இந்தியாவின் 'சக்திவாய்ந்த அரசியல் குடும்பம்' பற்றி சோனியா காந்தி புத்தகம் வெளிப்படுத்த போவது என்ன?

சோனியா காந்தி

பட மூலாதாரம், AFP via Getty Images

    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

1998-ஆம் ஆண்டு இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றபோது, அவர் எதிர்பாராத வகையில் அரசியலுக்கு வந்தவராகவும், பெரும்பாலும் புரிந்துகொள்ள முடியாத அரசியல் தலைவராகவும் இருந்தார்.

இத்தாலியில் பிறந்தவரும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தி, பல ஆண்டுகளாக அரசியல் வெளிச்சத்தைத் தவிர்த்து வந்தார். பின்னர், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பெரும்பகுதியை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

அவர் பொறுப்பேற்ற ஆரம்ப காலகட்டத்தில், இந்தியா டுடே இதழ் சோனியா காந்தியை அவரது கட்சியினருக்கே "மிகவும் புரிந்துகொள்ள முடியாத புதிராக" இருப்பதாக வர்ணித்தது. "எதையும் வெளிப்படுத்தாதவர்" எனக் கூறப்பட்ட அவர், பாதுகாப்புப் படையினரின் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்தார். மேலும், "பிறருக்குப் பரிச்சயமில்லாத உச்சரிப்பில் சுருக்கமான ஒற்றை வரிப் பதில்களை" அளிப்பவர் என்றும் அந்த இதழ் குறிப்பிட்டது.

ஆனால், இந்த மௌனத்திற்குப் பின்னால், அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை ஏற்கெனவே கற்றுக்கொண்டிருந்த ஓர் அரசியல்வாதியை அந்த இதழ் அடையாளம் கண்டது.

மாறுபட்ட கருத்துகளை அவர் கேட்டறிந்தார், தகவல்களைச் சேகரித்தார், பின்னர் தனது சொந்த முடிவை எடுத்தார்.

"முடிவெடுக்கும் செயல்முறையில் இருந்து யாரும் ஒதுக்கப்படுவதில்லை; எந்தக் குரலும் அடக்கப்படுவதில்லை. ஆனால், இறுதியில் அவரது முடிவே மேலோங்குகிறது," என்று அந்த இதழ் குறிப்பிட்டது.

கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, தயக்கத்துடன் அரசியலுக்கு வந்த ஒரு வெளிநபர் என்ற நிலையில் இருந்து, இந்தியாவின் மிகப் பழமையான அரசியல் கட்சியான காங்கிரஸின் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக உயர்ந்த அரசியல் பயணத்துக்குப் பிறகு, சோனியா காந்தி தற்போது தனது கதையை அவரே கூறுகிறார்.

சோனியா காந்தி

பட மூலாதாரம், William Collins

79 வயதான சோனியா காந்தியின் வாழ்க்கைக் கதை, அசாதாரணமான தனிப்பட்ட இழப்புகளால் நிரம்பியுள்ளது. தனது மாமியாரான இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்ட பிறகு, அவரை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்கொலைப்படை தாக்குதலில் தனது கணவர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நிலையில், அவரது உடலையும் வீட்டுக்கு எடுத்துச் சென்றார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அவரது சுயசரிதையான"பிலாங்கிங்: அ ஜர்னி ஆஃப் லவ்" என்ற நூல், அமெரிக்காவில் ஆல்ஃப்ரெட் ஏ. நாஃப் பதிப்பகத்தாலும், பிரிட்டனில் வில்லியம் காலின்ஸ் பதிப்பகத்தாலும் நவம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளது. இது இந்தியாவில் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் அரசியல் நூல்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆல்ஃப்ரெட் ஏ. நாஃப் வெளியிட்ட அறிக்கையில், இந்த நினைவுக்குறிப்பை "எனது வாழ்க்கையில் இடம்பெற்ற மென்மையான மகிழ்ச்சிகளையும் இருண்ட விரக்திகளையும் கடந்து சென்ற என் இதயத்தின் பயணத்துக்கு ஒரு சாட்சியாக" இருக்க வேண்டும் என்று விரும்புவதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

வில்லியம் காலின்ஸ் பதிப்பகத்தின் கூற்றுப்படி, இந்தப் புத்தகம் 1965-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜில் தொடங்குகிறது. அங்கு 19 வயதான இத்தாலிய மாணவி சோனியா மைனோ, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேரனான ராஜீவ் காந்தியைக் காதலிக்கத் தொடங்குகிறார்.

இந்த நூலில், பொதுவாக மிகவும் மௌனமாகவும் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படுத்தத் தயங்குபவராகவும் அறியப்படும் சோனியா காந்தி, அன்பு, புலம்பெயர்ந்த வாழ்க்கை, அரசியல் அதிகாரம் மற்றும் பேரிழப்புகளால் வடிவமைக்கப்பட்ட தனது வாழ்க்கைப் பயணத்தை "அன்புடனும் வெளிப்படையான நேர்மையுடனும்" திரும்பிப் பார்க்கிறார் என்று பதிப்பாளர்கள் கூறுகின்றனர்.

சிறிய இத்தாலிய நகரத்தில் தனது குழந்தைப் பருவத்தைக் கழித்தது முதல், எதிர்பாராத விதமாக இந்திய அரசியலின் மையத்துக்குள் நுழைந்தது வரையிலான தனது வாழ்க்கைப் பயணத்தை அவர் இந்த நூலில் பதிவு செய்துள்ளார்.

சோனியா காந்தி

பட மூலாதாரம், Keystone/Getty Images

இந்த நினைவுக்குறிப்பு ஏற்கெனவே இந்தியாவில் பதிப்புரிமை தொடர்பான சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

இந்த நூலின் பிரதியில் சில பகுதிகளில் மாற்றங்களைச் செய்யுமாறு பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா கேட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, அரசாங்கத்தை விமர்சிக்கும் பகுதிகளை மாற்றுமாறு பதிப்பகத்துக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்தக் குற்றச்சாட்டை பெங்குயின் மறுத்துள்ளது. "சம்பந்தப்பட்ட விவாதங்கள்" நடைபெற்றுக் கொண்டிருந்தபோதும், இந்தப் புத்தகத்தை வெளியிடுவதில் தாங்கள் "ஆர்வமாகவும் தயாராகவும் இருந்ததாக" அந்தப் பதிப்பகம் தெரிவித்தது.

எனினும், இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்தில் திருமணம் செய்து கொண்ட ஓர் இளம் வெளிநாட்டுப் பெண்ணின் வாழ்க்கைக் கதை மட்டுமே இந்தப் புத்தகத்தில் வாசகர்கள் எதிர்பார்க்கப் போவதில்லை.

நவீன இந்திய அரசியலில் இன்னும் விடை கிடைக்காத சில முக்கியமான கேள்விகளுக்கும் அவர்கள் பதில்களைத் தேடுவார்கள்.

சோனியா காந்தியை அரசியலுக்குள் ஈர்த்தது எது? எட்டு ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத நிலையில், 2004-ஆம் ஆண்டு காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது திரைக்குப் பின்னால் உண்மையில் என்ன நடந்தது?

சோனியா காந்தி

பட மூலாதாரம், Getty Images

மிகப்பெரிய புதிராக இருப்பது இதுதான்: தனது கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முழு ஆதரவும் இருந்தபோதிலும், சோனியா காந்தி ஏன் பிரதமர் பதவியை ஏற்க மறுத்தார்? அதற்குப் பதிலாக, மன்மோகன் சிங்கை ஏன் பிரதமராகத் தேர்வு செய்தார்?

தனது வெளிநாட்டுப் பூர்விகம் தனது தலைமையிலான அரசாங்கத்தின் மீது நிரந்தரமாக பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று அவர் அஞ்சினாரா?

"இதுதான் உண்மையில் இன்னும் விடை கிடைக்காத மிகப்பெரிய கேள்வி என்று நான் நினைக்கிறேன். அவர் எளிதாகப் பிரதமராகியிருக்க முடியும். அவரது கட்சியினரும் கூட்டணிக் கட்சியினரும் முழுமையாக அவருக்கு ஆதரவாக இருந்தனர். மேலும், ஆட்சி அமைக்க அவரை அழைக்கும் கடிதமும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் தயாராக இருந்தது," என்று பத்திரிகையாளரும் எழுத்தாளருமான நீரஜா சௌத்ரி கூறுகிறார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான நட்வர் சிங் தனது நினைவுக்குறிப்பில், சோனியா காந்தி பிரதமராகப் பதவியேற்பதை அவரது மகன் ராகுல் காந்தி "கடுமையாக" எதிர்த்ததாக எழுதியுள்ளார். தனது பாட்டி இந்திரா காந்தி மற்றும் தந்தை ராஜீவ் காந்திக்கு நேர்ந்த கதியே தனது தாய்க்கும் ஏற்பட்டுவிடுமோ என்று ராகுல் அஞ்சியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் ஒரு "உச்சக்கட்டத்தை" எட்டியதாக நட்வர் சிங் தனது நினைவுக்குறிப்பில் எழுதியுள்ளார். சோனியா பிரதமராகாமல் தடுக்க "என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார்" என்று ராகுல் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அப்படியானால், சோனியா காந்தியின் நினைவுக்குறிப்பு இந்த அசாதாரணமான முடிவு குறித்து புதிய தகவல்களை வெளிப்படுத்துமா? அல்லது திரைக்குப் பின்னால் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பார்வையை அளிக்குமா?

சோனியா காந்தி

பட மூலாதாரம், Universal Images Group via Getty Images

காரணம் எதுவாக இருந்தாலும், சோனியா காந்தியின் அந்த முடிவு இந்திய அரசியலையே மாற்றியது. ஆனால், அது இன்னும் பெரிய புதிரின் ஒரு பகுதி மட்டுமே: சோனியா காந்தி முதலில் அரசியலுக்குள் நுழைந்தது ஏன்?

பல ஆண்டுகளாக அவர் அரசியலுக்கு வருவதைத் தொடர்ந்து மறுத்து வந்தார். 1991-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகும், அவர் பெரும்பாலும் பொது வாழ்க்கையிலிருந்து விலகியே இருந்தார். ஆனால், 1990-களில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்த நிலையில், 1997-ஆம் ஆண்டு அவர் அக்கட்சியில் இணைந்தார். அதன்பிறகு ஓராண்டு நிறைவடைவதற்குள் கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

அந்தக் காலகட்டத்தில், அவரது அரசியல் எதிரிகள் அவரை பெரிதாகக் கருதவில்லை. 1998 டிசம்பரில், இந்தியா டுடே இதழ், தொடக்கத்தில் முன்னணி எதிர்க்கட்சித் தலைவர்கள் அவரை "வெறும் இல்லத்தரசி" அல்லது "இத்தாலிய அதிசயம்" என்ற அளவிலேயே குறிப்பிட்டதாகத் தெரிவித்தது.

ஆனால், சில மாதங்களிலேயே அவர் தனது கட்சியையே மாற்றியமைக்கத் தொடங்கினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், "இந்தப் பெண்ணால் இப்படியொரு ஆச்சரியத்தை ஏற்படுத்த முடியும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை" என்று ஒப்புக்கொண்டார்.

அப்போது முதலே அவர் வலிமையான அரசியல் ஆளுமையாக உருவெடுத்து வருவதை அந்த இதழ் கவனித்தது. "வெல்வெட் கையுறைக்குள் இரும்புக் கரம்" கொண்டவர் என்று அவரை வர்ணித்த அந்த இதழ், "மலை அளவிலான ஆணவங்களையும் மலையடிவாரத்தின் உயரத்துக்குக் குறைத்துவிட" அவருக்குத் தெரியும் என்றும் குறிப்பிட்டது.

இதற்கிடையே, அவரது அரசியல் வாழ்க்கை உருவாகக் காரணமான துயரச் சம்பவங்களும் உள்ளன.

சோனியா காந்தி

பட மூலாதாரம், AFP via Getty Images

1984-ஆம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, தனது குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றத்தை சோனியா காந்தி நேரில் பார்த்தார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்கொலைப்படைத் தாக்குதலில் ராஜீவ் காந்தியை இழந்தார். இந்த மரணங்கள் இந்திய அரசியலின் போக்கையும், அவரது சொந்த வாழ்க்கையையும் மாற்றியமைத்தன.

அந்த ஆண்டுகளைப் பற்றி அவர் என்ன கூறுவார்? ராஜீவ் காந்தியின் அரசியல் வாழ்க்கைக்கு அவர் கடுமையாக எதிர்த்த நிலையில் அது குறித்து என்ன கூறுவார்? தனது பிள்ளைகளைச் சுற்றியிருந்த பாதுகாப்பு அச்சங்கள் குறித்து அவர் பேசுவாரா? மேலும், காந்தி குடும்பத்தின் வாரிசு அரசியல் அப்படியே கைவிட முடியாது என்று அவர் முடிவு செய்த தருணம் குறித்து என்ன கூறுவார்?

இதில் சில சங்கடமான கேள்விகளும் உள்ளன.

ராஜீவ் காந்தியின் அரசாங்கத்தைப் பெரிதும் பாதித்த போஃபர்ஸ் ஊழல் குறித்து அவர் பேசுவாரா? இத்தாலிய தொழிலதிபர் ஒட்டாவியோ குவாத்ரோக்கி உடனான காந்தி குடும்பத்தின் தொடர்பு குறித்து பல ஆண்டுகளாக நீடித்த சர்ச்சைகளையும் அவர் மீண்டும் பேசுவாரா? அந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மீண்டும் விளக்கமளித்து, தனக்கு என்ன தெரியும் என்பதை அவர் கூறுவாரா?

அதேபோல், அவரது இத்தாலியப் பூர்விகம் தொடர்பான சர்ச்சை குறித்தும் அவர் பேசுவாரா?

பல ஆண்டுகளாக, இந்தியாவை வழிநடத்துவதற்கான தார்மிக உரிமை இல்லாத வெளிநாட்டவர் என்று சோனியா காந்தி விமர்சிக்கப்பட்டார். டெல்லியின் சமூக வட்டாரங்களில், சில நேரங்களில் அவர் "இத்தாலிய வீட்டு பணிப்பெண்" என்று கேலியாக அழைக்கப்பட்டார்.

2004-ஆம் ஆண்டு, வெளிநாட்டுப் பூர்விகம் கொண்ட ஒருவர் பிரதமராவது "தேசத்துக்கு அவமானம்" என்று பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.

சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்றால், தான் பதவியை ராஜினாமா செய்வதுடன், தலையை மொட்டையடித்துக் கொண்டு, வெள்ளை உடை அணிந்து, துறவியைப் போல வாழப் போவதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்திருந்தார்.

சோனியா காந்தி

பட மூலாதாரம், Universal Images Group via Getty Images)

படக்குறிப்பு, 1991-ஆம் ஆண்டு தனது கணவர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, அவருக்குப் பதிலாக காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்க சோனியா காந்தி மறுத்தது குறித்து பிரெஞ்சு நாளிதழான 'லிபரேஷன்' வெளியிட்ட முதல் பக்கச் செய்தி.

"1999-ஆம் ஆண்டிலேயே, காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள்கூட அவரது வெளிநாட்டுப் பூர்விகம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர். அவர் எப்போதாவது இந்தியாவை விட்டு வெளியேறுவது குறித்து யோசித்தாரா?" என்று பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ரஷீத் கித்வாய் கூறுகிறார்.

2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் நடந்தவை குறித்தும் இந்தப் புத்தகம் வெளிச்சம் பாய்ச்சுமா என்று அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சோனியா காந்தியின் தலைமையில், காங்கிரஸ் தொடர்ந்து இரண்டு மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் உள்ளிட்ட முக்கியமான நடவடிக்கைகளுக்கும் அக்கட்சி ஆதரவளித்தது.

ஆனால், இரண்டாவது ஆட்சிக்காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள், கொள்கை முடிவுகளை எடுப்பதில் ஏற்பட்ட தேக்கநிலை ஆகியவை பெரும் பின்னடைவை ஏற்படுத்தின.

சோனியா காந்தியின் விமர்சகர்கள் அவரை அரசாங்கத்தின் "ரிமோட் கண்ட்ரோல்" என்று விமர்சித்தனர். மன்மோகன் சிங் அரசாங்கத்தின் மீது அவர் எந்த அளவுக்கு அதிகாரம் செலுத்தினார் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

அவரது ஆதரவாளர்களோ, மிகவும் சிக்கலான கூட்டணியை ஒருங்கிணைத்து வழிநடத்திய முக்கியமான அரசியல் சக்தியாக சோனியா காந்தியைப் பார்த்தனர்.

இதன்பிறகு வருவது ராகுல் காந்தி.

2017-ஆம் ஆண்டு சோனியா காந்தி இறுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை தனது மகனிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு கட்சியை மீண்டும் வலுப்படுத்துவதில் ராகுல் காந்தி தோல்வியடைந்தது, காந்தி குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு சரிவடைந்த கதையின் முக்கியமான பகுதியாக இருப்பதாக பலர் கருதுகின்றனர்.

சோனியா காந்தி

பட மூலாதாரம், Getty Images

1994-ஆம் ஆண்டு வெளியான 'ராஜீவ்' என்ற தனது புத்தகத்தில், ராஜீவ் காந்தி அரசியலுக்குள் நுழைவதைத் தடுக்க "புலியைப் போலப் போராடினேன்" என்று சோனியா காந்தி எழுதியிருந்தார். ஆனால், இறுதியில் தன் மகனை அரசியல் வாரிசாக தேர்ந்தேடுத்தார்

ராகுல் காந்தியின் அரசியல் பயணம் அவ்வளவு சுமுகமானதாக இருக்கவில்லை. ஒரு காலத்தில் அரசியலில் ஈடுபட விரும்பாதவர் என்று அவர் விமர்சிக்கப்பட்டார். மேலும், அரசியல் எதிரிகளால் அடிக்கடி நேரில் களத்தில் இல்லாத தலைவராகக் கேலி செய்யப்பட்டார்.

**"**தனது மகனின் முற்றிலும் மாறுபட்ட அரசியல் அணுகுமுறையையும் பார்வையையும் சோனியா காந்தி எப்படிப் பார்க்கிறார்? அவரது அரசியலை அவர் எந்த அளவுக்கு ஆதரிக்கிறார்? இந்தக் கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் பதில் அளிக்கும் என்று நம்புகிறேன்," என்கிறார் ரஷீத் கித்வாய்.

சோனியா காந்தி, தனது மகள் பிரியங்காவுக்குப் பதிலாக, குடும்பத்தின் அரசியல் வாரிசைத் தொடர ராகுலை ஏன் தேர்வு செய்தார் என்பதும் மற்றொரு கேள்வி.

அதேபோல், பல ஆண்டுகளாக பிரியங்கா அரசியலுக்கு வருவார் என்ற ஊகங்கள் நிலவி வந்தபோதும், அவர் ஏன் 2019-ஆம் ஆண்டில்தான் அதிகாரப்பூர்வமாகத் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்தார் என்பதும் கேள்வியாக உள்ளது.

"அரசியலுக்கு வருவதா இல்லையா என்பதை எனது பிள்ளைகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்பதே சோனியா காந்தியின் வழக்கமான பதிலாக இருக்கும்," என்கிறார் கித்வாய்.

இதையெல்லாம் தாண்டி இன்னும் ஒரு பெரிய கேள்வி உள்ளது: தான் வடிவமைக்க உதவிய இந்தியாவைப் பற்றி சோனியா காந்தி என்ன நினைக்கிறார்?

சோனியா காந்தி

பட மூலாதாரம், Sygma via Getty Images

இந்திய அரசியல் கூட்டணி அரசாங்கங்கள் மற்றும் பொருளாதாரத் தாராளமயமாக்கல் காலகட்டத்தில் இருந்து, நரேந்திர மோதியின் பாஜக மற்றும் இந்துத்துவ தேசியவாதம் அதிக ஆதிக்கம் செலுத்தும் அரசியல் சூழலாக மாறிய காலகட்டத்தில் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியை வழிநடத்தினார்.

ஆனால், சோனியா காந்தியின் நினைவுக்குறிப்பு எதைப் பற்றி பேசத் தேர்வு செய்கிறது, எதைப் பற்றி பேசாமல் விடுகிறது என்பதே இதில் மிகவும் முக்கியமான கேள்வியாக இருக்கலாம். இதற்கான பதில் அந்தப் புத்தகத்தின் தலைப்பிலேயே இருக்கலாம் என்று நீரஜா சௌத்ரி கருதுகிறார். அந்தப் புத்தகத்தின் தலைப்பு "பிலாங்கிங்''

"நேரு-காந்தி குடும்பத்தின் அரசியல் வாரிசாக இருப்பதைப் பற்றி அவர் எப்போதும் உணர்வுபூர்வமாக இருந்துள்ளார். அந்த பாரம்பரியம் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்க வேண்டும்," என்கிறார் சௌத்ரி.

இந்த நினைவுக்குறிப்பில் சோனியா காந்தி தனது குடும்பத்தையும் அதன் வரலாற்றையும் மீண்டும் நினைவுகூர்வார் என்றும், எல்லாவற்றுக்கும் மேலாக, அந்தக் குடும்பத்துடனான தனது பிணைப்பு மற்றும் காங்கிரஸ் தலைவராக அதன் அரசியல் பொறுப்பை ஏற்றுக்கொண்டது குறித்த தனது உணர்வுகளைப் பதிவு செய்வார் என்றும் அவர் எதிர்பார்க்கிறார்.

ஆனால், அந்த வாரிசு அரசியல் தற்போது தொடர்ந்து கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

ஆளும் பாஜக "காங்கிரஸ் இல்லாத இந்தியா" என்ற முழக்கத்தை முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறது. அதேவேளை, அக்கட்சியின் விமர்சகர்கள் காங்கிரஸுக்கு எதிரான தங்களது போராட்டத்தை, குடும்ப அரசியலுக்கு எதிரான போராட்டமாகவும் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பல தேர்தல் தோல்விகளைச் சந்தித்ததுடன், அதன் பல தலைவர்கள் எதிர்க்கட்சிகளுக்குத் தாவியுள்ளனர். இதனால், காந்தி குடும்பத்தால் காங்கிரஸை மீண்டும் வலுப்படுத்த முடியுமா என்பது மட்டுமல்லாமல், அக்கட்சியை ஒன்றுபட்டு வைத்திருக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சோனியா காந்தி தனது நினைவுக்குறிப்பில் ஆராய முயல்வதாகக் கூறும் விஷயத்தின் மையத்துக்கே இந்தக் கேள்வி செல்கிறது.

"என் குடும்பத்தைப் பற்றி அதிகம் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் உந்துதல்கள், செயல்கள் மற்றும் அவர்களிடம் இருந்த மிகவும் மனித இயல்பான குறைகள் பற்றிய உண்மையை ஆழமாகப் புரிந்துகொள்ள முடிந்தவர்கள் மிகச் சிலரே. பல வகைகளில், இந்தப் புத்தகம் அவர்களின் மனிதநேயத்திற்கான ஒரு அஞ்சலியாகும்," என்று இந்தப் புத்தகம் குறித்து சோனியா காந்தி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அவரது இந்த சுயசரிதை வெறும் அரசியல் சுயவிமர்சனமாக இல்லாமல், நேரு - காந்தி அரசியல் வாரிசுத்துவம் தனக்கு என்ன அர்த்தம் கொண்டது, அது ஏன் இன்னும் முக்கியமானது என்று தான் கருதுவதற்கான காரணங்களை விளக்குவதே இந்தப் புத்தகத்தின் நோக்கமாக இருக்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு