மேற்கு வங்கத்தில் 34 லட்ச எஸ்.ஐ.ஆர் மேல்முறையீடுகளில் 1,607 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டது எழுப்பும் கேள்விகள் என்ன?

பட மூலாதாரம், Diptendu Dutta/NurPhoto via Getty Images
- எழுதியவர், மோயூரி சோம் மற்றும் அபிக் டெப்
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கு ஒரு நாள் முன்னதாக, மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட்ட 1,468 வாக்காளர்களின் துணைப் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மேலும் வாக்காளர் பட்டியலிலிருந்து ஆறு வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தத்தின் (SIR) கீழ் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளை விசாரித்த, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தீர்ப்பாயங்கள் எடுத்த முடிவுகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் அமைந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட இந்தத் துணைப் பட்டியல் இரண்டாவது பட்டியலாகும். முதல் துணைப் பட்டியல் ஏப்ரல் 22 அன்று முதற்கட்டத் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் 139 வாக்காளர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தனர், எட்டு பேர் நீக்கப்பட்டனர்.
எனவே, இரண்டு பட்டியல்களின் மூலமாக மொத்தம் 1,607 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், அதே சமயம் 14 பேர் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர்.
தீர்ப்பாயங்களில் 34 லட்சத்திற்கும் அதிகமான மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த எண்கள் வியக்கத்தக்க வகையில் உள்ளன என்று இந்த மாத தொடக்கத்தில் பிறப்பித்த உத்தரவில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
சிறப்புத் தீவிர திருத்தம் குறித்து எழுப்பப்படும் கேள்விகள்
சிறப்புத் தீவிர திருத்தத்திற்குப் பிறகு மேற்கு வங்க வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 91 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
இவர்களில் 63 லட்சம் பேர் "அங்கு இல்லாதவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் அல்லது இரட்டைப் பதிவுகள்" என வகைப்படுத்தப்பட்டனர். மற்ற 27 லட்சம் பேரின் பதிவுகளில் எழுத்துப்பிழை, பாலினப் பதிவில் பிழைகள், பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியுடன் வழக்கத்திற்கு மாறான வயது இடைவெளி போன்ற "தர்க்கரீதியான முரண்பாடுகள்" இருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
சிறப்புத் தீவிர திருத்தத்தின் கீழ் வாக்காளர் தகுதி குறித்து தேர்தல் ஆணையம் எடுத்த முடிவுகளுக்கு எதிரான ஆட்சேபனைகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் 19 தீர்ப்பாயங்களை நியமித்தது.
கடந்த மாதம் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டதிலிருந்து, 34 லட்சத்திற்கும் அதிகமான மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மேல்முறையீடுகளில் எத்தனை மேல்முறையீடுகள் இறுதியில் தீர்ப்பாயங்களால் விசாரிக்கப்பட்டன என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.
செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்கத் தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால், எத்தனை வழக்குகள் தீர்க்கப்பட்டன என்பது குறித்த புள்ளிவிவரங்கள் தன்னிடம் இல்லை என்று கூறினார்.
ஆனால் 1,607 பேர் சேர்க்கப்பட்டிருப்பது மற்றும் 14 பேர் நீக்கப்பட்டிருப்பது ஆகிய இரண்டும் சேர்ந்து, மொத்தமுள்ள 34 லட்சம் மேல்முறையீடுகளில் 0.05% க்கும் குறைவாகவே உள்ளன.

பட மூலாதாரம், Samir Jana/Hindustan Times via Getty Images
இந்த எண்கள் வெளிவந்துள்ள நிலையில், தீர்ப்பாய விசாரணைக்குப் பிறகு மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களில் சிலரிடையே கூட குழப்பம் நிலவுகிறது.
முர்ஷிதாபாத் மாவட்டத்தின் துலியன் நகராட்சித் தலைவரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான இன்ஜமுல் இஸ்லாம், முதல் துணைப் பட்டியலில் சேர்க்கப்பட்ட 139 வாக்காளர்களில் ஒருவர்.
கடந்த வாரம் அவர் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழிடம் கூறுகையில், தனது பெயர் சேர்க்கப்பட்டிருந்தாலும், பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட தனது இரு சகோதரர்களின் பெயர்கள் இன்னும் சரிசெய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
முர்ஷிதாபாத்தின் சம்செர்கஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்காளரான இன்ஜமுல் இருந்த தொகுதியில்தான் 74,775 பெயர்கள் நீக்கப்பட்டன. இது அனைத்து தொகுதிகளிலும் அதிகபட்சமாக நீக்கப்பட்ட எண்ணிக்கையாகும்.
செவ்வாய்க்கிழமை அன்று இன்ஜமுல் பிபிசி வங்க சேவையிடம் பேசுகையில், தான் முதற்கட்டத் தேர்தலில் வாக்களித்ததாகக் கூறினார், ஆனால் வேறு எதுவும் சொல்ல மறுத்துவிட்டார்.
"நான் மே 4-ஆம் தேதிக்குப் பிறகு (முடிவுகள் வெளியாகும் நாள்) பேசுவேன்" என்று அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்க சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பான தரவுகளை ஆய்வு செய்து வரும் சபர் இன்ஸ்டிடியூட் அமைப்பின் தலைமை ஆய்வாளர் சபீர் அகமது, பிபிசி வங்க சேவையிடம், பெயர்கள் நீக்கப்பட்ட வாக்காளர்களிடமிருந்து ஒவ்வொரு நாளும் 150 முதல் 200 தொலைபேசி அழைப்புகள் தங்களுக்கு வருவதாகத் தெரிவித்தார்.
வாக்காளர்கள் மேல்முறையீடு செய்ய உதவுவதற்காக சபர் இன்ஸ்டிடியூட் ஒரு இலவச சட்ட உதவி மையத்தையும் அமைத்துள்ளது.
"தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யும் செயல்முறை குறித்த தெளிவு பெரும்பாலான மக்களிடம் இல்லை" என்று அகமது கூறினார்.
மேலும், மேல்முறையீடு செய்பவர்கள் தங்கள் குறைகளை விவரித்து, தகுதி ஆவணங்களின் விவரங்களை 1,000 வார்த்தைகளுக்குள் குறிப்பிட வேண்டும். இது பலருக்குக் கடினமான காரியமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி ஆய்வுகள் துறை ஆசிரியரும், அரசியல் கட்டுரையாளருமான அடில் ஹொசைன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சில உறுப்பினர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பதையும், மற்றவர்கள் தொடர்ந்து வாக்காளர்களாக இருப்பதையும் பல இடங்களில் தான் பார்த்ததாகத் தெரிவித்தார்.
உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தின் வாக்காளரான ஹொசைன், முதற்கட்டத் தேர்தலில் வாக்களிக்கத் தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். அப்போது குறைந்தபட்சம் 13 பேர் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய தான் தனிப்பட்ட முறையில் உதவியதாக ஹொசைன்.
"இவர்கள் ஏழைகள் மற்றும் இதுபோன்ற மேல்முறையீடுகளைத் தாக்கல் செய்வதற்கான எழுத்தறிவு இல்லாதவர்கள், மேலும் பெரும்பாலான சட்ட உதவி மையங்கள் நகர்ப்புறங்களில் தான் அமைந்துள்ளன" என்று அவர் கூறினார்.
கடைசி நேரத்தில் வெளியிடப்பட்ட துணைப் பட்டியல் குறித்து ஹொசைன் கூறுகையில், பட்டியலில் மீண்டும் சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு, வாக்குச்சாவடி நிலை அலுவலர் தகவல் தெரிவிக்கவில்லை என்றால், அந்த விவரம் அவர்களுக்குத் தெரியாமலே போக வாய்ப்புள்ளது என்றார்.
மேலும், "முதற்கட்ட வாக்குப்பதிவின் போது இதுபோன்ற சம்பவங்களை நான் பார்த்தேன்" என்றும் அவர் கூறினார்.
கொல்கத்தாவின் பிரசிடென்சி பல்கலைக்கழக அரசியல் அறிவியல் பேராசிரியர் ஜாத் மஹ்மூத், தீர்ப்பாயங்கள் வழக்குகளைத் மெதுவாக தீர்க்கும் முறை, சிறப்புத் தீவிர திருத்த செயல்முறை அவசர அவசரமாகச் செய்யப்பட்டதை நிரூபிக்கிறது என்றும், இதன் மூலம் உண்மையான வாக்காளர்கள் பெரும் பகுதியினர் தங்கள் உரிமையை இழந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
"இந்த நடவடிக்கையின் நோக்கம் தூய்மையானது என்றாலும், இதன் பிரமாண்டமும், இது போன்ற ஒரு பணிக்குத் தேவைப்படும் ஆவணச் சரிபார்ப்பின் அளவு ஆகியவற்றையும் கருத்தில் கொள்ளும்போது, இத்தகைய ஒரு காரியத்திற்கு அதிக கால அவகாசம் அவசியம்" என்று மஹ்மூத் கூறினார்.

பட மூலாதாரம், ANI
வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது குறித்த அதிருப்தி
மேற்கு வங்கத்தில் சிறப்புத் தீவிர திருத்த செயல்முறை தொடர்பாகத் தீர்ப்பாயங்கள் செயல்படும் விதம் தற்போதைய புதிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் "தர்க்கரீதியான முரண்பாடுகள்" என்ற வகையை அறிமுகப்படுத்தி, மில்லியன் கணக்கான வாக்காளர்களை "விசாரணைக்கு உட்பட்டவர்கள்" எனப் பட்டியலிட்டது முதலே இந்த சர்ச்சை நீடித்து வருகிறது.
இந்த தர்க்கரீதியான முரண்பாடுகள் என்ற வகை, சிறப்புத் தீவிர திருத்தம் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆரம்பக்கட்ட உத்தரவுகளில் இடம்பெறவில்லை. மேலும் மேற்கு வங்கத்திற்கு முன்பு வேறு எந்த மாநிலத்திலும் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆரம்ப வழிகாட்டுதல்களின்படி, ஒரு வாக்காளர் தன்னை அல்லது தனது பெற்றோரை, இதற்கு முன்னதாக 2002-இல் இந்தத் திருத்தம் செய்யப்பட்டபோது இருந்த வாக்காளர் பட்டியலுடன் வெற்றிகரமாக இணைத்துக் காட்டினால் அவர் தகுதியுள்ளவராகக் கருதப்படுவார்.
இருப்பினும், தேர்தல் ஆணையம் இந்த புதிய வகையை அறிமுகப்படுத்திய பிறகு, 60 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களுக்குத் தங்களது தகுதியை நிரூபிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த 60 லட்சம் பேரில், 27 லட்சத்திற்கும் அதிகமானோர் இறுதியில் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர்.
ஆச்சரியமளிக்கும் விதமாக, வாக்குச்சாவடிகளில் தலைமை அலுவலர்களாக நியமிக்கப்பட்டவர்களில் குறைந்தபட்சம் 65 பேர், நீக்கப்பட்ட இந்த 27 லட்சம் பேரில் அடங்குவர்.
தேர்தல் ஆணையம் தனது கையேட்டில், ஒரு வாக்குச்சாவடியில் உள்ள "மிக முக்கியமான அதிகாரி" என்று தலைமை அலுவலரை விவரிக்கிறது. இவர்களது நியமனங்கள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் கீழ் வழங்கப்படுகின்றன.
இருப்பினும், முர்ஷிதாபாத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் அக்தர் அலி போன்ற பலர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். தான் முதற்கட்டத் தேர்தலில் தலைமை அலுவலராகப் பணியாற்றியதாகவும், கடந்த காலங்களில் நான்கு தேர்தல்களில் பணியாற்றியிருப்பதாகவும் அலி தெரிவித்தார்.
தனது தந்தையின் பெயர் 2002 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த போதிலும், "தர்க்கரீதியான முரண்பாடு" எனக் கூறி தேர்தல் ஆணையத்திடமிருந்து நோட்டீஸ் வந்ததாக அலி கூறினார்.
தனது தகுதியை நிரூபிக்கத் தந்தையின் வாக்காளர் அட்டை மற்றும் 1951-ஆம் ஆண்டு காலத்து நில ஆவணங்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்ததாக அலி தெரிவித்தார். இருப்பினும், ஆவணங்களில் அவரது தந்தையின் பெயரில் முரண்பாடு இருப்பதாகக் கூறி அவரது பெயர் நீக்கப்பட்டது.
" இந்தியக் குடிமகனாக இருந்தும், எனது வாக்குரிமை பறிக்கப்பட்டது எனக்கு வேதனை அளிக்கிறது" என்று கூறிய அவர், தான் ஒரு "உண்மையான வாக்காளர்" என்ற போதிலும் பெயர் நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
முர்ஷிதாபாத்தில் தலைமை அலுவலராக இருக்கும் முகமது மொசெலுதீன் சுவானியும் இதே போன்ற துயரமான அனுபவத்தை விவரித்தார்.
சுவானி உட்பட ஆறு பேர் அவரது தந்தையின் பிள்ளைகளாகப் பட்டியலில் இணைக்கப்பட்டதால், அவரது பெயர் "விசாரணைக்கு"உட்பட்ட பிரிவில் வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின்படி, ஒரு நபருக்கு ஆறு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பிள்ளைகளாகப் பட்டியலிடப்பட்டால் அது "தர்க்கரீதியான முரண்பாடு" எனக் கருதப்படுகிறது.
தனது தகுதியை நிரூபிக்கப் பத்தாம் வகுப்பு சான்றிதழ் உள்ளிட்ட பல ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக சுவானி கூறினார். இருப்பினும், அவருடைய ஆறு உடன்பிறப்புகளும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
"இது ஒரு விசித்திரமான மற்றும் வேதனையான சூழல்," என்று கூறிய அவர், "எனது வாக்குரிமை எனக்கு எப்போது மீண்டும் கிடைக்கும் என்று தெரியவில்லை"என்றும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Asian News International
சம்செர்கஞ்ச் தொகுதியின் வாக்காளர்களான அலி மற்றும் சுவானி ஆகிய இருவருமே தங்கள் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு எதிராகத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு இன்னும் பதில் வரவில்லை.
இந்தத் தேர்தல் தலைமை அலுவலர்கள் தங்கள் வாக்குரிமையை மீண்டும் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டதுடன், மனுதாரர்களைத் தீர்ப்பாயங்களில் தங்கள் மேல்முறையீடுகளைத் தொடருமாறு கேட்டுக்கொண்டது.
88 வயதான சுப்ரபுத்த சென் விஷயத்தில், உச்ச நீதிமன்றத்தின் தலையீடு கூட கிட்டத்தட்ட போதுமானதாக அமையவில்லை.
இந்திய அரசியலமைப்பின் மூலப் பிரதியை வடிவமைத்து வரைந்த கலைஞரான நந்தலால் போஸின் பேரன்தான் இந்த சுப்ரபுத்த சென்.
அவரது பெயரும் அவரது மனைவியின் பெயரும் தேர்தல் ஆணையத்தால் "பரிசீலனைக்கு உட்பட்ட" பிரிவில் வைக்கப்பட்டு, தகுதியை நிரூபிக்குமாறு கூறப்பட்டது. பெயர் நீக்கப்பட்டதற்கான காரணம் தனக்குத் தெரியாது என்று சென் பிபிசி வங்க சேவையிடம் கூறினார்.
மேலும், தனது பாஸ்போர்ட், நில ஆவணங்கள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றைச் சமர்ப்பித்த போதிலும், அவரது பெயர் இறுதியில் நீக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டதை அடுத்து, மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்திற்கு இவ்வழக்கிற்கு முன்னுரிமை அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
தீர்ப்பாயம் சென் மற்றும் அவரது மனைவியின் பெயர்களை அங்கீகரித்தது, ஆனால் ஏப்ரல் 23 காலை போல்புர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு அவர் வாக்களிக்கச் சென்றபோது, வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை.
"மாவட்ட நிர்வாகத்தின் எழுத்துப்பூர்வ அனுமதி இல்லாமல் எங்களை வாக்களிக்க அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்டது" என்று அவர் தெரிவித்தார்.
"நான் நம்பிக்கையை இழந்துவிட்டேன், ஆனால் என் பிள்ளைகள் நம்பிக்கை இழக்கவில்லை. பின்னர் மாலை 4.30 மணியளவில் நான் வாக்களித்தேன்"என்று சென் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































