யுடியூப் பிரபலமாக இருந்த "முன்னாள் முஸ்லிம்" - 26 ஆண்டுகளுக்குப் பின் கைதானது எப்படி?

டிவியில் விவாதம், யூடியூபில் வீடியோக்கள், ஆனால் 'தேடப்பட்ட குற்றவாளி': 26 ஆண்டுகளுக்கு பின் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், DELHI POLICE

படக்குறிப்பு, ஏப்ரல் 24 அன்று டெல்லி காவல்துறை சலீம் வஸ்திக்கை கைது செய்தபோது, ​​அவர் பலவீனமான நிலையில் இருந்தார்.
    • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 10 நிமிடங்கள்

சலீம் கான், 'சலீம் வஸ்திக்' என்ற பெயரில் பல ஆண்டுகளாகப் பொதுவெளியில் தீவிரமாக இயங்கி வந்தபோதிலும், காவல்துறையால் "தேடப்படும் நபராகவே" கருதப்பட்டு வந்தார். அவர் தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ந்து பங்கேற்றார், பாட்காஸ்டுகளில் பேசினார், சமூக ஊடகங்களில் காணொளிகளைப் பதிவிட்டார். பொதுமக்கள் முன்பாகத் திறந்தவெளியிலேயே செயல்பட்ட போதிலும், காவல்துறையின் ஆவணங்களில் அவர் ஒரு "தேடப்படும் நபர்" என்றே தொடர்ந்து குறிப்பிடப்பட்டு வந்தார்.

ஏப்ரல் 24ஆம் தேதியன்று, காஸியாபாத்தின் லோனி பகுதியில் வைத்து, 54 வயதான சலீம் கானை டெல்லி காவல்துறை கைது செய்தது. தற்காப்புக் கலையில் 'பிரவுன் பெல்ட்' பெற்றிருந்த அவர், கைது செய்யப்பட்ட நேரத்தில் மிகவும் மெலிந்து, பலவீனமான நிலையில் காணப்பட்டார். அவரது இடுப்பைச் சுற்றி, சிறுநீர்ப் பை ஒன்று கட்டப்பட்டு இருந்தது.

சமீப ஆண்டுகளில், சலீம் கான் இஸ்லாமிய மதத்தில் இருந்து விலகி, தன்னை ஒரு 'முன்னாள் முஸ்லிம்' என்றே அடையாளப் படுத்திக்கொள்ளத் தொடங்கியிருந்தார். அவர் தனது பெயரையோ அல்லது தோற்றத்தையோ மாற்றிக்கொள்ளாத போதிலும், பொது மக்களின் பார்வைக்குத் தென்படும் வகையிலேயே இருந்துகொண்டு, 26 ஆண்டுகளாகக் கைது செய்யப்படாமல் தப்பி வந்தார். இந்தக் காலகட்டத்தில், இஸ்லாம் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துகளைத் தெரிவித்ததன் மூலம் அவர் பரவலாக அறியப்பட்டார். மேலும், இந்துத்துவ அமைப்புகளுடனும் அவர் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக்கொண்டார்.

பிப்ரவரி 2026இல் சலீம் கான் மீது ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வெளியேறிய அவர், தான் கைது செய்யப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் காஸியாபாத்தின் லோனி பகுதியிலுள்ள அசோக் விஹாரில் ஒரு புதிய வீட்டிற்குக் குடியேறினார். டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவைச் சேர்ந்த 'கொள்ளை மற்றும் வழிப்பறி தடுப்புப் பிரிவின்' சிறப்புக் குழு ஒன்று, அந்த இடத்திற்குச் சென்று அவரைக் கைது செய்தது.

கடந்த 1995ஆம் ஆண்டில், 13 வயது பள்ளி மாணவர் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த குற்றத்திற்காக, சலீம் கானுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நவம்பர் 2000இல் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார், அதிலிருந்து அவர் தலைமறைவாகவே இருந்து வந்தார்.

காவல்துறை ஆவணங்களின்படி, டெல்லியின் தர்யாகஞ்ச் பகுதியில் அமைந்துள்ள 'ராம்ஜாஸ் பள்ளி'யில் சலீம் கான் தற்காப்புக் கலை பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார். அதே பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவரைக் கடத்திச் சென்று கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

டெல்லியின் கோகுல்புரி காவல் நிலையத்தில், ஜனவரி 1995இல் அவர் மீது கடத்தல் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்ததாகக் காவல்துறை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குற்றத்திற்காக 1997ஆம் ஆண்டில் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

நவம்பர் 2000இல் டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு இடைக்காலப் பிணை வழங்கியது. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அவர் தலைமறைவானார். பல ஆண்டுகளுக்கு அவர் எங்கு இருக்கிறார் என்பதைக் கண்டறிய முடியாத நிலையே நீடித்தது. பின்னர் 2011ஆம் ஆண்டில், கடத்தல் மற்றும் கொலை வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. அந்த நேரத்தில் அவர் தலைமறைவாகவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் தற்போது கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

கடந்த 1997ஆம் ஆண்டில் சலீம் கானுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்த டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு

பட மூலாதாரம், DELHI HIGH COURT

படக்குறிப்பு, கடந்த 1997ஆம் ஆண்டில் சலீம் கானுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்த டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு

டெல்லி காவல்துறை சலீமை கைது செய்தது எப்படி?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கொள்ளை மற்றும் வழிப்பறி தடுப்புப் பிரிவு என்பது டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவின் கீழ் செயல்படும் ஒரு சிறப்புப் பிரிவாகும். கொள்ளை, வழிப்பறி மற்றும் பிற திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்காக இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டது. பரோல் அல்லது பிணை பெற்ற பிறகு தப்பியோடும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் பணியிலும் இது ஈடுபடுகிறது.

டெல்லி காவல்துறை குற்றப்பிரிவின் துணை ஆணையர் சஞ்சீவ் யாதவ் இதுகுறித்துப் பேசுகையில், "டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு, தேடப்படும் குற்றவாளிகள், பரோலில் தலைமறைவான குற்றவாளிகள் மற்றும் இன்னும் பிடிபடாத பிற குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பிடிக்கத் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. அந்தச் சூழலில்தான், தண்டனை பெற்ற குற்றவாளியான சலீம் கான் பரோலில் தலைமறைவாக இருப்பது கண்டறியப்பட்டது," என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "சலீம் பற்றி கூடுதல் தகவல்கள் சேகரிக்கப்பட்டபோது, அவர் தனது அடையாளத்தை மறைத்து லோனியில் வசித்து வந்தது தெரிய வந்தது. காவல்துறை குழு இந்தத் தகவலை உறுதி செய்து அவரைக் கைது செய்தது," என்றார்.

குற்றப்பிரிவு அதிகாரிகள், மார்ச் மாத நடுப்பகுதியில் சலீம் கான் வழக்கில் இந்தப் பிரிவு பணியாற்றத் தொடங்கியதாகக் கூறினர்.

இந்தப் பிரிவை வழிநடத்தும் காவல் ஆய்வாளர் ராபின் தியாகி, "இந்த வழக்கின் கோப்பு ஒரு வழக்கமான கோப்பாக எங்களிடம் வந்தது. மார்ச் மாதம், எங்கள் குழுவைச் சேர்ந்த இருவர், தேடப்படும் குற்றவாளியான சலீம் கானின் சொந்த ஊரான, உத்தர பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள நானுபுரா கிராமத்திற்குச் சென்றனர். சலீம் கானின் குடும்பத்தினர் அவர் இறந்துவிட்டதாக அவர்களிடம் கூறினர்," என்றார்.

ராபின் தியாகியும் அவரது குழுவும் இதற்கு முன்னர் பல ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த பல குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர். சமீபத்தில், தனது மனைவியைக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு, 26 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த மற்றொரு நபரையும் அவர்கள் கைது செய்திருந்தனர்.

சலீம் கானின் வழக்கை விசாரிக்கையில், அவர் இறந்துவிட்டார் என்பதை நிரூபிக்க குற்றப்பிரிவு குழுவால் எந்த அதிகாரபூர்வ மரணச் சான்றிதழையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில், காவல்துறை குழு மேலும் விசாரிக்க, உத்தர பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான நானுபுராவுக்கு சென்றது.

காவல் ஆய்வாளர் ராபின் தியாகியும் அவரது குழுவும், நீண்ட காலமாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைக் கைது செய்கின்றனர்
படக்குறிப்பு, காவல் ஆய்வாளர் ராபின் தியாகியும் அவரது குழுவும், நீண்ட காலமாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைக் கைது செய்கின்றனர்

நானுபுராவில் நடந்த விசாரணையின் போது, ஒரு உள்ளூர் நபர் காவல்துறைக்கு முக்கியத் தகவலை அளித்தார். காஸியாபாத்தில் உள்ள லோனியில் வசிக்கும் சலீம் வஸ்திக் என்ற நபர்தான் உண்மையில் தேடப்படும் குற்றவாளியான சலீம் கான் என்று அந்தத் தகவல் மூலம் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் ஒருவர், "இந்த உளவுத் தகவலுக்குப் பிறகு, எங்கள் குழு டெல்லிக்கு திரும்பி, சலீம் கானுக்கும் சலீம் வஸ்திக்குக்கும் இடையிலான தொடர்புகளை இணைக்கத் தொடங்கினோம்," என்றார்.

சில நாட்களுக்குள், சலீம் வஸ்திக்தான் உண்மையில் சலீம் கான் என்பதற்கான வலுவான அறிகுறிகள் காவல்துறைக்குக் கிடைக்கத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், ஒருவரைக் கைது செய்வதற்கு முன், காவல்துறை அனைத்து விவரங்களையும் முழுமையாக உறுதிப்படுத்திக் கொள்ளவும், முறையான ஆதாரங்களைச் சேகரிக்கவும் விரும்பியது.

கடந்த 1995ஆம் ஆண்டில், கோகுல்பூரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாக சலீம் கான் முதன்முதலில் கைது செய்யப்பட்டபோது, அவரது கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. புலனாய்வு அதிகாரிகள் அந்தக் பழைய கைரேகைகளை, சலீம் வஸ்திக்கின் கைரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, அந்தக் கைரேகைகள் ஒன்றுடன் ஒன்று பொருந்திப் போயின.

இந்த உறுதிப்படுத்தலுக்குப் பிறகு, லோனியில் உள்ள ஒரு முகவரியைப் பயன்படுத்திப் பெறப்பட்ட சலீம் வஸ்திக்கின் ஆதார் அட்டையையும் காவல்துறை கைப்பற்றியது.

விசாரணை அதிகாரியின் கூற்றுப்படி, "சலீம் வஸ்திக்கின் ஆதார் அட்டையில் அவரது தந்தையின் பெயர் 'நூர் ஹசன்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் முகவரி 'லோனி' என்று இருந்தது. தேடப்படும் குற்றவாளியான சலீம் கானின் தந்தையின் பெயரும் நூர் ஹசன்தான். தந்தையின் பெயர் என்பது, இருவருக்கும் இடையே ஒத்துப்போன ஒரு மிக முக்கியமான தகவலாக அமைந்தது."

விசாரணையின் போது, ​​சலீம் கானின் பழைய அடையாள அட்டையை காவல்துறை கண்டெடுத்தது; அவரைச் சென்றடைவதில் இது மிக முக்கியப் பங்கு வகித்தது.

பட மூலாதாரம், DELHI POLICE

படக்குறிப்பு, விசாரணையின் போது, ​​சலீம் கானின் பழைய அடையாள அட்டையை காவல்துறை கண்டெடுத்தது; அவரைச் சென்றடைவதில் இது மிக முக்கியப் பங்கு வகித்தது.

இதையடுத்து, காவல்துறையினர் நீதிமன்ற ஆவணங்களைச் சரிபார்த்தனர். அப்போது, சலீம் கானின் மனைவி பெயர் 'அப்சானா' என்பதை அவர்கள் கண்டறிந்தனர். அதேவேளையில், சலீம் வஸ்திக்கின் மனைவி பெயரும் அப்சானா என்றே இருந்தது. இது இருவருக்கும் இடையே ஒத்துப்போன மற்றொரு முக்கியத் தகவலாகும்.

மேலும், 1998ஆம் ஆண்டில் அப்சானா ஒரு நீதிபதிக்கு எழுதியிருந்த பழைய கடிதம் ஒன்றையும் காவல்துறையினர் கண்டெடுத்தனர். அந்தக் கடிதத்தில், தனது கணவரை 'காவல் கண்காணிப்பில் வழங்கப்படும் பரோலில்' (custody parole) விடுவிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

விசாரணையின்போது, ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஒரு ஜூடோ-கராத்தே பயிற்சி நிறுவனம் வழங்கிய அடையாள அட்டை ஒன்றின் மூலம் மற்றொரு முக்கிய ஆதாரம் கிடைத்தது. அந்த அடையாள அட்டையில், இளம் வயது சலீம் கான் கராத்தே தோரணையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

அந்தப் புகைப்படத்தை, சலீம் வஸ்திக்கின் தற்போதைய புகைப்படங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, இரண்டுமே ஒரே நபரைப் போலவே காட்சியளித்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

ஒரு காவல்துறை அதிகாரி இதுகுறித்துத் தெரிவிக்கையில், "உளவுத் தகவல்கள், தொழில்நுட்ப ரீதியிலான விசாரணைகள், கடந்த ஒரு மாத காலமாக நடத்தப்பட்ட விசாரணையின்போது திரட்டப்பட்ட ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், சலீம் என்பவர் உண்மையில் தேடப்படும் குற்றவாளியான சலீம் கான்தான் என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்," என்று கூறினார்.

விசாரணையின்போது, சலீம் வஸ்திக் தனது பூர்வீக சொத்துகளை விற்க முயன்றார் என்ற தகவலையும் காவல்துறையினர் அறிந்துகொண்டனர்.

மேலும், கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் சலீம் அளித்திருந்த பல்வேறு நேர்காணல்களையும் காவல்துறை விசாரணைக் குழுவினர் உன்னிப்பாக ஆராய்ந்தனர்.

ஒரு காவல்துறை அதிகாரி இதுகுறித்து மேலும் கூறுகையில், "சலீம் கான் ஒரு குறிப்பிட்ட மதம் குறித்துப் பேசும்போது, இஸ்லாம் மதத்தை விட்டு விலகுவதற்கு முன்பு தான் ஒரு மதபோதகராக இருந்ததாகத் திரும்பத் திரும்பக் குறிப்பிட்டு வந்தார். ஆனால், அவர் அளித்திருந்த அனைத்து நேர்காணல்களிலுமே 1995 முதல் 2000 வரையிலான காலகட்டம் குறித்த தகவல்கள் மட்டும் விடுபட்டிருந்தன. அவர் தனது வாழ்க்கையின் மற்ற அனைத்து அம்சங்கள் குறித்தும் விரிவாகப் பேசினாரே தவிர, இந்தக் குறிப்பிட்ட காலகட்டம் குறித்து ஒருபோதும் வாய் திறக்கவில்லை. இதுவும், சலீம் என்பவர் உண்மையில் தேடப்படும் குற்றவாளியான சலீம் கான்தான் என்று நாங்கள் உறுதியாக நம்புவதற்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது," என்று தெரிவித்தார்.

தலைமைக் காவலர் மின்டு கைதுக் குழுவில் ஒருவராக இருந்தார்
படக்குறிப்பு, தலைமைக் காவலர் மின்டு கைதுக் குழுவில் ஒருவராக இருந்தார்

போலீசார் கைது செய்ய முயன்றபோது சலீம் வஸ்திக் என்ன செய்தார்?

சலீம் வஸ்திக்கை கைது செய்த காவல்துறை குழுவைச் சேர்ந்த அதிகாரிகளின் கூற்றுப்படி, லோனியில் உள்ள அவரது வீட்டிற்குப் போலீசார் சென்றடைந்தபோது, தான் சலீம் கான் என்பதை அவர் முதலில் மறுத்தார்.

அவர் அமைதியாகவும் நிதானமாகவும் காணப்பட்டார். அவர் அங்கிருந்து ஓடவோ, தப்பிச் செல்லவோ முயலவில்லை. டெல்லி காவல்துறை குழுவினர், உள்ளூர் லோனி போலீசாருடன் இணைந்து அங்கு வந்திருந்தனர். மேலும், அவர்கள் தங்களுடன் முழுமையான ஆதாரங்களின் கோப்பு ஒன்றையும் வைத்திருந்தனர்.

விசாரணை அதிகாரியின் கூற்றுப்படி, போலீசார் அவரது பழைய அடையாள அட்டையைக் காண்பித்தபோதுகூட, தான் சலீம் கான் என்பதை அவர் தொடர்ந்து மறுத்துக்கொண்டே இருந்தார்.

அதன் பின்னர், போலீசார் ஆதாரங்களை ஒவ்வொன்றாக அவருக்குக் காண்பிக்கத் தொடங்கியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். கூடுதல் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டபோது, அவரது முகபாவனை மாறியது. இறுதியாக, தான் சலீம் கான் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

கைது நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒரு காவல்துறை அதிகாரியின் கூற்றுப்படி, சலீம் கைது செய்யப்படுவதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டபோது, "செய்த செயல்களுக்கான விளைவுகளை ஒருவர் நிச்சயமாக சந்திக்க நேரிடும்," என்று அவர் கூறினார்.

விசாரணையின் போது, ​​காவல்துறை சலீம் கானின் மற்றொரு பழைய புகைப்படத்தைக் கண்டறிந்தது.

பட மூலாதாரம், ARRANGED

படக்குறிப்பு, விசாரணையின் போது, ​​காவல்துறை சலீம் கானின் மற்றொரு பழைய புகைப்படத்தைக் கண்டறிந்தது.

சலீம் கான், சலீம் வஸ்திக் ஆக மாறியது எப்படி?

சலீம் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக காஸியாபாத்தின் லோனி பகுதியில் வசித்து வந்தார். அவர் முன்னதாக கடத்தல் மற்றும் கொலை செய்ததாகக் கூறப்படும் இடத்திலிருந்து இந்த இடம் வெகு தொலைவில் இல்லை.

காவல்துறையின் கூற்றுப்படி, விசாரணையின்போது, சலீம் கான், ஜாமீனில் இருந்தபோது தப்பி ஓடிய பிறகு, சில ஆண்டுகளாகத் தனது கிராமத்திற்குத் திரும்பவில்லை என்று கூறினார். அந்தக் காலகட்டத்தில், அவர் ஒரு மதரஸாவில் இஸ்லாத்தை பயின்றார். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, லோனியின் ஸ்டெரிலைசேஷன் காலனி பகுதியில் பெண்களுக்கான ஆடைக்கடை ஒன்றைத் திறந்தார்.

தனது பேட்டிகளில் ஒன்றில், சலீம் கான், "நான் குர்ஆனை படித்திருக்கிறேன், இஸ்லாமிய கல்வி பெற்றிருக்கிறேன், மேலும் ஹரியாணாவின் அம்பாலாவில் உள்ள ஒரு புனிதத் தலத்தில் 5-6 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.

இருப்பினும், சலீம் கான் தனது அடையாளத்தை ஒருபோதும் அதிகாரபூர்வமாக மாற்றிக்கொள்ளவில்லை. அவர் உருவாக்கிய புதிய ஆவணங்களில், அவரது மனைவியின் பெயரும் தந்தையின் பெயரும் அப்படியே இருந்தன. அவர் தனது பெயரிலிருந்து "கான்" என்பதை மட்டும் நீக்கிவிட்டு "வஸ்திக்" என்பதைச் சேர்த்திருந்தார்.

தனது பெயருடன் 'வஸ்திக்' என்பதை ஏன் சேர்த்துக் கொண்டார் என்பது குறித்து சலீம் கான் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், "நான் வாழ்க்கையின் எதார்த்தத்தை உணர்ந்து, அதைப் பின்பற்றத் தொடங்கி, என் பெயருடன் 'வஸ்திக்' என்பதைச் சேர்த்துக் கொண்டேன்" என்று கூறியிருந்தார்.

காவல்துறையின் கூற்றுப்படி, கடந்த 26 ஆண்டுகளாக, காவல்துறை குழுக்கள் அவரது மூதாதையர் வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம், அவர் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் அவர்களிடம் கூறியுள்ளனர். ஆனால், அவரது மரணத்திற்கான எந்த ஆதாரத்தையும் அவர்கள் ஒருபோதும் வழங்கவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக, சலீம் கான் காஸியாபாத்தின் லோனி பகுதியில் உள்ள அமன் கார்டனில் வசித்து வந்தார்.

காவல்துறையின் கூற்றுப்படி, சலீம் வஸ்திக் தான் சலீம் கான் இல்லை என்று பாசாங்கு செய்ய முயன்றார்.

பட மூலாதாரம், DELHI POLICE

படக்குறிப்பு, காவல்துறையின் கூற்றுப்படி, சலீம் வஸ்திக் தான் சலீம் கான் இல்லை என்று பாசாங்கு செய்ய முயன்றார்.

உண்மையில், கடந்த ஓராண்டில் அவர் தனது சொந்த யூடியூப் சேனலை தொடங்கி, இஸ்லாம் பற்றிய காணொளிகளைத் தொடர்ந்து பதிவிட்ட பிறகு வெளிச்சத்திற்கு வந்தார். ஆனால் அதற்கு முன்பே, அவர் பல ஆண்டுகளாக ஊடகங்களில் தோன்றி, ஒரு முன்னாள் முஸ்லிமாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வந்தார்.

"க்யா கஹ்தா ஹை இஸ்லாம்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் ஒரு முன்னாள் முஸ்லிமாக பேசும் பல காணொளிகள் யூடியூபில் உள்ளன. ஆகஸ்ட் 2022இல் வெளியான அத்தகைய ஒரு காணொளியில், சலீம் வஸ்திக் இஸ்லாத்திற்கு எதிராக வாதிடுவதைக் காணலாம்.

அவர் தொடர்ந்து பாட்காஸ்டுகளில் தோன்றி, புண்படுத்தும் கருத்துகளைத் தெரிவித்து வந்தார். இந்தக் காலகட்டத்தில், யெட்டி நரசிம்மானந்த், பிங்கி சௌத்ரி போன்ற இந்து ஆர்வலர்களுடனான அவரது தொடர்பு அதிகரித்தது.

பிப்ரவரி 27, 2026 அன்று, லோனியில் உள்ள அவரது வீட்டில் இரண்டு இளைஞர்கள் அவரைத் தாக்கினர். டெல்லி காவல்துறையின் செய்திக் குறிப்பு ஒன்றின்படி, இந்தத் தாக்குதல் அவரது சமூக ஊடக செயல்பாடுகள் காரணமாகவே நடத்தப்பட்டது.

சில நாட்களுக்குப் பிறகு, உத்தர பிரதேச காவல்துறை அந்தத் தாக்குதலை மேற்கொண்ட இருவரையும் தனித்தனி என்கவுன்டர்களில் சுட்டுக் கொன்றது.

சலீம் வஸ்திக் இந்தப் படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு, இஸ்லாம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார்

பட மூலாதாரம், Saleem Wastik is on Facebook

படக்குறிப்பு, சலீம் வஸ்திக் சமூக ஊடகங்களில் இஸ்லாம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார்

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, சலீம் வஸ்திக் நாடு முழுவதும் பரவலாக அறியப்படும் ஒரு நபராக மாறினார். பல இந்துத்துவ செயல்பாட்டாளர்கள் அவரைச் சந்தித்துப் பேசினர்; சில அரசியல்வாதிகளும் அவரை நேரில் சந்தித்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பின்னர், உத்தர பிரதேச காவல்துறை அவருக்குத் தனிப்பட்ட பாதுகாப்பையும் வழங்கியது.

இதற்கிடையில், ஷாம்லியில் வசிக்கும் சலீமின் குடும்பத்தினர் அவரைப் பற்றிப் பேசும்போது மிகுந்த முன்னெச்சரிக்கையுடனும் கவனத்துடனும் பேசினர். உள்ளூர் பத்திரிக்கையாளர் பாரஸ் ஜேனிடம் பேசிய அவரது சகோதரர் முசாஃபர் ஹசன், "எங்களுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; அவர் வெகு காலத்திற்கு முன்பே இந்த கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டார். அவரைப் பற்றிய எந்தத் தகவலையும் நாங்கள் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. தவறான செயல்களுக்கு எப்போதும் தவறான விளைவுகளே ஏற்படும்," என்று கூறினார்.

இருப்பினும், சலீம் கான் 'சலீம் வஸ்திக்' என்ற பெயரில் பொதுவெளியில் தோன்றிப் பிரபலமடைந்தபோது, அது குறித்து ஏன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு முசாஃபர் ஹசன் பதிலளிக்கவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக சலீம் கான் காஸியாபாத்தின் லோனி பகுதியில் வசித்து வந்தார் என்பதை மட்டும் அவர் ஒப்புக் கொண்டார்.

சலீம் கானை அறிந்திருந்த அப்பகுதியைச் சேர்ந்த பலரும், அவர் சிறையில் இருந்து தப்பி வரவில்லை என்றும், மாறாகத் தனது தண்டனைக் காலத்தை முழுமையாக நிறைவு செய்த பின்னரே வெளியே வந்திருப்பார் என்றும் தாங்கள் நம்புவதாகத் தெரிவித்தனர்.

ஷாம்லியில் வசிக்கும் சலீமின் சகோதரர், அவர் லோனியில் தங்கியிருந்தது குடும்பத்தினருக்குத் தெரிந்து இருந்தாலும், அவருடன் அதிக தொடர்பு இருக்கவில்லை என்று கூறுகிறார்

பட மூலாதாரம், PARAS JAIN

படக்குறிப்பு, ஷாம்லியில் வசிக்கும் சலீமின் சகோதரர், அவர் லோனியில் தங்கியிருந்தது குடும்பத்தினருக்குத் தெரிந்து இருந்தாலும், அவருடன் அதிக தொடர்பு இருக்கவில்லை என்று கூறுகிறார்

சலீம் கானின் அண்டை வீட்டார் கூறுவது என்ன?

காவல்துறையின் தகவல்படி, சலீம் கானுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

லோனியின் அசோக் விஹார் பகுதியில், ஒரு குறுகிய சந்தை உள்ளது. இந்தச் சந்தையின் இறுதியில், சலீம் கானின் புதிதாகக் கட்டப்பட்ட, உயரமான வீடு ஒன்று காட்சியளிக்கிறது. அந்த வீட்டின் வெளிப்புறத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தத் தெருவில் உள்ள பெரும்பாலான வீடுகளில் சலீமின் வீடுதான் மிகவும் உயரமானது. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு, சுமார் ஒரு மாதத்திற்கு முன்புதான் அவர் இந்த வீட்டிற்குக் குடியேறினார்.

அவர் தனது அண்டை வீட்டாருடன் பெரிதாகப் பழகியதில்லை. இருப்பினும், அவரது மனைவி சில நேரங்களில் அருகில் வசிக்கும் பெண்களைப் பார்த்து நலம் விசாரிப்பது வழக்கம்.

சலீம் கான் கைது செய்யப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, அவரது மனைவி தங்கள் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

அருகில் வசிக்கும் ஒரு பெண், "இந்த வீடு கடந்த ஓராண்டாகக் கட்டுமானப் பணியில் இருந்தது. முன்னதாக, கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக சலீம் எப்போதாவது இங்கு வருவார். கடந்த மாதம்தான் அவரது மனைவி அவருடன் இங்கு வந்து குடியேறினார்" என்றார்.

"சில நேரங்களில் அவர் வீட்டை விட்டு வெளியே வந்து எங்களைப் பார்த்து நலம் விசாரிப்பார். தனது கணவர் இஸ்லாத்திற்கு எதிராகப் பேசுவதில் அவருக்குப் பெரிதாக விருப்பம் இல்லை. அவரோ, முறையாக தொழுகை நடத்தி இஸ்லாமிய நெறிமுறைகளைப் பின்பற்றி வந்தார்" என்று மற்றொரு பெண் தெரிவித்தார்.

லோனியின் அசோக் விஹார் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட இந்த வீட்டில், சலீம் வஸ்திக் சில நாட்களுக்கு முன்புதான் குடியேறியிருந்தார். அவர் கைது செய்யப்படுவதற்குச் சில நாட்கள் முன்புவரை, அவரது மனைவியும் மகனும் அவருடனேயே இருந்தனர்.
படக்குறிப்பு, லோனியின் அசோக் விஹார் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட இந்த வீட்டில், சலீம் வஸ்திக் சில நாட்களுக்கு முன்புதான் குடியேறியிருந்தார். அவர் கைது செய்யப்படுவதற்குச் சில நாட்கள் முன்புவரை, அவரது மனைவியும் மகனும் அவருடனேயே இருந்தனர்.

சலீம் கானின் மகனும் அங்கு வசித்து வந்தான். அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் இதுகுறித்துப் பேசியபோது, "அவன் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக அருகிலுள்ள மசூதிக்கு செல்வது வழக்கம்; சில நேரங்களில் தலையில் தொப்பி அணிந்தபடியும் வெளியே செல்வான்" என்றார்.

இந்தக் குடியிருப்புப் பகுதி பெரும்பாலும் ஏழை முஸ்லிம் குடும்பங்களைக் கொண்டதாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இங்குள்ள நிலங்களின் விலை மிகக் குறைவாகவே இருந்தது. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலோர் உத்தர பிரதேசத்தின் அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்; இவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களாகவோ அல்லது சிறு சிறு வேலைகளைச் செய்தோ பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

சலீம் வஸ்திக்கின் வீட்டுக் கட்டுமானப் பணியின்போது சில நாட்கள் வேலை செய்த ரஹீசுதீன் என்ற கொத்தனார் பேசியபோது, "தாக்குதலுக்கு ஆளாவதற்கு முன்பு, அவர் நல்ல உடல்நலத்துடன் இருந்தார். அவர் எப்போதாவது இங்கு வருவார். சில நேரங்களில் அவருடன் தொழிலாளர்களும் வருவதுண்டு" என்றார்.

மேலும் பேசிய ரஹீசுதீன், "சுமார் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்பு, ஒரு நாள் அவர் இங்கு வந்தபோது, கையில் மைக்ரோஃபோன்களை ஏந்திய சில 'யூடியூபர்களும்' அவருடன் வந்திருந்தனர். அவர்கள் இஸ்லாம் மற்றும் குர்ஆன் குறித்துப் பெரிதும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போதுதான், அவர்கள் இஸ்லாத்திற்கு எதிராகப் பேசும் யூடியூபர்கள் என்பதை நான் தெரிந்துகொண்டேன்" என்றார்.

தாக்குதலுக்குப் பிறகு, சலீம் வஸ்திக் அங்கு வந்து குடியேறியபோது, பல இந்துத்துவ செயல்பாட்டாளர்களும் உள்ளூர் தலைவர்களும் அவரைச் சந்திப்பதற்காக அங்கு வந்ததாக ரஹீசுதீன் கூறினார்: "இங்கு பெரிய கார்கள் வரத் தொடங்கியபோதும், அவரது வீட்டின் வெளியே பல மதத் தலைவர்களும் காவல்துறை அதிகாரிகளும் தென்பட்டபோதும், ஏதோ ஒரு முக்கியப் பிரமுகர் இங்கு குடியேறியிருப்பதாக நாங்கள் கருதினோம்."

உள்ளூர் இந்துத்துவ இளைஞர்கள் சிலரும் இதில் ஈடுபட்டனர். தனது பெயரை வெளியிட விரும்பாத அத்தகைய இளைஞர் ஒருவர் பிபிசியிடம் கூறுகையில், "அவர் ஒரு குழந்தையைக் கொன்றவர் என்று எனக்குத் தெரிந்ததில் இருந்து, அவர் மீது எனக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டுள்ளது. இப்போது, அவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ மீண்டும் இங்கு வந்து குடியேற முயன்றால், இப்பகுதி மக்கள் அவர்களை இங்கு தங்க அனுமதிக்க மாட்டார்கள்," என்றார்.

தேவா என்ற மற்றொரு இளைஞர் கூறுகையில், "அவர் மிகவும் ஆடம்பரமாகப் பேசுவார். அவரைச் சந்திக்கப் பலர் வருவது வழக்கம்; ஆனால், அவரது கடந்த கால குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, இப்போது அவரைப் பற்றிப் பேசக்கூட யாரும் விரும்புவதில்லை," என்றார்.

31 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட குழந்தையின் குடும்பம், தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது
படக்குறிப்பு, 31 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட குழந்தையின் குடும்பம், தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது

சலீம் வஸ்திக்கால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நிலைமை

சுமார் 31 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கடத்தல் மற்றும் கொலைச் சம்பவம், பாதிக்கப்பட்டவரின் குடும்ப வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியமைத்துவிட்டது. அவர்கள் டெல்லியின் கஜூரி பகுதியில் உள்ள ஷேர்பூர் சௌக் அருகே வசித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தையான சீதாராம், தற்போது ஒரு வன்பொருள் கடையை (hardware shop) நடத்தி வருகிறார். அவர் அந்தக் கடையைத் தனது பழைய வீட்டிற்கே மாற்றியமைத்து நடத்தி வருகிறார்.

அவர் சலீம் குறித்துப் பேசுகையில், "கடந்த 31 ஆண்டுகளில், என் கண்களிலிருந்து கண்ணீர் அல்ல; ரத்தமே வழிந்தோடியிருக்கிறது. என் 13 வயது மகன் கொடூரமாகக் கொல்லப்பட்டான். இன்று அவன் உயிரோடு இருந்திருந்தால், இந்த முதுமைப் பருவத்தில் நான் இந்தக் கடையில் நின்று உழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. சலீமின் முகத்தை என்னால் என்றாவது மறக்க முடியுமா?" என்று வேதனையுடன் கூறுகிறார்.

சலீம் மீண்டும் கைது செய்யப்பட்டது குறித்துக் கேட்டபோது, சீதாராம் கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தினார். சலீம் ஜாமீனில் வெளியேறிய பிறகு தப்பி ஓடிவிட்டார் என்பதே தனக்குத் தெரியாது என்று அவர் கூறினார்.

மீண்டும் கைது செய்யப்பட்ட பிறகு இப்போது எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டபோது, அவரது முகத்தில் மகிழ்ச்சியும் அச்சமும் ஒரே நேரத்தில் தென்பட்டன.

ஒரு கணம், அவரது கண்கள் கண்ணீரால் நிரம்பின. அவர், "நான் அழுதுகொண்டே இருக்கிறேன். 31 ஆண்டுகளாக ஆறியிருந்த என் பழைய காயம் இப்போது மீண்டும் புதிதாகத் திறந்துகொண்டதைப் போல் இருக்கிறது. எப்படியோ, நான் என் வாழ்க்கையைத் தேற்றிக்கொண்டு முன்னோக்கி நகர்ந்திருந்தேன். இப்போது, நான் எங்கு சென்று அழுவது? நான் எங்கு செல்வது?" என்று கதறினார்.

மேலும் அவர் தனது அச்சத்தையும் வெளிப்படுத்தி, "அவன் இப்போது ஒரு பெரிய ஆளாகிவிட்டான். 26 ஆண்டுகளாக சிறைக்கு வெளியே திரிந்தான்; காவல்துறையினரால் அவனைக் கைது செய்யவே முடியவில்லை. அரசாங்கமே அவனுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது; பெரிய அளவிலான இந்துத்துவ ஆதரவாளர்கள் அவனுக்குத் துணை நிற்கிறார்கள். அவன் சிறையிலிருந்து தப்பி ஓடியதே எங்களுக்குத் தெரியாது; ஆனால் இப்போது நாங்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறோம்," என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு