'ஊ சொல்றியா மாமா...' உள்பட தேவி ஸ்ரீபிரசாத் - விவேகா கூட்டணியில் பிரபலமான 10 பாடல்கள்

பட மூலாதாரம், VIVEKA
- எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
விஜய் நடித்த 'பத்ரி' படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமான தேவிஸ்ரீபிரசாத், தமிழ், தெலுங்கு, இந்தியில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதோடு பாடகராகவும் பாடலாசிரியராகவும் அவர் இருந்துள்ளார்.
சென்னையில் மாண்டலின் ஸ்ரீநிவாசன் இசைப்பள்ளியில் தேவி ஶ்ரீ பிரசாத் இசை மற்றும் பாட்டு கற்றார். சினிமா, இசைக்குடும்பத்தில் வளர்ந்ததால் சின்ன வயதிலேயே அவருக்குள் இசையமைப்பாளராகும் ஆசையும் சேர்ந்தே வளர்ந்தது.
1997-ஆம் ஆண்டு வெளியான டான்ஸ் பார்ட்டி என்ற ஆல்பத்துக்கு 17 வயதில் இசையமைத்தார். 1999-ஆம் ஆண்டு வந்த தேவி என்ற படத்தின் மூலம் சினிமாவில் இசையமைப்பாளரானார். 2001-ஆம் ஆண்டு வந்த ஆனந்தம் என்ற தெலுங்கு படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

பட மூலாதாரம், X/ThisisDSP
தேவி பெயர் காரணம்
தமிழில் தேவி ஸ்ரீ பிரசாத் தசாவதாரம், சிங்கம், சம்திங் சம்திங், வில்லு, கங்குவா, மழை, திருப்பாச்சி, சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், குட்டி, கந்தசாமி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தென்னிந்தியாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் அவர் இணைந்து பணியாற்றியுள்ளார். புஷ்பா படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ளார். இப்போது எல்லம்மா என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வரும் தேவி ஶ்ரீ பிரசாத்துக்கு இன்று பிறந்தநாள்
இளையரராஜாவின் ரசிகர்

பட மூலாதாரம், X/ThisisDSP
இளையராஜாவின் தீவிர ரசிகர் தேவிஸ்ரீபிரசாத். சென்னையில் உள்ள அவரது ஸ்டூடியோவி்ல் இளையராஜாவின் புகைப்படத்தை பெரிதாக மாட்டி வைத்துள்ளார். ஊடக கலந்துரையாடல்களில் இளையராஜாவின் இசை பற்றி வியந்து பேசியுள்ளார்.
புஷ்பா படத்திற்காக தனக்கு தேசிய விருது கிடைத்ததும் இளையராஜாவின் ஸ்டூடியோவிற்குச் சென்று அவரிடம் விருதைக் கொடுத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.
தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்கள் தனி பாணியில் துள்ளல் இசை சற்று தூக்கலாக இருக்கும். தமிழில் அவருடன் அதிக படங்களில் பாடலாசிரியராக பணியாற்றிய விவேகாவிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். அவர்கள் இருவர் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள், அதன் பின்னணி பற்றி அவர் பகிர்ந்த விஷயங்கள் இங்கே தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Viveka
1) கோழி வெடக்கோழி... (சம்திங் சம்திங்)
எனக்கும், தேவி ஸ்ரீ பிரசாத்துக்குமான நட்பு, பந்தம், தொழில்முறை கூட்டணி 'சம்திங் சம்திங்' படத்தில் இருந்து தொடங்கியது. 2006-ஆம் ஆண்டு அந்தப் படத்தை இயக்கிய மோகன் ராஜா, அவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அன்றுதான் அவரை முதன்முதலாகச் சந்தித்தேன்.
சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் முதல் நாள் இந்தப் பாடலை எழுதி, அங்கேயே ரிக்கார்டிங் செய்து, மறுநாள் காலை அதே ஸ்டூடியோவில் செட் போட்டு படமாக்கப்பட்ட பாடல் அது. .
'ஹே… கோழி வெட கோழி…குழு : கொக்கோ கோ கோ…: என்ன கொத்தி திங்குற படு பாவி' என்று பாடல் வரிகளை எழுதிக்கொடுத்தேன். அவருக்கு மிகவும் பிடித்துப்போனது. நவின், பிரியா பாடினார்கள். ஜெயம்ரவி, திரிஷா நடனம் ஆடிய அந்தப் பாடல் ஹிட்டானது.
முதல் பாடலே வெற்றி பெற, எங்கள் கூட்டணி 20 ஆண்டுகளாக தொடர்கிறது. இதுவரை அவரது இசையில் 100 பாடல்கள் வரை எழுதியிருக்கிறேன். எனக்குப் பிடித்த பட்டியலில் முதல் பாடலை சேர்க்காவிட்டால் எப்படி?
2) டாடி மம்மி வீட்டில் இல்லை... (வில்லு)
முதலில் இந்தப் பாடலின் பல்லவி இயக்குநரான பிரபுதேவாவுக்கு பிடிக்கவில்லை. அவருக்காக வேறு பல்லவி எழுதினேன். ஆனால், தேவி ஸ்ரீ பிரசாத்தோ இந்த பல்லவி நன்றாக பொருந்தி வரும் என்று கூறினார். அரைகுறை மனதுடன் பிரபுதேவா சரி என்று சொல்ல, இந்தப் பாடல் பதிவானது.
வில்லு படத்தில் இன்றைய முதலமைச்சர் விஜய் ஆடிய இந்தப் பாடல் பெரிய ஹிட்டானது. பிற்காலத்தில் விஜயை சில நிகழ்வுகளில் சந்தித்தபோது கூட இந்தப் பாடல் பற்றி குறிப்பிட்டு, 'என் மகன் ஜேசன் சஞ்சய் வீட்டில் இந்தப் பாடலுக்கு ஆடுகிறான்' என்றார். பட வெற்றி விழாவை முன்னிட்டு அவரைப் பலமுறை சந்தித்து இருக்கிறேன். அப்போது இந்தப் பாடலை குறிப்பிட்டது மறக்க முடியாத தருணம்.
இந்தப் பாடலை பாடியவர் நடிகை மம்தா மோகன்தாஸ். இந்தியில் கூட இந்த வரி வந்தது. இந்தியளவில் பெரிய ஹிட்டானது.

பட மூலாதாரம், Viveka
3) எக்ஸ்க்யூஸ் மீ கந்தசாமி... (கந்தசாமி)
சுசி கணேசன் இயக்கத்தில் விக்ரம், ஸ்ரேயா நடித்த இந்தப் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுத வாய்ப்பு கொடுத்தார் தேவி ஸ்ரீ பிரசாத்.
'எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர். கந்தசாமி…' எனத் தொடங்கும் இந்தப் பாடல் காதல் பாடலாக இருந்தாலும், இதில் நிறைய உலக விஷயங்களை எழுதியிருந்தேன். கடவுள், ராமசாமி, ஹிட்லர் பேரன், லிங்கன் பேத்தி, திருவள்ளுவர் கிராண்ட்பா, காஷ்மீர் நான் நீ பாகிஸ்தான்… தீராது டிஷ்யூம்தான் என எழுதியதற்கு அழகாக ட்யூன் கொடுத்தார்.
விக்ரம், சுசித்ரா இணைந்து பாடியிருந்தனர். நிறைய பேர் வரிகளைப் பாராட்டினார்கள். இந்தப் படத்தில் வரும் கூழு, சுண்டல் என்ற பாடலை நானும் இணைந்து பாடினேன். இந்தப் படத்தில் இடம் பெற்ற மியாவ், மியாவ் பூனை, என் பேரு மீனாகுமாரி பாடல்களும் ஹிட்டாக, எனக்கு நிறைய படங்கள் வர ஆரம்பித்தன
4) ரத கஜ துரக பதாதிகள்... (வீரம்)
சிவா இயக்கத்தில் அஜித் நடித்த 'வீரம்' பட சண்டைக்காட்சியில் இடம் பெற்ற பாடல். 'ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும் அதகளம் புரிந்திடும் வீரம் இவன் மத புஜம் இரண்டும் மலையென எழுந்திட செருக்களம் சிதறிடும் வீரம்' என இந்த பாடல் தொடங்கும்.
தமிழில் மணிபிரவாள நடை என்ற வழக்கம் உண்டு. சமஸ்கிருதமும், தமிழும் சேர்ந்தது அந்த நடை. அதைப் புரிந்துகொண்டு, அதற்காக சிறப்பாக இசையமைத்தார். அஜித், அவர் மனைவி ஷாலினி ஆகியோருக்கு பிடித்த பாட்டு, படம் ரிலீசுக்கு முன்பே என்னிடம் நேரில் இந்தப் பாடல் குறித்து பாராட்டியிருக்கிறார் அஜித்.
அந்தப் பாடலில் அவரின் குரல் சில இடங்களில் வரும். அப்போது இந்தப் பாடலைத் தான் ரிங்டோனாக வைத்ததாக அஜித் என்னிடம் கூறினார். ரயில்வே ஸ்டேஷன் பின்னணியில் சண்டைக்காட்சியுடன் வரும் இந்தப் பாடலை அவரின் ரசிகர்களும் கொண்டாடினார்கள்.

பட மூலாதாரம், SonyMusicSouthVevo
5) பீல் மை லவ்... (குட்டி)
'ஃபீல் மை லவ்…: என் காதல் சரியோ தவறோ…' என்று தொடங்கும் இந்தப் பாடல், காதலை ஏற்க வேண்டாம், அதை புரிந்துகொண்டால் போதும் என்று சொல்லாமல் சொல்லும். கேகே பாடினார். காதல் சொல்வதை ஒரு ஆண் பார்வையில் வித்தியாசமாக சொன்ன பாடல்.
அதற்கான உணர்வைக் கொடுத்திருந்தார் தேவி ஸ்ரீ பிரசாத். இதே படத்தில் இடம் பெற்ற கண்ணும் ரெண்டும் ரங்கராட்டினம் பாடலும் எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. ரயிலில் தனுஷ், மேக்னா நாயுடு ஆடுவார்கள்.
6) காதல் வந்தாலே... (சிங்கம்)
ஹரி இயக்கத்தில் உருவான சிங்கம் படத்தில் ஹிட்டான பாடல் 'காதல் வந்தாலே காலு ரெண்டும் தண்ணாலே…காத்தா சுத்துதே உந்தன் பின்னாலே.'
இந்த வெற்றியால் சிங்கம் 2, சிங்கம் 3 பாடல்களும் நான் எழுதினேன். அப்படிப்பட்ட ஹிட் பாடல்.
சூர்யா மற்றும் அனுஷ்காவின் நடனம் மற்றும் தேவியின் துள்ளல் இசைக்கு பல குழந்தைகள், இளைஞர்கள், சூர்யா ரசிகர்களும் இணைந்து ஆடினார்கள்.
7) ஊ சொல்றிய மாமா... (புஷ்பா)
தேவி ஸ்ரீ பிரசாத் இசைமைப்பில் சூப்பர் ஹிட்டான புஷ்பா, புஷ்பா -2 ஆகிய படங்களின் தமிழ் பதிப்புகளில் அனைத்து பாடல்களையும் நான்தான் எழுதினேன். அதில் 'ஊ சொல்றீயா மாமா...' பாடல் பெற்ற வெற்றியை பற்றி சொல்லவே வேண்டாம். பாடல் ட்யூன், இசை, ஆண்ட்ரியாவின் குரல் இந்தப் பாடலை இந்தியளவில் மட்டுமல்ல, உலக அளவி்ல கொண்டு சென்றது.
எங்கள் கூட்டணியில் கடந்த 10 ஆண்டுகளில் வந்ததிலே சிறந்த பாடல் என்கிற பெயரைப் பெற்றது. ஆம்புள புத்தி என கான்செப்ட் அவருக்கு பிடித்துப் போனது. இந்தப் பாடலை கேட்ட இயக்குநர் சுகுமார், ஹீரோ அல்லு அர்ஜூன் இருவரும் என்னைப் பாரட்டினார்கள்.

பட மூலாதாரம், Aditya Music Tamil
8) கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு…( தி வாரியர்)
தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான பாடல். பொதுவாக தேவி ஸ்ரீ பிரசாத் பாடல் கம்போசிங் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது ஸ்டூடியோவி்ல் தான் அதிகம் நடக்கும்.
புல்லட் பின்னணியில் எழுதப்பட்ட பாடல் இது. லிங்குசாமி இயக்க ராம்பொத்தினேனி, கீர்த்திஷெட்டி ஆடினார்கள். அவர்களுடன் தியேட்டரே ஆடியது. சிம்பு, ஹரிப்ரிியா பாடினார்கள்.
9) பார்வை கற்பூற தீபமா? ஸ்ரீவள்ளி... (புஷ்பா)
தேவி ஸ்ரீ பிரசாத்திடம் தமிழ் இலக்கியம், சிலப்பதிகாரம் என எல்லாற்றையும் பேசலாம். ஆர்வமாகக் கேட்பார். அப்போது தமிழில் உள்ள சொற்பொருள் பின்வரு நிலை அணி பற்றி சொல்ல, அந்த இலக்கணத்தில் உருவான பாடல் இது.
பார்வை, பார்க்குற என்ற வரிகள் மீண்டும் மீண்டும் வரும். தேவி இசையில் சித்ஸ்ரீராம் உருகி பாடியிருப்பார். செய்யுளில் முன்னர் வந்த சொல் அதே பொருளில் பல முறை வருவது இந்த அணியின் சிறப்பு
10) மன்னிப்பு பாடல்... (கங்குவா)
சூர்யா நடித்த கங்குவா படத்தில் இடம் பெற்ற ஆழமான, உணர்வுப்பூர்வமான பாடல். நம் மனித இனத்துக்கு இப்போதைய தேவையை சொல்லும் வரிகளில், அழுத்தமாக பாடலை கொடுத்திருந்தார்.
'மன்னிப்பு இல்லாமலே மண் மீதிலே ஏதும் இல்லை .. மன்னித்த பின்னாலே நெஞ்சில் என்றும் பாரமில்லை' என்ற வரிகளை, அந்த ட்யூனை கேட்கும்போது மனது இலகுவாகும். ரகு திக்சித் பாடியிருந்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































