5வது முறையாகத் தோற்ற கொல்கத்தா ஆட்டத்தை தவறவிட்டது எங்கே?

கில் அரைசதத்தின் உதவியோடு மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது குஜராத் டைட்டன்ஸ்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கில் அரைசதத்தின் உதவியோடு மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது குஜராத் டைட்டன்ஸ் (கோப்புப் படம்)
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரின் 25வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது.

இந்த சீசன் ஆறு போட்டிகளில் விளையாடியிருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முதல் வெற்றிக்கான தேடல் இன்னும் தொடர்கிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் அஜிங்க்யா ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேமரூன் கிரீன் அதிகபட்சமாக 79 ரன்கள் எடுத்தார். ரபாடா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ், 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை சேஸ் செய்தது. கேப்டன் ஷுப்மன் கில் அதிகபட்சமாக 86 ரன்கள் எடுத்தார்.

பவர்பிளேவில் தடுமாறிய கேகேஆர் பேட்டர்கள்

பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாறிக்கொண்டிருக்கும் கொல்கத்தா அணிக்கு இந்தப் போட்டியிலும் தொடக்கம் கடினமாகவே இருந்தது. தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார் அந்த அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே.

ரபாடா வீசிய அடுத்த ஓவரில் அங்க்ரிஷ் ரகுவன்ஷியும் வெளியேறினார். அவர் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்த சீசன் தன்னுடைய முதல் போட்டியில் களமிறங்கிய டிம் செய்ஃபர்ட் 19 ரன்கள் எடுத்து ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனால் 4 ஓவர்கள் முடிவில் 32 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்தது கேகேஆர்.

தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால், நான்காவது விக்கெட்டுக்கு இணைந்த ராவ்மன் பவெல் - கேமரூன் கிரீன் கூட்டணி நிதானமாக ஆடியது. ஐந்தாவது மற்றும் ஆறாவது ஓவர்கள் இரண்டிலும் சேர்த்தே 5 ரன்கள் மட்டுமே கிடைக்க, பவர்பிளேவை 37/3 என முடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார் ரபாடா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார் ரபாடா

கேமரூன் கிரீன் அரைசதம்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பவெல் - கிரீன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்தது. ஓரளவு செட்டில் ஆனதும் இருவரும் மெல்ல அதிரடியைக் கையில் எடுத்தார்கள். இந்த ஜோடி 7 ஓவர்களில் 55 ரன்கள் எடுத்தது. 20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த ராவ்மன் பவெல் அஷோக் ஷர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பவெல் அவுட் ஆன அடுத்த ஓவர் தன் அதிரடியை அதிகப்படுத்தினார் கிரீன். ரஷீத் கான் பந்துவீச்சில் அவர் அடுத்தடுத்து சிக்ஸரும், பவுண்டரியும் அடித்தார். அஷோக் ஷர்மா வீசிய அதற்கடுத்த ஓவரில் அவர் 2 சிக்ஸர்கள் விளாசினார். கொல்கத்தா அணிக்காக பெரும் தொகைக்கு வாங்கப்பட்ட கிரீன் 34 பந்துகளில் அந்த அணிக்காக தன் முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார்.

அதன்பிறகும் அவருடைய அதிரடி குறையவில்லை. ரஷீத் கான் வீசிய இன்னிங்ஸின் 14வது ஓவரில் அவர் ஒரு சிக்ஸரும், 2 பவுண்டரிகளும் விளாசினார். 14 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 139/4 என்ற நிலையில் இருந்தது.

ஆனால், அடுத்த 4 ஓவர்களில் கிரீன் வெறும் 4 பந்துகள் மட்டுமே சந்தித்தார். அனுகூல் ராய், ரமன்தீப் சிங், நரைன் போன்றவர்கள் வருவது, பந்துகளைச் சந்திப்பது, செல்வது என்றிருக்க, நன்றாக விளையாடிக்கொண்டிருந்த கிரீனால் அதைத் தொடர முடியவில்லை.

கடைசி 2 ஓவர்களில் அவர் ஒருசில பந்துகளை சந்தித்தாலும் பெரிய ஸ்கோர் எடுக்க முடியவில்லை. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 79 ரன்கள் எடுத்த கிரீன் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார்.

டைட்டன்ஸ் அணிக்கு அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...
55 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார் கேமரூன் கிரீன்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 55 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார் கேமரூன் கிரீன்

தொடரும் வெற்றிக்கான ஏக்கம்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன் இருவரும் நல்ல தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தனர். நன்கு அடித்து ஆடிய இந்த ஜோடி 5.1 ஓவர்களில் 57 ரன்கள் எடுத்தது. 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த சாய் சுதர்ஷன் சுனில் நரைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஜாஸ் பட்லர் வேகமாகவே தன் இன்னிங்ஸைத் தொடங்கினார். முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த அவர், நரைன் வீசிய அந்த ஓவரில் மேலும் ஒரு சிக்ஸரும் பவுண்டரியும் விளாசினார். அதனால் பவர்பிளே முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ்.

ஸ்பின்னர்களின் பந்துவீச்சில் சிறப்பாக ஆடிய பட்லர், கார்த்திக் தியாகியின் வேகத்தில் ஆட்டமிழந்தார். அவர் 15 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார்.

அதன்பிறகு கொல்கத்தா பௌலர்கள் ஓரளவு சிக்கனமாகப் பந்துவீசினார்கள். அதனால் குஜராத் அணியின் ரன்ரேட் மெல்ல குறையத் தொடங்கியது.

ஆனால், நிலைத்து நின்று ஆடிய கில் எந்த வித சிக்கலும் வராமல் பார்த்துக்கொண்டார்.

27 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 50 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டீப் தேர்ட் மேன் திசையில் கேமரூன் கிரீன் பிடித்த அபார கேட்சால் வெளியேறினார் அவர். தன் இன்னிங்ஸில் 8 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடித்தார் கில்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கிளென் ஃபிலிப்ஸ் விக்கெட்டை வீழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தினார் கொல்கத்தாவின் ரமன்தீப் சிங். இருந்தாலும் 2 பந்துகள் மீதம் வைத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றியைப் பதிவு செய்தது.

இது குஜராத் அணி இந்த சீசனில் பெற்றிருக்கும் மூன்றாவது வெற்றி. இதன்மூலம் அந்த அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.

6 போட்டியில் விளையாடியிருக்கும் கொல்கத்தா ஐந்தாவது தோல்வியை சந்தித்தது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இன்னும் இந்த சீசனில் ஒரு வெற்றி கூடப் பெறாமல் கடைசி இடத்தில் இருக்கிறது அந்த அணி.

பிரச்னைகளை பேசுவோம்
படக்குறிப்பு, உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு