தத் தகவலைச் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை.
மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் டிரம்ப் இரண்டு வார காலப் போர்நிறுத்தத்தை நீட்டித்த போதிலும், அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
முதலாவது அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கிய முகமது பாகர் காலிபாஃப், முற்றுகை மற்றும் போர்நிறுத்த மீறல்கள் காரணமாக நீரிணையை மீண்டும் திறப்பது "சாத்தியமில்லை" என்று கூறியுள்ளார்.
வியாழக்கிழமை ட்ரூத் சோஷியல் தளத்தில் எழுதிய டிரம்ப், ஹோர்மூஸ் நீரிணையை அமெரிக்கப் படைகள் "முழுமையான கட்டுப்பாட்டில்" வைத்துள்ளதாகக் கூறினார்.
மேலும், இரானியர்கள் "தங்கள் தலைவர் யார் என்பதைக் கண்டறிவதில் மிகவும் சிரமப்படுகின்றனர்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
இதற்கு ஒரு நாள் முன்னதாக, மூன்று கப்பல்கள் இரானியப் படைகளால் தாக்குதலுக்கு உள்ளானதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, நீரிணையில் இரண்டு சரக்குக் கப்பல்களைக் கைப்பற்றி நாட்டின் கடற்கரைக்குக் கொண்டு சென்றதாக இரானியக் கடற்படை தெரிவித்தது.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன்(ஐஆர்ஜிசி) தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம், இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் ஐஆர்ஜிசி இருப்பதாகக் கூறியது.
இரண்டு கப்பல்களை இரானிய வீரர்கள் கைப்பற்றுவதைக் காட்டுவதாக ஐஆர்ஜிசி பகிர்ந்த காட்சிகளை பிபிசி வெரிஃபை ஆய்வு செய்தது.
அதில் எம்.எஸ்.சி பிரான்செஸ்கா மற்றும் எபமினோண்டாஸ் ஆகிய இரண்டு கப்பல்களும் தெளிவாக அடையாளம் காணப்பட்டாலும், வான்வழிப் படக்காட்சிகள் முதற்கட்டத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் நேரத்திற்குப் பல மணிநேரங்களுக்குப் பிறகு படமாக்கப்பட்டதாகத் தெரிகிறது.
எபமினோண்டாஸ் கப்பல் கைப்பற்றப்பட்டதை கிரேக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர் மற்றும் அதன் கேப்டன் தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இரண்டு கப்பல்களின் டிரான்ஸ்பாண்டர்களும் அணைக்கப்பட்டுள்ளன.
டிரம்ப் கூறியது என்ன?
ஹோர்மூஸ் நீரிணையில் கண்ணிவெடிகளைப் பதிக்கும் படகுகளை "சுட்டு வீழ்த்த" அமெரிக்கக் கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளதாக வியாழக்கிழமை அன்று டிரம்ப் தெரிவித்தார்.
"இதில் எந்தத் தயக்கமும் இருக்கக் கூடாது," என்று அவர் ஒரு சமூக ஊடகப் பதிவில் கூறியுள்ளார். மேலும் அமெரிக்காவின் கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள் "இப்போதே" நீரிணையை சுத்தம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கப்பல் போக்குவரத்துப் பாதையில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு அமெரிக்கப் படைகளுக்கு ஆறு மாதங்கள் தேவைப்படலாம் எனக் கூறும் செய்திகளை அமெரிக்க பாதுகாப்புத்துறை நிராகரித்துள்ள நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
"ஒரு மதிப்பீடு இருப்பதாலேயே அது சாத்தியமானது என்று அர்த்தமல்ல. ஹோர்மூஸ் நீரிணையை ஆறு மாதங்களுக்கு மூடுவது என்பது சாத்தியமற்றது" என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமை செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் பிபிசியிடம் தெரிவித்தார்.
பிபிசியின் வட அமெரிக்க ஆசிரியர் சாரா ஸ்மித்துடனான தொலைபேசி நேர்காணலில் டிரம்ப் பேசுகையில், இரான் "ஒப்பந்தம் செய்து கொள்ளத் துடிக்கிறது" என்றும், தனது நிலைப்பாடு "மிகச் சிறப்பாகச் செயல்படுவதாகத் தெரிகிறது" என்றும் கூறினார்.
இரானிய ஆட்சியாளர்கள் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு "ஒருங்கிணைந்த திட்டத்தை" உருவாக்க அதிக அவகாசம் அளிக்கும் வகையில், அந்நாட்டுடனான போர்நிறுத்தத்தை நீட்டிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் செவ்வாயன்று அறிவித்தார்.
இந்த போர்நிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
வியாழக்கிழமையன்று ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட அவர், போரை முடிவுக்குக் கொண்டுவர, தான் "ஆவலுடன்" இருப்பதாகக் கூறப்படும் செய்திகளை மறுத்தார்.
"என்னிடம் நிறைய நேரம் இருக்கிறது... ஆனால் இரானிடம் இல்லை. காலம் கடந்து கொண்டிருக்கிறது!" என்று அவர் அதில் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
பின்வாங்க மறுக்கும் இரான்
ஏற்கனவே திணறிக்கொண்டிருக்கும் இரானியப் பொருளாதாரத்தில் இந்தப் போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய போதிலும், இரான் பின்வாங்குவதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை.
இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எக்ஸ் தளத்தில், நாடு "முன்பை விட இப்போது மிகவும் ஒற்றுமையாக உள்ளது" என்று கூறியுள்ளார்.
இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் மற்றும் காலிபாஃப் ஆகியோரும் இரானின் "இரும்பு போன்ற ஒற்றுமையை" விவரிக்கும் இதே போன்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல் நடத்தியபோது இந்தப் போர் தொடங்கியது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வியாழக்கிழமை அன்று, மீண்டும் தாக்குதலைத் தொடங்கவும் இரானை "இருண்ட மற்றும் கற்காலத்திற்கு" கொண்டு செல்லவும் தனது நாடு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
"காமனெயி வம்சத்தை முழுமையாக ஒழிப்பதற்கு அமெரிக்காவிடமிருந்து வரும் அனுமதிக்காக இஸ்ரேல் காத்திருக்கிறது" என்று காட்ஸ் கூறினார்.
1989 முதல் இரானின் அதி உயர் தலைவராக இருந்த ஆயதுல்லா அலி காமனெயி , பிப்ரவரியில் போர் தொடங்கிய முதல் நாளிலேயே கொல்லப்பட்டார்.
அவரது மகன் மொஜ்தபா காமனெயி மார்ச் 8 அன்று அவருக்குப் பின் பதவியேற்றார். ஆனால் அதன் பிறகு அவர் பொதுவெளியில் காணப்படவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































